By 15 March 2017 0 Comments

‘கால அவகாசம்’ வழங்கிய வவுனியா சந்திப்பு..!! (கட்டுரை)

article_1489562069-newதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த சனிக்கிழமை (மார்ச் 11) வவுனியாவில் நடைபெற்றது. சுமார் எட்டு மணித்தியாலங்கள் நீண்ட இச்சந்திப்பின் இறுதியில் பொறுப்புக்கூறல், பொறிமுறைகளை நிறைவேற்றுவதற்காக இலங்கைக்கு இன்னும் இரண்டு வருட ‘கால அவகாசம்’ வழங்குவது தொடர்பில் ஒரு வகையிலான இணக்கம் காணப்பட்டுள்ளது. ‘காலஅவகாசம்’ வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பம் முதலே ஈ.பி.ஆர்.எல்.எப் தன்னை இணைத்துக் கொண்டிருக்கவில்லை.

வவுனியாச் சந்திப்பிலும் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் மாகாண சபை உறுப்பினர்களும் அதே நிலைப்பாட்டில் இருந்தனர். சந்திப்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் தங்களுக்கு உடன்பாடில்லை என்கிற விடயத்தை ஊடகக் குறிப்பிலும் இடம்பெறச் செய்திருக்கின்றார்கள். ஆனால், காலஅவகாசம் வழங்குவது தொடர்பிலான உரையாடல்களில் ஆரம்பத்தில் எதிர்வினையாற்றிய பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாண சபை உறுப்பினர்களும் ‘காலஅவகாசம்’ என்கிற பதத்தினை நீக்கிவிட்டு, காலஅவகாசம் வழங்குவதற்கு இணங்கியிருக்கின்றார்கள்.

வவுனியாச் சந்திப்பு இரண்டு விடயங்களுக்காக முக்கியத்துவம் பெறுகின்றது. ‘முக்கிய தீர்மானமொன்றைத் தமிழ் மக்களினால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையிலான, வாதப்பிரதி வாதங்களின் பின்னர் எடுத்திருக்கின்றோம்’ என்று நிரூபிப்பதற்காகவும் ‘கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம் எப்போதுமே ஆளுமையோடு இருந்து வருகின்றது’ என்று நிரூபிப்பதற்காகவும் ஆகும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையோடு 2015ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற விடயத்தில் தமிழ்த்தேசியப் பரப்புக்குள் எந்தவித முரண்பாடுகளும் இல்லை.

ஆனால், கடந்த 16 மாதங்களில் இலங்கை அதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் பெரும் ஏமாற்றமான நிலையே இருக்கின்றது. அப்படியான நிலையில், மீண்டும் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்குவது தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைக் கலைந்து போகச் செய்துவிடும் என்கிற உணர்நிலை இருக்கின்றது. அதனை முழுமையாக நிராகரித்துவிடவும் முடியாது. ஆயினும், அரசியல் என்பது சந்தர்ப்பங்களைக் கையாள்வதும், தக்க வைப்பதும் என்கிற ரீதியில் சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில்தான் வெற்றி தங்கியிருக்கின்றது. அதன்போக்கில், இலங்கையைச் சர்வதேச தீர்மானம் ஒன்றினூடாகத் தொடர்ந்தும் பிடித்து வைத்திருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தாக வேண்டும்.

இலங்கை அரசு திமிறி ஓடினாலும் அது இணங்கிய விடயம் சார்ந்து சர்வதேச சதிராட்டத்துக்குள் சிக்க வைத்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் மறுதலிக்க முடியாதது. அதன்போக்கிலேயே கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கும் பீடத்தினால் ‘கால அவகாசம்’ பற்றிய விடயம் கையாளப்பட்டிருக்கிறது. பொறுப்புக் கூறலுக்காக இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவது தொடர்பில் பிரித்தானியா தீர்மானமொன்றை கொண்டு வரப்போகின்றது என்கிற விடயம் அறிவிக்கப்பட்டதும், கூட்டமைப்பின் பேச்சாளரும் சர்வதேச விவகாரங்களைக் கையாள்பவருமான எம்.ஏ.சுமந்திரன், அவசர அவசரமாக ஜெனீவா சென்றார்.

அங்கு, பிரித்தானியத் தீர்மானம் தொடர்பில் அவர், 2015 செப்டெம்பர் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் எந்தச் சரத்தும் மாற்றப்படக் கூடாது என்பதோடு, கால அவகாசத்துக்கான வரையறை மற்றும் அதுசார் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு என்பன அவசியமானது என்றும் வலியுறுத்தினார். எனினும், கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம், எந்தவித கலந்தாய்வும் இன்றி கால அவகாசம் வழங்குவதற்கு இணங்கிவிட்டது என்கிற விடயம் மேல் மட்டத்துக்கு வந்தது.

