இனக்கொலையை வீரமாக சித்திரிப்பவர்களிடம் நீதியை பெற இயலாது..!! (கட்டுரை)

Read Time:11 Minute, 18 Second

genocide-930உலகில் அன்னையர்கள் நடத்தும் போராட்டத்திற்கு ஒரு முக்கியமான இடமும் வரலாறும் உண்டு. அன்னையர்கள் தலைமுறைகளால் பூமியை உருவாக்கியவர்கள். தங்கள் மாசற்ற தாய்மையால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர்கள். தாய்மை என்பது மனிதர்களுக்கு மாத்திரம் உரிய விடயமில்லை. விலங்குகளிடமும் பறவைகளிலும் தாய்மையின் உன்னததத்தைப் பார்க்கிறோம். அன்னையர்கள் தவித்தால் அந்த தேசம் அநீதியில் மாண்டிருக்கிறது என்றே அர்த்தம். அன்னையர்கள் தவித்து வாழும் தேசங்களில் வடக்கு கிழக்கு தமிழ் தேசமும் ஒன்று. ஈழம் முழுக்க முழுக்க அன்னையர்களின் தவிப்பாலும் கண்ணீராலும் ஏக்கத்தாலும் காத்திருப்பினாலும் மூழ்கியதொரு தேசம். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக தொடரும் நிலையிது.

ஈழத்தில் இப்போது நடக்கும் போராட்டங்களைப் பார்க்கும்போது அர்ஜன்டீனா அன்னையர்களின் போராட்டமே நினைவுக்கு வருகிறது. அந்நாட்டில் இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டபோது, அவர்களை மீட்க அன்னையர்கள் தெருவுக்கு வந்து போராட்டங்களை நடத்தினர். சைக்கிளில் சென்ற தமது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டதை நினைவுபடுத்தி, கடதாசிச் சைக்கிள்களை செய்து வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மிகவும் துயரமும் மனித மாண்புக்கு இழிவு சேர்க்கும் செயலுமாக, போராட்டத்தில் ஈடுபட்ட அன்னையர்களையும் காணாமல் ஆக்கப்பட்டனர். ஈழத்தில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக அன்னையர்கள் தம்மை உருக்கி காணாமல் போனபடி போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பானதொரு செயலே இது.

போர் நடைபெற்ற நாடுகளில், இன ஒடுக்குமுறைகள் நடைபெற்ற நாடுகளில் இளைய சந்ததியை இலக்கு வைத்து காணாமல் ஆக்குதல், படுகொலை செய்தல் என்பன இடம்பெற்றிருக்கின்றன. இனவெறுப்பின் காரணமாக, இன ஒடுக்குமுறையின் காரணமாக இனப்படுகொலை செய்வதற்கு ஒப்பானதொரு செயலே காணாமல் ஆக்குதல். இது எண்ணிக்கையை காட்டிலும் மனித குலத்திற்கு விரோமான செயலின் பண்பின் அடிப்படையில் புரிந்துகொள்ள வேண்டிய விடயம். காணாமல் ஆக்கப்படுவதன் மூலம் உளவியல் ரீதியாக பண்பாடு ரீதியாக மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது. தீவிரம் குறையாமல் பாதிப்பை ஏற்படுத்தும் எரியும் பிரச்சினையாகவும் இது கூர்மை பெறுகிறது.

ஈழ யுத்தத்தின்போது, கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்டனர். அதற்கு அடுத்த செயலாக போரின்போது கொல்ல முடியாதவர்களை இலங்கை அரசாங்கம் வலிந்து காணாமல் ஆக்கியது. நிராயுதபாணிகளாக சரணடைந்தவர்களையும் குடும்பம் குடும்பமாக சரணடைந்தவர்களையும் இலங்கை அரச படையினர் பேருந்துகளில் ஏற்றிச் சென்றனர். பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள், முதியவர்களும் என பல தரப்பட்டவர்களும் இவ்வாறு சரணடைந்தனர். கணவனை கொடுத்த மனைவியும் பிள்ளையைக் கொடுத்த தாயும் இப்போது தமது உறவுகளை கேட்கின்றனர். கையில் கொடுத்த உறவுகள் எங்கே இருக்கிறார்கள்? அவர்களை திருப்பிக் கொடுங்கள் என்றே இவர்கள் கேட்கின்றனர்.

அருட் தந்தை பிரான்சிஸ் உட்பட விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள், பொதுமக்கள் என பல ஆயிரக் கணக்கானவர்கள் இவ்வாறு இலங்கை படைத்தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டவர்கள். இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனம் சாதித்து வருகிறது. அண்மையில் கொழும்பில் உள்ள தமிழ் பத்திரிகைக்கு நேர்காணல் வழங்கிய முன்னாள் ஜனாதிபதியும் இந்தக் குற்றச் செயல்களைப் புரிந்தவருமான மகிந்த ராஜபக்ச காணாமல் போன அனைவரும் இறந்துவிட்டதாக என்னால் கூற முடியாது என்று தெரிவித்திருப்பது இந்த விடயத்தில் மிகவும் முக்கியமானது.

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் மீட்பிற்காக 40ஆவது நாளாகவும் போராட்டம் தொடர்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தாயொருவர், காணாமல் போன தன்னுடைய மகன் தனக்கு ஒரு இலக்கத்திலிருந்து அழைப்பு எடுத்ததாகவும் உடைகள் ஏதுமின்றி நிர்வாணமாக தன்னை அடைத்து வைத்திருப்பதாகவும் தனது மகன் கூறியதாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இதைப்போலவே பாலேந்திரன் ஜெயக்குமாரி என்ற தாயார் காணாமல் ஆக்கப்பட்ட தன்னுடைய மகன் அரசின் புனர்வாழ்வு முகாமில் பயிற்சி ஒன்றில் ஈடுபடும் புகைப்படத்தை வைத்து போராட்டத்தை முன்னெடுத்தார்.

