கேரளாவில் மூளை சாவு அடைந்த கல்லூரி மாணவியின் உடல் உறுப்பு தானத்தால் 3 பேர் உயிர் பெற்றனர்…!!
கேரள மாநிலம் கோழிக் கோடு கிடநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அணில்குமார். இவர் அந்த பகுதியில் பலசரக்கு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இவரது மனைவியும், மூத்த மகளும் நோய் காரணமாக ஏற்கனவே இறந்து விட்டனர். இவரது இளைய மகள் கீர்த்தனா (வயது 18). அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் கல்லூரிக்கு சென்ற மாணவி கீர்த்தனா மீது பஸ் மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவர், கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், கீர்த்தனாவுக்கு மூளை சாவு ஏற்பட்டது.
இந்த தகவலை அவரது தந்தை அணில்குமாரிடம் டாக்டர்கள் தெரிவித்தனர். ஏற்கனவே மனைவி மற்றும் ஒரு மகளை பறி கொடுத்து விட்டு ஒரே மகளை பாசத்துடன் வளர்த்து வந்த நிலையில் அவருக்கும் இந்த நிலை ஏற்பட்டதை நினைத்து அவர், மனம் உடைந்து போனார்.
அவரை சமாதானப்படுத்திய டாக்டர்கள், மாணவி கீர்த்தனாவின் உடல் உறுப்புகள் தானம் மூலம் அவர், இறந்த பின்னும் மற்றவர் உடலில் உயிர் வாழ முடியும் என்பதை எடுத்துக் கூறினார்கள். அதைதொடர்ந்து அவரும் அதற்கு சம்மதித்தார்.
இதை தொடர்ந்து கொச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு கீர்த்தனாவின் கண்களும், இன்னொரு நோயாளிக்கு நுரையீரலும் தானம் செய்யப்பட்டது.
எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவருக்கு இதயத்தை பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். நேற்று கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதன் காரணமாக இதயத்தை ஆம்புலன்சில் எர்ணாகுளம் கொண்டு செல்வதில் தடை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதால் போலீஸ் உதவியுடன் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதை தொடர்ந்து மாணவி கீர்த்தனாவின் இதயம் ஆம்புலன்சு மூலம் எர்ணாகுளத்திற்கு பயணம் ஆனது. 200 கிலோ மீட்டர் தூரத்தை 2 மணி நேரத்தில் கடந்து இதயம் எடுத்து செல்லப்பட்டது. அங்குள்ள நோயாளிக்கு ஆபரேசன் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. தற்போது இதய தானம் பெற்றவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
Average Rating