இன்னல்களை மட்டுமே இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வுகள்..!! (கட்டுரை)

Read Time:12 Minute, 49 Second

இலங்கையில் ஏற்பட்ட இனமுறுகலுக்குப் பின்னர், தமிழர் வாழ்வில் இருந்து, பிரிக்க முடியாத ஒரு விடயமாக இடப்பெயர்வுகள் உள்ளன.

ஈழத்தமிழர் வாழ்வில், ‘ஊர்’ என்பது பெரும் முக்கியத்துவம் வாய்ந்த, அந்தஸ்து உயர்ந்த சொல் ஆகும். உன்னதமான வாழ்வுக்கு, தூய்மையான அன்பு அடிப்படை எனலாம். அந்தவகையில், பண்பாட்டுடனும் அன்புடனும் அரவணைக்கும் உயரிய ஓர் அடையாளக் குறியீடு ஊர் ஆகும்.

“அவர் எங்கள் ஊர்க்காரர்” என்று கூறுவதிலும் “ஊரில் உறவுகள் சுகமாக உள்ளனரா” என நலம் விசாரிப்பதிலும் “ஊருக்கு எப்போது பயணம்” எனக் கேட்பதிலும் தனிச் சுகம் இயல்பாக ஊற்றெடுக்கும்.

இவ்வாறாக உறவாடுவதில் ஒருவித அந்நியோன்ய உணர்வு, பற்று, பிடிப்பு எனப் பல விடயங்கள் ஒன்றுடன் ஒன்றாகப் பிணைந்திருக்கும். ஒருவரது ஊரைக் கொண்டு, அவருக்கு முத்திரை குத்துவதிலும் அந்தஸ்தை மதிப்பீடு செய்வதிலும் ஊர் கணிசமான பங்கை வகிக்கின்றது.

இவ்வாறான அபிமானம் பெற்றதும், அடையாளம் உடையதுமான பெயர் பெற்ற ஊர்கள், இப்போது உருக்குலைந்து, தன்னிலை அழிந்து, கீர்த்தி அருகி இருப்பது அனைவருக்கும், உயிர் எடுக்கும் துயர் பகிர்ந்த செய்தி ஆகும்.

ஆம்! இவ்வாறாக, ஊரோடும் உறவோடும் உடலும் உயிரும் போல, கலந்த உயிரோட்டமான தமிழ் மக்களின் வாழ்வியலை, இடப்பெயர்வு இல்லாமல் ஆக்கி விட்டது.

சுனாமி, வௌ்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களும் ஆயுதப் போர் எனும் செயற்கையாக மனிதனால் ஆக்கப்பட்ட அழிவுகளும் ஒவ்வோர் ஊரினதும் கலைப்பண்புகள் பண்பாட்டு, வாழ்வியல் கோலங்கள் ஆகியவற்றைக் கலங்கடித்து கவலைக்கிடமாக மாற்றிவிட்டுள்ளன.

இடப்பெயர்வு, ஒரு பகுதி மக்களை உள்நாட்டில் அகதியாக்கியும் பிறிதொரு தொகை மக்களை வெளிநாட்டுக்குக்கு அனுப்பி அகதியாக்கியும் ஒட்டு மொத்தத்தில் ஓர் அவல வாழ்வுக்குள் மக்களைத் தள்ளி விட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் வரைவிலக்கணத்தின் பிரகாரம், ஒரு மனிதனின் ஆரோக்கியம் என்பது உடல், உள்ளம், குடும்பம், சமூகம், ஆன்மீகம் ஆகிய தளங்களில் உள்ள உச்ச அல்லது திருப்தியான நிலையைக் குறிக்கும். இடப்பெயர்வுகள் மேற்குறிப்பிட்ட ஐந்து தளங்களையும் ஆட்டிப் படைத்து விடுவன ஆகும்.

உதாரணமாக, ஒருவர் தனது சொந்த ஊரில் விவசாயம் மேற்கொண்டு, உடல் மற்றும் உள ஆரோக்கியத்துடனும் குடும்ப அங்கத்தவர்களுடனும் சமூகத்துடனும் ஆன்மீக வழியிலும் இரண்டறக் கலந்து, ஓர் அர்த்தம் பொதிந்த வாழ்வை வாழ்வார்கள்; வாழ்ந்தார்கள். ஆனால், இடப்பெயர்வுகள் அவரிலிருந்து இவற்றை இடம்பெயரச் செய்து விட்டன.

பொதுவாக ஒருவர், தனது தாய் மண்ணில் சொந்த இருப்பிடத்தில் காணி பூமியுடனும் தன் சுற்றுச்சூழலுடனும் கொண்ட உறவு உயர்வானது; உன்னதமானது; உவகையானது.