அதே தருணத்தில், தென்னிலங்கை சில சிவில் அமைப்புகளினாலும் இலங்கையின் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக கண்காணிப்புடன் கூடிய கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்கிற விடயம் சார்ந்து ஐக்கிய நாடுகளுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கப்பட்டது. அந்த விண்ணப்பத்தில் என்ன விடயம் எழுதப்பட்டிருக்கின்றது என்று தெரியாமலேயே பலரும் கையெழுத்திட்டு சிக்கிக் கொண்டு முழித்தார்கள். அந்த விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய தருணத்திலேயே சுமந்திரன் ஜெனீவாவில் காலஅவகாசத்துக்கு இணக்கம் தெரிவித்துவிட்டு வந்திருந்தார்.

ஏற்கெனவே, கால அவகாசத்துக்கு ஆதரவு வழங்கியவர்கள் தொடர்பில் பெரும் சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், அவசர அவசரமாகத் தம்மைச் சுற்றவாளிகள் என்று நிரூபிக்க வேண்டிய கடப்பாடு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். அதன் தொடர்ச்சியே, கூட்டமைப்பின் 11 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கால அவகாசத்துக்குத் தம்மால் இணங்க முடியாது என்று தெரிவித்து, ஐக்கிய நாடுகளுக்கும் இராஜதந்திர வட்டாரங்களுக்கும் கடிதம் எழுத வைத்திருக்கலாம்.

(11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்கிற விடயத்திலேயே குழப்பம் நீடிக்கின்றது. சிலர் தாம் கைச்சாத்திடவில்லை என்றும் வாதிட்டார்கள். இறுதியில் எட்டுப்பேர் என்று சொல்லப்பட்டது.) 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கூட்டமைப்பில் 11 உறுப்பினர்கள் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வ(!) தீர்மானத்துக்கு எதிராக இருக்கின்றார்கள் என்கிற விடயம், உட்கட்சி ஜனநாயகம் சார்ந்த விடயமாக மாறியது. அதனை, மாற்றுத் தரப்புகள் எடுத்துக் கையாள ஆரம்பித்ததும் சம்பந்தனும் சுமந்திரனும் ஆரம்பத்தில் சற்று அரசியல் யதார்த்தம் பேசிக் கையாள நினைத்தார்கள்.

ஆனால், அது, ஊடகங்களிலும் சிவில் சமூகத் தளத்திலும் கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடத்துக்கு எதிரான முக்கிய துரும்பாகக் கையாளப்பட ஆரம்பித்ததும் தங்களுடைய ஆளுமையை நிரூபிக்க வேண்டி வந்தது. அதன்போக்கிலேயே, வவுனியாச் சந்திப்பு நடத்தப்பட்டது. அதில் அவர்கள் வென்றும் இருக்கின்றார்கள். சுமந்திரன், அடிக்கடி கூறி வருகின்ற விடயம், “லேபிள்கள் முக்கியமல்ல; உள்ளடக்கமே முக்கியம். அரசியல் தீர்வு விடயத்திலும் ‘சமஷ்டி’ என்கிற சொல் முக்கியமல்ல; அதன் உள்ளடக்கம், அதாவது அதிகாரப் பங்கீட்டின் அளவே முக்கியம்” என்று. இப்போதும், அவர் அதனையே செய்திருக்கின்றார். ‘காலஅவகாசம்’ என்கிற பதத்தினை நீக்கிவிட்டு, கால அவகாசத்துக்கு இணங்கச் செய்திருக்கின்றார்.

ஆனால், வவுனியாச் சந்திப்புச் சார்ந்து இன்னமும் இருக்கின்ற விமர்சனம், கூட்டமைப்பின் முக்கிய தீர்மானமொன்றை எடுக்கின்ற போது, பங்காளிக் கட்சிகளின் அனைத்துத் தலைவர்களும் அழைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது. அந்தவகையில், ஈ.பி.ஆர்.எல்.எப்பின் தலைமையை தவிர்த்திருப்பது ஏற்புடையதல்ல. அதற்காகவே, ஒருங்கிணைப்புக் கூட்டத்தைக் கூட்டாமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கிடையிலான கூட்டமாக அதுநடத்தி முடிக்கப்பட்டிருக்கின்றது.

