வட-கிழக்கு இணைப்பை எதிர்க்கவில்லை. ஆனால் … – பிள்ளையான்
வட-கிழக்கு மாகாண இணைப்பை நாம் எதிர்க்கவில்லை. ஆனால் வட மாகாணத்திற்கான சம அந்தஸ்த்தும், உரிமைகளும் கிழக்கு மாகாணத்திற்கும் வழங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும் என தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் முதனிலைப் பொறுப்பாளர் பிள்ளையான் தெரிவித்தார்.
வட-கிழக்கு மாகாண இணைப்பு தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்னவென தமிழ் அலை முதனிலைப் பொறுப்பாளர் பிள்ளையானை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
தமிழ் பேசும் மக்களின் நியாயமான உரிமைகளையும், இருப்பையும் சிங்கள அரசுகள் மறுத்த வேளையில் 1987ம் ஆண்டு இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியினால் இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் மூலம் வட-கிழக்கு மாகாண இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. இது தமிழ் பேசும் மக்களுக்கான அரிய வரப்பிரசாதமாகும். இன்று வரை ஆட்சிக்கு வந்த எந்த அரசாங்கத்தினாலும் வட-கிழக்கு இணைப்பை பிரிக்க முடியாத அளவுக்கு வட-கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் தாயகம் என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே தமிழ் பேசும் மக்களின் தாயகப் பகுதியை பிரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதே சமயம் 22வருட காலம் நடைபெற்ற யுத்தத்தின் பெயரால் கிடைக்கப்பெற்ற அனுகூலங்களிலும், சமாதான காலத்தில் ஏற்பட்ட அபிவிருத்தி, இயல்பு நிலையிலும் கிழக்கு மாகாணம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கிழக்கு மண்ணில் உறுதியான அரசியல் தலைமைத்துவம் தோன்றிவிடக் கூடாது என்பதில் சில மேலாதிக்க சக்திகள் திட்டமிட்டு செயற்பட்டு கிழக்கை அரசியல் சு10னியமாக்கியதையும் மறக்கமுடியாது. போராட்டத்தில் அதிகளவான இழப்புக்களையும், வலியையும் சந்தித்த கிழக்கு மாகாண மக்கள் அனைத்து அடிப்படை விடயங்களிலும் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டமையை ஏற்றுக்கொள்ளமுடியாது.
அதே போன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், சிங்கள மக்கள் ஆகிய மூவினத்தவரும் வாழ்கின்றனர். எனவே இம்மக்களின் அடிப்படை உரிமைகளையும், அரசியல் அபிலாசைகளையும் வட-கிழக்கு இணைப்பு உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான இணைந்த வட-கிழக்கிற்குள் கிழக்கு மாகாணத்திற்கு உரிய அந்தஸ்த்தும், உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும். இதில் எமது தலைமைப்பீடம் தெளிவான வரையறையுடன் செயற்படுகின்றது. இதற்கான தீர்வுகளிலேயே நாம் கூடிய கவனம் செலுத்துவோம் எனவும் பிள்ளையான் தெரிவித்தார்.