மனைவியை ‘விற்ற’ கணவன்!
பஞ்சாயத்தார் முன்னிலையில் ரூ.17,000 பெற்றுக்கொண்டு மனைவியை காதலனுக்கு தாரை வார்த்து கொடுத்தார் கணவன். இந்திய தமிழ்நாடு நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மருதூரைச் சேர்ந்த செல்வம் (35), இவருடைய மனைவி மஞ்சுளா (28). இவர்கள் இருவருக்கும் கடந்த 5 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந் நிலையில் அதே பகுதியை சேர்ந்த முருகானந்தம் (34) என்பவருக்கும் மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து வாழ முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியூருக்குச் சென்று விட்டனர். இந் நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இருவரும் மருதூருக்குத் திரும்பினார்கள்.
இதை அறிந்த செல்வம், வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார். இதனால் முருகானந்தத்தையும், மஞ்சுளாவையும் காவல் நிலையத்திற்கு ஊர் முக்கிய பிரமுகர்களுடன் வரவழைக்கப்பட்டனர். அப்போது மஞ்சுளா நான் காதலனுடன் தான் வாழ்வேன் என்று உறுதியாகக் கூறிவிட்டார்.
இதையடுத்து பஞ்சாயத்தார் தலையிட்டு, அப்படியானால் நீயும், உன் காதலனும் செல்வத்துக்கு ரூ.17,000 கொடுக்க வேண்டும் என்று ‘தீர்ப்பு’ கூறினர். இதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்து அவர்கள் கேட்ட பணத்தை கொடுத்து விட்டு சென்றனர்.
பணத்தை பெற்றுக் கொண்ட செல்வம் தனது மனைவியின் விருப்பப்படியே காதலனுக்கு தாரை வார்த்து விட்டு வீட்டுற்கு சென்றார்.(?????)