கணவன் – மனைவி உறவை புதுப்பிக்க திருக்குறள் கூறும் 10 குறிப்பு – புணர்ச்சி மகிழ்தல்..!!

Read Time:10 Minute, 51 Second

Capture-69-450x279இன்று இந்த தலைமுறை இரண்டடி ட்வீட்டில் சிக்கி அடைப்படும் என்பதை அறிந்தே அன்று வள்ளுவன் குறளை இரண்டடியில் எழுதி வைத்தானோ என்னவோ. ஒருவன் எப்படி வாழ வேண்டும், எப்படி காதலிக்க வேண்டும், எப்படி தொழில் செய்ய வேண்டும் என பிறப்பில் இருந்து இறப்பு வரை ஒருவன் கடைப்பிடிக்க வேண்டிய அத்தனை விஷயங்களையும் தெய்வ புலவர் வள்ளுவர் அன்றே கூறி சென்று விட்டார். இதோ கணவன் – மனைவி இல்லறம் புத்துயிர் பெற, மகிழ்ச்சி நிரம்ப திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்கள்… அதிகாரம்: புணர்ச்சி மகிழ்தல் குறள் : 1101 முதல் 1110 வரை

ஐம்புலன் இன்பங்களும் நிறைந்தவள்… கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும் ஒண்தொடி கண்ணே உள. கலைஞர் மு.கருணாநிதி உரை: வளையல் அணிந்த இந்த வடிவழகியிடம்; கண்டு மகிழவும், கேட்டு மகிழவும், தொட்டு மகிழவும், முகர்ந்துண்டு மகிழவுமான ஐம்புல இன்பங்களும் நிறைந்துள்ளன. மு.வரதராசனார் உரை: கண்டும் கேட்டும் உண்டும் முகர்ந்தும் உற்றும் அறிகின்ற ஐந்து புலன்களாகிய இன்பங்களும் ஒளி பொருந்திய வளையல் அணிந்த இவளிடத்தில் உள்ளன.

சாலமன் பாப்பையா உரை: விழியால் பார்த்து, செவியால்கேட்டு, நாவால் உண்டு, மூக்கால் மோந்து, உடம்பால் தீண்டி என் ஐம்பொறிகளாலும் அனுபவிக்கும்படும் இன்பம் ஒளிமிக்க வளையல்களை அணிந்த மனைவியிடம் மட்டுமே உண்டு.

காதல் நோய் தீர்க்கும் மருந்து… பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை தன்நோய்க்குத் தானே மருந்து. கலைஞர் மு.கருணாநிதி உரை: நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் பல உள்ளன; ஆனால் காதல் நோயைத் தீர்க்கும் மருந்து அந்தக் காதலியே ஆவாள். மு.வரதராசனார் உரை: நோய்களுக்கு மருந்து வேறு பொருள்களாக இருக்கின்றன, ஆனால் அணிகலன் அணிந்த இவளால் வளர்ந்த நோய்க்கு இவளே மருந்தாக இருக்கின்றாள். சாலமன் பாப்பையா உரை: நோய்களுக்கு மருந்து பெரும்பாலும், அந்நோய்களுக்கு மாறான இயல்பை உடையவையே. ஆனால் இவள் தந்த நோய்க்கு இவளே மருந்து.

தோள் சாய்ந்து உறங்கு… தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு. கலைஞர் மு.கருணாநிதி உரை: தாமரைக் கண்ணான் உலகம் என்றெல்லாம் சொல்கிறார்களே, அது என்ன! அன்பு நிறைந்த காதலியின் தோளில் சாய்ந்து துயில்வது போல அவ்வளவு இனிமை வாய்ந்ததா?. மு.வரதராசனார் உரை: தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியரின் மெல்லிய தோள்களில் துயிலும் துயில் போல் இனிமை உடையதோ?. சாலமன் பாப்பையா உரை: தாம் விரும்பும் மனைவியின் மெல்லிய தோளைத் தழுவித் தூங்கும் உறக்கத்தைவிடத் தாமரைக் கண்ணனாகிய திருமாலின் உலகம் இனிமை ஆனதோ?.

புதுமை தீ… நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும் தீயாண்டுப் பெற்றாள் இவள். கலைஞர் மு.கருணாநிதி உரை: நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கினால் குளிரக் கூடியதுமான புதுமையான நெருப்பை இந்த மங்கை எங்கிருந்து பெற்றாள். மு.வரதராசனார் உரை: நீங்கினால் சுடுகின்றது, அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது, இத்தகைய புதுமையானத் தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள். சாலமன் பாப்பையா உரை: தன்னை நீங்கினால் சுடும், நெருங்கினால் குளிரும் ஒரு தீயை என் உள்ளத்தில் ஏற்ற, இவள் அதை எங்கிருந்து பெற்றாள்?.

