நக்ரோடா ராணுவ மெஸ்சில் துப்பாக்கி சூடு: 2 அதிகாரிகள், 5 ராணுவ வீரர்கள் பலி…!!
காஷ்மீரில் பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்பு காரணமாக எல்லை வழியாக பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஊடுருவல் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. என்றாலும் அவ்வப்போது ஊடுருவலில் ஈடு படும் தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் துப்பாக்கியால் சுட்டு முறியடித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவலில் ஈடுபட்டனர். அவர்கள் ஜம்மு- உதம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நக்ரோடா என்ற இடத்தில் உள்ள ராணுவ முகாம் அருகே தாக்குதல் நடத்தினர். இங்கு ராணுவ அதிகாரிகளுக்கான ஓய்வு விடுதி உள்ளது. அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் காவலுக்கு நின்றிருந்தனர். அவர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 வீரர்கள் காயம் அடைந்தனர். உடனே அந்த இடத்துக்கு கூடுதலாக படை வீரர்கள் விரைந்தனர்.
தப்பி ஓடிய தீவிரவாதிகள் அந்த இடத்திலேயே பதுங்கி இருந்ததால் பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த தாக்குதல் குறித்து பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் மணீஷ் மேத்தா கூறுகையில் ‘‘தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ அதிகாரிகள் மற்றும் ஐந்து ராணுவ வீரர்கள் மரணம் அடைந்தனர். தீவிரவாதிகளின் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
அதிக அளவில் ஆயுதங்களுடன் 3 தீவிரவாதிகள் போலீஸ் உடையுடன் உணவு விடுதி வளாகத்திற்குள் நுழைந்தனர். நுழைந்த அவர்கள் வீரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். அத்துடன் கிரானைடு குண்டுகளையும் வீசினார்கள்.
அந்த சமயத்தில் அங்கு 12 வீரர்கள் மற்றம் 2 பெண்கள், 2 குழந்தைகள் உள்ளே இருந்தனர். அவர்களை பிணைக் கைதிகளாக பிடித்துவைக்கக் கூடிய நிலை இருந்தது. ஆனால் எதிர் தாக்குதலில் தீவிரவாதிகள் மூன்று பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏ.கே. 47 துப்பாக்கிகள், 16 துப்பாக்கிகள் மற்றும் 21 கிரேனைடு மற்றும் தாக்குதலுக்கான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டது’’ என்று கூறினார்.
Average Rating