பாட்டுப் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை கோடரியால் வெட்டிச் சாய்த்த சகோதரர்..!!
உச்ச ஸ்தாயியில் பாடி தூக்கத்தைக் கெடுத்தவரை அவரது சகோதரர் கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் சட்டீஸ்கரில் இடம்பெற்றுள்ளது. சட்டீஸ்கர் மானிலம், பலோட் மாவட்டம், டோண்டிலோரா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவரது சகோதரர் சிந்த்துராம் (45). இருவரும் திருமணம் முடித்து ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்துவந்தனர்.
முன்கோபியான சுரேஷ்குமார் அடிக்கடி கிராமத்தவர்களுடன் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்வதுண்டு. அவரது முன்கோபத்தைக் கிளறிவிட்டு வேடிக்கை பார்ப்பது சிந்த்துராமின் வழக்கம். இதனால், சகோதரர்கள் இருவரும் அடிக்கடி மோதிக்கொள்வார்கள். இந்த நிலையில், கடந்த செவ்வாயன்று சுரேஷ் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தார்.
அங்கு வந்த சிந்த்துராம் உச்ச ஸ்தாயியில் பாடி அவரது தூக்கத்தைக் குலைத்தார். பலமுறை சொல்லிப் பார்த்தும் கேட்காததால் கோபம்கொண்ட சுரேஷ், சிந்த்துராமைத் தாக்க முற்பட்டார். அப்போது, அறையில் இருந்த கோடரியை கையிலெடுத்த சிந்த்துராம் சுரேஷ்குமாரைத் தாக்கப்போவதாக பயமுறுத்தினார். இதனால் கோபம் தலைக்கேறிய சுரேஷ், சிந்த்துராமைக் கடுமையாகத் தாக்கி வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து மின்கம்பத்தில் கட்டினார். தடுக்கப்போன குடும்பத்தினர் மற்றும் கிராமத்தவரைக் கொன்றுவிடுவதாகவும் மிரட்டினார்.
பின்னர், கதறியழுத குடும்பத்தினரையும் லட்சியம் செய்யாமல் கோடரியால் தனது சொந்த சகோதரனின் விரல்களையும், கைகளையும் கொத்தியெறிந்த சுரேஷ், கடைசியாக அவரது தலையையும் வெட்டிச் சாய்த்தார். அப்படியும் கோபம் அடங்காமல், உயிரற்ற சிந்த்துராமின் உடலையும் துண்டு துண்டாக வெட்டினார். பின்னர், அப்பகுதி பொலிஸ் நிலையத்தில் சுரேஷ்குமார் சரணடைந்தார். அவர் மீது கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்த பொலிஸார் விளக்கமறியலில் வைத்தனர்.
Average Rating