விரும்பிய பொழுதெல்லாம் இன்பம்… வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள். கலைஞர் மு.கருணாநிதி உரை: விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன. மு.வரதராசனார் உரை: மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன. சாலமன் பாப்பையா உரை: நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

புதிதாய் தளிர்க்கும் உயிர்… உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள். கலைஞர் மு.கருணாநிதி உரை: இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும். மு.வரதராசனார் உரை: பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

தழுவும் சுகம்… தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால் அம்மா அரிவை முயக்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: தானே உழைத்துச் சேர்த்ததைப் பலருக்கும் பகுத்து வழங்கி உண்டு களிப்பதில் ஏற்படும் இன்பம், தனது அழகிய காதல் மனைவியைத் தழுவுகின்ற இன்பத்துக்கு ஒப்பானது. மு.வரதராசனார் உரை: அழகிய மா நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுந்து கொடுத்து உண்டாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: அழகிய மா நிறப் பெண்ணாகிய என் மனைவியிடம் கூடிப் பெறும் சுகம், தன் சொந்த வீட்டில் இருந்து கொண்டு, தன் உழைப்பில் வந்தவற்றைத் தனக்குரியவர்களுடன் பகிர்ந்து உண்ண வரும் சுகம் போன்றது.

இறுக தழுவுதல்… வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படாஅ முயக்கு. கலைஞர் மு.கருணாநிதி உரை: காதலர்க்கு மிக இனிமை தருவது, காற்றுகூட இடையில் நுழைய முடியாத அளவுக்கு இருவரும் இறுகத் தழுவி மகிழ்வதாகும். மு.வரதராசனார் உரை: காற்று இடையறுத்துச் செல்லாதபடி தழுவும் தழுவுதல், ஒருவரை ஒருவர் விரும்பிய காதலர் இருவருக்கும் இனிமை உடையதாகும். சாலமன் பாப்பையா உரை: இறுக அணைத்துக் கிடப்பதால் காற்றும் ஊடே நுழைய முடியாதபடி கூடிப் பெறும் சுகம், விரும்பிக் காதலிப்பார் இருவர்க்கும் இனிமையானதே.

ஊடலும், கூடலும்… ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன். கலைஞர் மு.கருணாநிதி உரை: ஊடல் கொள்வதும், அதனால் விளையும் இன்பம் போதுமென உணர்ந்து அதற்கும் மேலான இன்பம் காணப் புணர்ந்து மயங்குவதும் காதல் வாழ்வினர் பெற்றிடும் பயன்களாகும். மு.வரதராசனார் உரை: ஊடுதல், ஊடலை உணர்ந்து விடுதல், அதன்பின் கூடுதல் ஆகிய இவை காதல் வாழ்வு நிறைவேறப் பெற்றவர் பெற்ற பயன்களாகும். சாலமன் பாப்பையா உரை: படுக்கைக்குப் போகுமுன் சிறு ஊடல் செய்தல், தவறு உணர்ந்து சமாதானம் ஆதல், அதன்பின் கூடல் இவை அல்லவா திருமணம் செய்து கொண்டவர் பெற்ற பயன்கள்!

காதல் சுவை… அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம் செறிதோறும் சேயிழை மாட்டு. கலைஞர் மு.கருணாநிதி உரை: மாம்பழ மேனியில் அழகிய அணிகலன்கள் பூண்ட மங்கையிடம் இன்பம் நுகரும் போதெல்லாம் ஏற்படும் காதலானது, இதுவரை அறியாதவற்றைப் புதிதுபுதிதாக அறிவதுபோல் இருக்கிறது. மு.வரதராசனார் உரை: செந்நிற அணிகலன்களை அணிந்த இவளிடம் பொருந்துந்தோறும் காதல் உணர்தல், நூற் பொருள்களை அறிய அறிய அறியாதமைக் கண்டாற் போன்றது. சாலமன் பாப்பையா உரை: நூல்களாலும் நுண் அறிவாலும் அறிய அறிய முன்னைய நம் அறியாமை தெரிவதுபோல, நல்ல அணிகளை அணிந்திருக்கும் என் மனைவியுடன் கூடக் கூட அவள் மீது உள்ள என் காதற்சுவையும் புதிது புதிதாகத் தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த நோயையும் குணப்படுத்தும் திரிபலா சூரணம்..!!
Next post காதலும் நம்ம ஹீரோயின்களும்..!!