இஸ்ரேலிய குண்டுவீச்சால் ஹிஸ்புல்லா தலைவர்களுக்குப் பாதிப்பு இல்லை..
இஸ்ரேலிய விமானப் படையின் குண்டுவீச்சால், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை; அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று அந்த அமைப்பின் தலைவரே டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியில் கூறினார்.
லெபனான் நாட்டின் மீது கண்மூடித்தனமாகக் குண்டுவீசித் தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் விமானப் படை, தெற்கு பேரூத் நகரத்தில் உள்ள ஓர் இடத்தைக் குறிவைத்து 23 டன்கள் வெடிகுண்டுகளை புதன்கிழமை வீசியது. அங்கு பாதாள அறை இருப்பதாகவும் அங்கு, நஸ்ரல்லா உள்பட ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர்கள் பதுங்கி இருப்பதாகவும் இஸ்ரேல் கூறியது.
எனவே, குண்டுவீச்சால் ஹிஸ்புல்லா தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், அந்த இடத்தில் எந்தவித பாதாள அறையும் இல்லை; ஒரு மசூதியின் கட்டுமானப் பணிதான் நடந்துவந்தது என்று ஹிஸ்புல்லா அமைப்பு கூறியிருக்கிறது.
இந் நிலையில், ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஷேக் ஹஸன் நஸ்ரல்லா-வின் பேட்டியை அல்~ஜஸீரா தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதில் அவர் கூறியிருப்பதாவது:
நாங்கள் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய வீரர்கள் இருவரையும், உலகமே எங்களுக்கு எதிராகத் திரண்டு வந்தாலும் விடுவிக்க மாட்டோம். பதிலுக்குப் பதில் கைதிகளை பரிமாறிக்கொள்ள இஸ்ரேல் முன்வந்தால், அது குறித்துப் பேசத் தயாராக இருக்கிறோம். ஹிஸ்புல்லா அமைப்பின் ஆயுத இருப்பில் பாதியை குண்டுவீசி அழித்துவிட்டதாக இஸ்ரேல் கூறியிருப்பதும் தவறானது என்று அந்தப் பேட்டியில் கூறியுள்ளார் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா.