குண்டு வீச்சுகளுக்கு நடுவே பதுங்கு குழியில் திருமணம் செய்துகொண்ட இஸ்ரேல் ஜோடி
இஸ்ரேலிய ராணுவத்துக்கும் லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இடையே நடந்துவரும் போரும் சரமாரியான குண்டுவீச்சுகளும் அந்த காதல் ஜோடிக்கு ஒரு பொருட்டே அல்ல. ஆம்… பலத்த குண்டுவீச்சுக்கு நடுவே, பதுங்கு குழியிலேயே திருமணம் செய்துகொண்டது அந்த ஜோடி.
வடக்கு இஸ்ரேலிய நகரமான கிர்யாத் ஷெமோனாவில் மணமகன் ஷலோமி போஸ்கிலா (29), மணமகள் மாயா லுகாஸி (22) ஆகியோரின் திருமணம் 50 அடிக்கு 50 அடி அளவுள்ள பாதாள அறையில் வியாழக்கிழமை நடந்தது. மொத்தம் 75 விருந்தினர்களே அழைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிலும் பாதிப்பேர் நிருபர்கள்.
கடந்த ஒரு வாரமாகவே அந்த ஜோடி பாதுகாப்பு கருதி, அந்தப் பதுங்கு குழியான பாதாள அறையில்தான் வசித்துவந்தனர். இஸ்ரேலிய மதகுருவான நிஸ்ஸிம் மல்கா என்பவர், இஸ்ரேலியப் பாரம்பரியப்படி அத் திருமணத்தை நடத்திவைத்தார். “”25 ஆண்டுகளாக நான் எத்தனையோ திருமணங்களை நடத்திவைத்திருக்கிறேன். ஆனால், இதைப் போன்ற திருமணத்தை இதுவரை நடத்தியதில்லை; பதுங்கு குழியில் திருமணத்தை நடத்திவைத்தது இதுவே முதல் முறை” என்றார் மதகுரு நிஸ்ஸிம்.
இஸ்ரேலிய முறைப்படி, திருமணம் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில் கண்ணாடி டம்ளரை உடைத்தார் மணமகன் போஸ்கிலா. உடனே பாட்டும் ஆட்டமும் கொண்டாட்டமும் அந்த பாதாள அரங்கை நிறைத்தன. வந்திருந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வாழ்த்து மழையில் நனைந்தனர் மணமக்கள்.