அப்படிப்பட்ட உறவை அறுத்தெறிந்து, அந்நியமானதும் அறிமுகமற்ற அல்லது விருப்பமற்றதுமான சூழலில் வாழ நிர்ப்பந்திப்பது பல விதமான மனவடுக்களை ஏற்படுத்தவல்லது. இது ஒரு விதத்தில் மனித உரிமைமீறலாகும்.

ஊரில் கூட்டுக்குடும்பமாக, ஒரு கூட்டுப்பறவைகளாகச் சிறப்பாக வாழ்ந்தவர்களின் வாழ்வை இடப்பெயர்வு இழக்க வைத்து விட்டது எனலாம்.

பொதுமையாக ஒரு சொல்லில், ஈழத்தமிழர் எனக் குறிப்பிட்டாலும், ஒவ்வோர் ஊருக்கும் ஒவ்வொரு தனித்தன்மை உண்டு. அவ்வாறான தனித்தன்மைகளையும் இடப்பெயர்வு துடைத்தழித்து விட்டது.

இலங்கைக்கு பிரித்தானியரிடமிருந்து சுதந்திரம் கிடைத்து, பத்து வருடங்களில் (1958) தமிழர்களுக்கு இடப்பெயர்வு தென்னிலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. எழுபது வருட சுதந்திர வாழ்வில் அறுபது வருடங்களாக சொந்தத் தாய் நாட்டில் அகதி வாழ்வுடன் வலிதற்றவர்களாக ஏதிலிகளாக தமிழ் மக்கள் உள்ளனர்.

தற்போது பல கிராமங்கள் மீள் குடியேற்றத்துக்கு என அனுமதிக்கப்பட்டாலும் அந்தக் கிராமங்கள் புதுப்பொலிவுடன் முன்னைய நிலைமைகளுக்கு மீளத் திரும்பாத நிலைவரமே இன்னமும் காணப்படுகின்றது.

நீண்ட கால இடப்பெயர்வினால் பிற இடத்து வாழ்க்கை கணிசமான மக்களுக்கு இயல்பாக்கப்பட்டு விட்டது. மேலும், தற்போது சராசரியாக முப்பது வயதில் வாழும் சந்ததியினருக்குத் தமது, சொந்த ஊர் மண்ணின் வாசமே தெரியாதவர்களாகவே வாழ்கின்றனர்.

நல்லாட்சி அரசாங்கம் அரியணையில் அமர்ந்து, மூன்று வருடங்கள் பூர்த்தி ஆகியுள்ளன. ஆனால், முழுமையான மீள் குடியேற்றம் என்பது பூரணப்படுத்தப்படாமல் உள்ளது.

யாழ்ப்பாணத்தில் வலிவடக்கு, திருகோணமலையில் சம்பூர், முல்லைத்தீவில் கோப்பாபுலவு எனத் தமிழர் பிரதேசங்களாகிய எட்டு மாவட்டங்களிலும், இலக்கை எட்ட முடியாத நிலையில் மீள்குடியேற்றம் அன்னநடை பயில்கின்றது.

தலையிடியும் காய்ச்சலும் தனக்குத்தனக்கு வந்தாலே அதன் வேதனை புரியும். அதேபோல இடப்பெயர்வில் இடிபட்டவர்களுக்கே அதன் வலி புரியும்.

அண்மையில், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிப் புகையிரதத்தில் செல்கையில், அனுராதபுரத்தில் சகோதர இனத்தவர் ஒருவர் ஏறி (இணைந்து) கொண்டார். சில நிமிடங்களின் பின்னர், ஒரு புன்முறுவலுடன் எமது உரையாடல் ஆரம்பித்தது.

ஒரு சில சுய விவரங்களைப் பகிர்ந்து கொண்ட பின், மெல்ல அரசியலுக்குள் அவர் அடியெடுத்து வைத்தார். “தற்போது புலிகள் இல்லை; சண்டைகள் இல்லை; பொருட்கள் தட்டுப்பாடு இல்லை; கைதுகள் இல்லை என்றவாறு ‘இல்லாமை’ என்பது இல்லை” எனத் தொடர்ந்தார்.

மறுபுறம், “சமாதானம் மலர்ந்துள்ளது. மீள்குடியேற்றம் நடக்கின்றது. நல்லாட்சி நிலவுகின்றது” எனப் பொழிந்து தள்ளினார்.

“தற்போதும் தமிழ் மக்கள் மீளக் குடியேறாமல் அகதிவாழ்வு வாழ்கின்றனர்” என்றேன் நான் அமைதியாக.

அவருக்கு எனது பதில் தூக்கி வாரிப் போட்டது. “ஏன்? ஆயுதச் சண்டைகள் முடிந்தால், மக்களை அவர்களது இடங்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டுமே? ஏன் அவ்வாறு நடைபெறவில்லை” எனக் கேள்வி எழுப்பினார்.

“நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு கேந்திர முக்கியத்துவமான இடங்கள் என அடையாளமிடப்பட்ட இடங்களை சிறி லங்கா படையினர் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்” என்றேன்.

அவர் திகைப்படைந்தார்.

உரையாடல் தொடர்ந்தது. “எவ்வளவு காலம், மக்கள் தமது இடங்களை இழந்து வேறு இடங்களில் இருக்கின்றனர்” எனக் கேட்டார்.

“சுமார் முப்பது வருடங்களுக்கு மேல்” என்றேன்.

அப்போது அவரது கண்களில் சோகம் படர்ந்தது. அவருக்குத் தமிழ் மக்கள் மீது அன்பு பிறந்தது. இனம் புரியாத துன்பத்துக்கு ஆளானவர் போல ஆட்பட்டார்.

இதுவே உண்மையான களநிலவரம். கணிசமான சிங்கள மக்களுக்குத் தமிழ் மக்களது அவலங்கள் புரிய வைக்கப்படவில்லை; புரிய வைக்கப்படப் போவதும் இல்லை.

இங்கு எமது தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சின் வீச்சு, அவர்களது மூச்சைத் தொடவில்லையே என்ற ஏக்கமும் கவலையும் எனக்கு ஏற்பட்டது.

ஒரு குடும்பம் தூர இடத்துக்குப் பயனம் மேற்கொண்டு விட்டு, மீளத் தமது வீட்டுக்கு வந்து, பக்கத்து வீட்டில் கொடுத்த படலைத் திறப்பை வாங்கித் திறந்து கொண்டு உள்ளேநுழைவது போலவே, மீள்குடியேற்றம் குறித்த அவரது அறிவும் விளக்கமும் காணப்பட்டன.

மீள் குடியேற்றத்துக்காகத் தனது (முற்றிலும் உடைந்த, உடைக்கப்பட்ட) முற்றிலும் பற்றைகள் சூழ்ந்த தனது வீட்டை (கோவிலை) பார்க்க வரும் அப்பாவித் தமிழனின் ஏக்கமும் சோகமும் கலந்த நிலையை எவ்வாறு அவருக்கு விளக்குவது, எவ்வாறு புரியவைப்பது?

அவரதுநிலை, ஒருபக்கம் அப்பாவித்தனமாகத் தெரிந்தாலும் மறுபக்கம் எமது கையறுநிலை உணர்வும் மனதைத் தொட்டு விட்டுச் சென்றது.

அகிலத்தில் அனைத்து அம்சங்களையும் கையில் காணக்கூடிய வசதிகள் கூடிய இந்த உலகில் வாழ்கின்றோம். ஆனால், மிகச் சிறிய நாட்டில் பக்கத்து (அயல்) மாவட்டத்தில் நடக்கும் விடயத்தைத் தெரியாத பாமரனாகவே அவரைக் கண்டேன்.

ஏன் இவ்வாறு எனச் சற்று யோசிப்பின், உண்மைகள் உலகத்துக்கு உரத்துக் கூறப்பட்டிருக்கவில்லை. கூறப்பட்டிருப்பின் உண்மையான நல்லிணக்கம் அனைவர் மனங்களிலும் இயல்பாகத் தோன்றும். நம்நாட்டில் நல்லிணக்கம், இனவாதம் மற்றும் மதவாதம் என்ற முகமூடிக்குள் ஒழிந்து கொண்டு சீவியம் செய்கின்றது.

அடுத்து, ஒரு தொகைத் தமிழ் மக்கள் உள்நாட்டில் ஏற்பட்ட அனர்த்தங்களால் புலம்பெயர்ந்து வெளிநாடு சென்றனர். சராசரியாக பத்து இலட்சத்துக்கு மேற்பட்டோர் அவ்வாறாக இங்கிருந்து வெளியேறி விட்டனர். அவர்கள் பொருளாதார ரீதியாக வளமாக வாழ்ந்தாலும், தாயகத்தில் உள்ள மக்களது விடிவு இன்னமும் இருளில் இருப்பதையிட்டு மனக்குமுறல்கள் மனச்சோகங்களுடேனேயே வாழ்கின்றனர்.

தாய் நா(வீ)ட்டில் தம் மக்களுக்கு எதிராக நடக்கும் ஒவ்வோர் அலைகளும் புலம்பெயர்ந்தோர் தேசங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்துகின்றன.

இவ்வாறாக போர் ஓய்ந்தாலும் தமிழர் விழிகளில் ஈரம் காயவில்லை. இன்னல்களை மட்டுமே, தமிழர் இதயங்களில் நிரப்பிய இடப்பெயர்வு மகிழ்ச்சியை அவர்கள் மனங்களிலிருந்து நிரந்தரமாக அகழ்ந்து விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சினேகாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர் மோகன்ராஜா..!!
Next post `மாரி-2′ படத்துக்கு தயாராகும் தனுஷ்..!!