மகிந்த ராஜபக்ச தன்னுடைய அரசியல் தேவையின் நிமித்தம் இவ்வாறு குறிப்பிடலாம். ஆனால் மகிந்த ராஜபக்ச தன்னுடைய ஆட்சிக் காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தில் எவ்வாறு நடந்து கொண்டாரோ, அவ்வாறே இன்றைய ஆட்சியாளர்களான மைத்திரிபால சிறிசேனவும் ரணில் விக்கிரமசிங்கவும் நடந்து கொள்கின்றனர். உண்மையில், உயிருடன் ஒப்படைக்கப்பட்டவர்களின் விவகாரத்திலேயே நேர்மையாக, நீதியாக, உண்மையாக பொறுப்புக்கூறாமல் மௌனித்திருப்பவர்கள் இனக்கொலை செய்யப்பட்ட மக்களின் விடயத்தில் எப்படி நடந்து கொள்வார்கள்?

ஒரு இனத்தை திட்டமிட்டு அழித்து காணாமல் ஆக்கிவிட்டு மிகவும் மௌனமாக இருக்கும் அரசிடம் எப்படி நீதியை எதிர்பார்க்க முடியும்? கண்ணீரோடும் காத்திருப்போடும், ஏக்கத்தோடும் உள்ள இனத்தை ஏறெடுத்தும் பார்க்காத இந்த அரசாங்கம் தமிழ் மக்களை தன் பிரஜைகளாக கருதியிருந்தால் இப்படி நடக்குமா? இப்படிச் செய்திருக்குமா? கிளிநொச்சியில் நடக்கும் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு நாற்பது நாள் கடந்தும் அரசிடமிருந்து பதில் இல்லை. யாழ்ப்பாணம், வவுனியா என்று நீதியை வலியுறுத்தி போராட்டங்கள் நடக்கின்றன. வடக்கு கிழக்கு மக்களின் போராட்டத்தை திரும்பியும் பாராமல் இருக்கிறது அரசு. மனித உரிமை குறித்த இந்த விடயத்தில் துளியும் அச்சமற்று இயல்பாய் இருக்கிறது இலங்கை.

அண்மையில் படையினரின் நிகழ்வொன்றில் பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன, தாய் நாட்டுக்காக யுத்தம் புரிந்த வீரம் மிகுந்த படையினர் எவரையும் குற்றவாளிக் கூண்டிலில் நிறுத்தப் போவதில்லை என்று கூறியிருந்தார். விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளை அழித்த படையினரை தண்டிக்க விடமாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். இலங்கை அரச படைகள் தமது வீர யுத்தம் என்பது எமது மக்களை கூட்டம் கூட்டமாக அழித்தொழிப்பதுவா? இலங்கை அரச படைகயின் வீர யுத்தம் என்பது தமது உறவுகளை கூட்டம் கூட்டமாக காணாமல் ஆக்குவதா?

இலங்கையை யார் ஆட்சி செய்தாலும், போரை, இனப்பிரச்சினையை, இனப்படுகொலையை, உரிமை மறுப்பை வீர யுத்தமாகவும் அரசியல் வெற்றியாகவுமே பார்க்கிறார்கள் என்பதை மைத்திரிபாலவின் மேற்கண்ட கருத்துக்கள் தெளிவுபடுத்துகின்றன. போரின் பின்னால், இன அழிப்பின் பின்னால், அறுதாண்டு கால பிரச்சினையின் பின்னால் உள்ள உண்மையை வீரமாக நோக்குபவர்களால் தமிழ் மக்களின் உள்ளத்தை ஏற்றுக்கொள்ள இயலாது. தமிழ் மக்களாலும் அவர்களை தலைவர்களாக ஏற்றுக்கொள்ள முடியாது.

ஈழத் தமிழ் மக்கள் உள்நாட்டில் நீதியை எதிர்பார்க்க முடியாது என்பதை இன்றைய ஆட்சியாளர்களும் உணர்த்துகின்றனர். கவனிக்கப்படாத போராட்டங்களும் போர் குறித்த வெற்றிப் பிரதாபங்களும் இனச் சிக்கலின் உண்மை நிலையை மறுக்கும் போக்குகளும் நிகழ்ந்த இனப்படுகொலையை வீரமாகச் சித்திரிக்கும் பெருமிதங்களும் உள்ள நாட்டில், தமிழ் மக்கள் நீதியைப் பெற முடியாது என்பதை உணர்த்துகின்றது. மனித மாண்பு குறித்த, இனங்களின் சுய உரிமை மற்றும் இறைமையை மதிக்கின்ற நீதியும் நம்பகமும் கொண்ட அனைத்துலக சமூகம் முன்பாகவே நிகழ்ந்த அநீதிக்கான நீதியைப் பெற முடியும். இன்றைக்கு ஈழத் தீவில் நீதியை நிலைநாட்டுவது, உலகில் இனியொரு இனமும் இத்தகைய இனப்படுகொலையை எதிர்கொள்வதை தடுப்பதாயும் அமையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீரியலில் நடித்தால் தற்கொலை செய்வேன்- மிரட்டிய மனைவி..!! (வீடியோ)
Next post ஜெய் பிறந்தநாளில் இன்ப அதிர்ச்சி கொடுத்த அஞ்சலி..!!