மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி வீடு மீது தாக்குதல்
மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தியின் வீடு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நகரில் உள்ள ஜெயானந்தமூர்த்தியின் வீடு மீது வெள்ளிக்கிழமை இரவு 9.15 மணியளவில் இரு ஆர்.பி.ஜி. தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் ஜெயானந்தமூர்த்தி, அவரது மனைவி மற்றும் இரு குழந்தைகள் உயிர்தப்பியுள்ளனர். ஜெயானந்தமூர்த்தியின் வீடு பலத்த சேதமடைந்துள்ளது. ஜெயானந்தமூர்த்தியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா காவல்துறையைச் சேர்ந்தவர் படுகாயமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு பூம்புகார் பகுதியில் உள்ள கண்ணகி அம்மன் வீதியில் மட்டக்களப்பு பேரூந்து நிலையத்துக்குப் பின்புறம் ஜெயானந்தமூர்த்தியின் வீடு உள்ளது.
இரு ஆர்.பி.ஜி. எறிகணைகளும்; ஜெயானந்தமூர்த்தி வீட்டு படுக்கையறைக்குள் விழுந்துள்ளன. அந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்த ஜெயானந்தமூர்த்தியின் மனைவி மற்றும் இரு குழந்தைகளும் உயிர்தப்பியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தின்போது ஜெயானந்தமூர்த்தியும் வீட்டில் இருந்துள்ளார்.
இத்தாக்குதல் குறித்து இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.