2 ஆவது மாடியில் 14 வயது சிறுவன் காரோட்டப் பழகியபோது லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் சிறுவனும் சாரதியும் பலி..!!
அடுக்குமாடி குடியிருப்பொன்றில் இரண்டாவது மாடியில் 14 வயது சிறுவன் ஒருவன் காரோட்டுவதற்குப் பழகிக் கொண்டிருந்தபோது, அக் கார் லிப்டின் கதவை தகர்த்துச் சென்று பள்ளத்தில் வீழ்ந்ததால் அச் சிறுவனும் சிறுவனுக்கு காரோட்டப் பழக்கிக்கொண்டிருந்த சாரதி ஒருவரும் உயிரிந்த சம்பவம் இந்தியாவின் மும்பை நகரில் இடம்பெற்றுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இச் சம்பவத்தில் ஹபீஸ் பட்டேல் எனும் 14 வயது சிறுவனும் அக் குடும்பத்தின் சாரதியாக பணியாற்றிய ஜாவிட் அஹ்மட் என்பவரும் உயிரிழந்துள்ளனர்.
22 மாடிகளைக் கொண்ட இக்பால் ஹைட்ஸ் எனும் இக் கட்டடத்தில் ஹபீஸ் பட்டேலின் குடும்பதினர் வசித்து வருகின்றனர். அக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில், தனது குடும்பத்தின் காரின் மூலம் காரோட்டப் பழகுவதற்கு ஹபீஸ் பட்டேல் விரும்பினான்.
அக் குடும்பத்தின் சாரதியான ஜாவிட் அஹமட் (26) ஹபீஸுக்கு காரோட்டப் பழக்கினார். ஹபீஸ் பட்டேல் வாகனத்தை பின்புறமாக செலுத்திக்கொண்டிருந்தபோது அக் கார் வேகமாக சென்று லிப்டின் கதவை தகர்த்து லிப்ட் கூண்டின் உள்ளே நுழைந்தது.
அவ் வேளையில் லிப்ட் 3 ஆவது மாடியில் இருந்தது. இந் நிலையில் லிப்ட் கூண்டுக்குள் கார் வீழ்ந்ததால் ஹபீஸ் பட்டேலும் ஜாவிட் அஹமட்டும் படுகாயமடைந்தனர்.
இவர்கள் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோதிலும் வழியிலேயே அவர்கள் இறந்துவிட்டனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஹபீஸ் பட்டேல் காரோட்டப் பழகும் காட்சி கண்காணிப்புக் கெமராக்களில் பதிவாகியுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அச் சிறுவன் பிறேக்கை அழுத்துவதற்குப் பதிலாக அக்ஸிலேட்டரை அழுத்தி யிருக்கக்கூடும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Average Rating