கோர்ட்டில் ஆஜராக தவறிய நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு..!!
இந்தி நடிகர் சஞ்சய் தத் மீது திரைப்பட தயாரிப்பாளர் சகீல் நூரானி மும்பை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், கூறி இருப்பதாவது:-
நான் கடந்த 2002-ம் ஆண்டில் ‘ஜன் கீ பஸ்ஸி’ என்ற பெயரில் ஒரு படம் தயாரித்தேன். இதில், நடிக்க நடிகர் சஞ்சய் தத் ஒப்புக்கொண்டார். இதற்காக அவர் பேசிய தொகையை அவரிடம் கொடுத்தேன். பின்னர், அவர் திடீரென விலகி கொண்டார். எனினும், பணத்தை திருப்பி தரவில்லை.
இதுபற்றி தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டபோது, உடனடியாக பணத்தை திருப்பி செலுத்துமாறு சஞ்சய் தத்துக்கு அறிவுறுத்தினர். இருப்பினும், அவர் பணத்தை திருப்பி செலுத்தாமல் இழுத்தடிக்கிறார். இதில், கோர்ட்டு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த மாஜிஸ்திரேட்டு, விசாரணையின்போது சஞ்சய் தத் ஆஜராக உத்தரவிட்டார். ஆனாலும், அவர் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து நேற்று நடந்த விசாரணையின் போது, நடிகர் சஞ்சய் தத்துக்கு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தரவிட்டது. வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்டு 29-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
Average Rating