இது, உண்மையிலேயே சுரேஷ் பிரேமச்சந்திரனை மேலும் மேலும் கோபப்படுத்தி அகற்றுவதற்கான போக்கிலானது. இப்போது இருக்கின்ற இன்னொரு கேள்வி, கால அவகாசம் வழங்குவதற்குத் தாம் இணங்கவில்லை என்று ஏற்கெனவே கடிதம் எழுதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களுக்கு என்ன பதில் சொல்லப் போகின்றார்கள் என்பதேயாகும். ஏனெனில், அவர்களின் நிலைப்பாடு இப்போது மாறியிருக்கின்றது. இங்கு நிலைப்பாட்டு மாற்றம் என்பது அவர்களின் ஆளுமை சார் விடயத்திலும் முக்கிய தாக்கம் செலுத்தும்.

அது, கூட்டமைப்பின் முடிவுகளை எடுக்கின்ற பீடம் என்று தொடர்ச்சியாக சொல்லப்படும் சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் முன்னால் இவர்களினால் நின்று பிடிக்க முடியவில்லை என்பது சார்ந்தது. இது, கூட்டமைப்பின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல. ஆளுமை சார் அரசியலே தமிழ்த் தேசியப்பரப்பு வேண்டி நிற்பது. அப்படியான நிலையில், பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆளுமை தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புவார்கள். அரசியல் தலைமைகள் மீது மக்கள் என்றைக்குமே அதீத நம்பிக்கைகளை வெளிப்படுத்தியதில்லை. விமர்சனங்களோடு மட்டுமே அணுகி வந்திருக்கின்றார்கள்.

அப்படிப்பட்ட நிலையில், மக்களுக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இடையிலான வெற்றிடத்தை நிரப்புவது தொடர்பிலான விடயமொன்று முக்கியத்துவம் பெறுகின்றது. அந்த வெற்றிடத்தினை சிவில் சமூக அமைப்புகளினாலும் செயற்பாட்டாளர்களினாலும் நிரப்ப முடியும். ஆனால், கடந்த எட்டு ஆண்டுகளில் அந்த இடைவெளி அப்படியேதான் இருக்கின்றது. அண்மைய நாட்களில்தான் மாணவர்களும் ஊடகவியலாளர்களும் அதனை நிரப்ப முயற்சிக்கின்றார்கள்.

சிவில் சமூக அமைப்புகளினாலும் செயற்பாட்டாளர்களினாலும் அந்த இடைவெளியை ஏன் நிரப்ப முடிவில்லை என்கிற கேள்வி எழலாம்; பதில் இலகுவானது. இங்கு பெரும்பாலான சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் அரசியல்வாதிகள் போலலே செயற்பட எத்தனிக்கின்றார்கள். மக்களை அறிவூட்டுதல் என்கிற விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியவர்கள் அரசியல் யதார்த்தங்களைப் புறந்தள்ளி, மக்களினால் இலகுவாக எழுப்பக் கூடிய கேள்விகளுக்கே பதில் சொல்ல முடியாமல், அதி சிக்கலான அல்லது விளங்கிக் கொள்ள முடியாத வகையில் விடயங்களைக் கையாள்கின்றார்கள்.

அத்தோடு, நேருக்கு நேரான மோதல் தன்மையொன்றைஅரசியல்வாதிகளோடு நடத்த எத்தனிக்கின்றார்கள். அப்போது, அவர்களும் அரசியல்வாதிகள் போலவே நடந்து கொள்கின்றார்கள். அண்மையில், யாழ். ஊடக அமையத்தில் பேசிக் கொண்டிருந்த தமிழ் சிவில் சமூக அமையத்தின் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரனின் ஒரு மணித்தியாலம் நீண்ட பேச்சிலும் அதனையே உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஜெனீவா அரங்கு மீண்டும் திறந்திருக்கின்ற நிலையில், தமிழ்த் தேசியப் பரப்புக்குள்ளும் அதுசார் அரங்கேற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருக்கின்றன. ஆனால், தனிப்பட்ட ரீதியில் சிலரினால் வெற்றிகள் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற நிலை தாண்டி, மக்களினை அறிவூட்டி விடயங்களை சாத்தியப்படுத்த முடியவில்லை என்கிற விடயம் தோல்வியின் பக்கத்திலேயே இருக்கின்றது. அந்தத் தோல்விக்கு அரசியல் தலைமைகள் மாத்திரமல்ல, சிவில் சமூக அமைப்புகளும் செயற்பாட்டாளர்களும் ஊடகங்களும் முக்கிய கர்த்தாக்களாகும்.Post a Comment

Protected by WP Anti Spam