ராணுவ செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது ரஷியா
ராணுவப் பயன்பாட்டுக்கான செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தியது ரஷியா. வடக்கு ரஷியாவில் பிளீசெட்க் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ராக்கெட் மூலம் இந்த செயற்கைக் கோள் வெள்ளிக்கிழமை விண்ணில் செலுத்தப்பட்டது என்று ரஷிய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் அலெக்ஸி ஜோலோடுகின் தெரிவித்தார்.
புவி வட்டச் சுற்றுப் பாதைக்கு வெளியே வளிமண்டலத்தில் இந்த ராக்கெட் சுற்றி வரும். இதை ரஷிய விண்வெளி ஆராய்ச்சி நிலைய தரைக்கட்டுப்பாட்டு நிலையம் கண்காணித்து வரும் எனவும் ஜோலோடுகின் தெரிவித்தார்.
புவி வட்டப் பாதையில் ரஷியாவின் 94 செயற்கைக் கோள்கள் சுற்றி வருகின்றன. பழைய செயற்கைக் கோள்களுக்குப் பதிலாக 7 முதல் 10 ஆண்டுகள் வரை செயல்படும் புதிய செயற்கைக் கோள்களைச் செலுத்தும் பணி அடுத்த 2 ஆண்டுகளில் பூர்த்தியாகும் என்று விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் கமாண்டர் கர்னல் ஜெனரல் விளாதிமீர் போபோவ்கின் தெரிவித்தார்.
இதற்கிடையில், வானிலை ஆராய்ச்சிக்காக ரஷியா வியாழக்கிழமை செலுத்தவிருத்த செயற்கைக் கோள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது.