கிழக்கு.. கிழக்கு.. கிழக்கு.. அரசாங்கத்திடம் கேட்க வேண்டும்.. மக்களிடம் கூறவேண்டும்..

Read Time:19 Minute, 22 Second

கிழக்கு.. கிழக்கு.. கிழக்கு.. இப்போது உள்நாட்டில் வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் சரி, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற மக்கள் மத்தியிலும் சரி, சர்வதேசத்தின் நிலைப்பாட்டிலும் சரி ஒட்டுமொத்த கவனமும், பேச்சுக்களும் இதுவாகத் தான் இருக்கிறது. ஆனால் இந்தக் கவனம் என்பது உள்ளார்ந்ததாக அல்லாமல் வெறும் மேலோட்டமானதாக மட்டுமே இருக்கின்றது என்பது வருந்தத் தக்கதாகும். அண்மையில் கிழக்கு மாகாணத்தில் நடாத்தப்பட்ட தேர்தலும், அதன் மூலம் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் திருப்தியும், அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்திப் பணிகளுமே இப்பார்வைக்குக் காரணமாக அமைகின்றது. அண்மையில் ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று நான்கைந்து பேர் கிழக்கிற்கு வருகை தந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் மட்டக்களப்பு மாநகரசபை மேயர் சிவகீர்த்தா பிரபாகரனையும், கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களையும் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடியதும், லாவகமாக புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும், போகும் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து புகழாரம் சூட்டிவிட்டு போனதும் நடந்து முடிந்த கதை. இவர்கள் நடத்திய கலந்துரையாடல்களும், புகைப்படத்திற்கு கொடுத்த போஸ்களும், சூட்டிய புகழாரங்களும் வெறுமனே பத்திரிகைகளையும், சர்வதேச தேவையையும் மட்டும் நிரப்புவதாக மட்டும் அமைந்திருந்தது அவமானத்திற்குரியதாகும். பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்வாழ் மக்களின் பிரதிநிதிகளாக வந்த இந்தக் குழு வெறுமனே கலந்துரையாடலை மட்டும் நிகழ்த்திவிட்டு களநிலைகளை ஆய்வு செய்யாமல் போனது இவர்கள் உண்மையிலே புலம்பெயர்வாழ் பிரதிநிதிகள் தானா? என்ற சந்தேகங்களை கிளப்பியிருப்பதுடன், நிறைகளை புகழ்ந்து தள்ள மட்டும் தெரிந்த இவர்கள் குறைகள் குறித்து ஆராயாமல் போனதும் தவறுகளைச் சுட்டிக் காட்டாது விட்டதும் இவர்களை கூலிக்கு வேலை பார்க்கும் விளம்பர தாரர்களோ? என்கிற ஐயம் கிழக்கு புத்திஜீவிகள் மத்தியில் எழுந்துள்ளது.

கிழக்கில் நல்லது மட்டுமே நடப்பதாக, நல்லதைத் தவிர வேறெதுவுமே நடக்கவில்லை என்பதாக ஊடகங்களுக்கு பறைசாற்றி விட்டு இக்குழு நகர்ந்து விட்டது. இதனால் புலம்பெயர்ந்து வாழ் மக்கள் மத்தியிலும், கிழக்கைத் தவிர்ந்த ஏனைய இலங்கை வாழ்; மக்கள் மத்தியிலும் கிழக்கின் அபிவிருத்தி போதை மட்டுமே ஆட்கொண்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

ஆனால் கிழக்குப் பிரதேசத்தினை ஆழமாக ஊடறுத்து, உற்றுநோக்கிப் பார்க்கின்ற போது ஒரு பாரிய சதித்திட்டம் நிகழ்த்தப்படுகின்றதா? என்ற ஐயமும் ஏற்பட்டு வருவதுடன், அது மெது மெதுவாக வெளிச்சத்திற்கும் வந்து கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட்டதும், பின்னர் அதற்குப் பொறுப்பானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதும், அவர்களுக்கு பற்பல பொறுப்புக்களெல்லாம் கிடைக்கப் பெற்றுள்ளது போன்ற பாவனையும், பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாங்கள் முன்னெடுக்கிறோம் என்கிற எண்ணங்களும் ஏராள தாரளாமாக ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

விடியலைப் பெற்றுத் தருவோம், விமோசனம் பெற்றுத் தருவோம் எனக் கூறிய இவர்கள் மக்களுடைய சொந்த ஊதியத்திற்கான வழிகளை காட்டிக் கொடுப்பதைத் தவறவிட்டு, விளையாட்டு மைதானங்கள் அமைப்பதிலும், அடுத்த முதலமைச்சர்கள் மாநாட்டை அதிக ஆடம்பாரமாக நடத்தவது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இவற்றிலேயே இவர்கள் கண்ணுங்கருத்துமாக இருக்கிறார்கள். அல்லது கண்ணுங்கருத்துமாக்கப் பட்டிருக்கிறார்கள்.

ஜனாதிபதியும், அமைச்சர்களும் நல்லதைத் தான் சொல்லிக் கொடுப்பார்கள். அதற்காக அவர்கள் கூறுகின்ற எல்லாவற்றையும் நம்பவேண்டும். அவர்கள் சொல்லுகின்ற எல்லாவற்றையும் நம்பிக் கொண்டிருப்பது கூடாது. சொந்த மூளையும், சுயபுத்தியும் மிக மிக அவசியமானதாகும். அனுபவங்களே ஆசான்கள். வெறுமனே கூட இருப்பவர்கள் தலையாட்டச் சொல்கிறார்கள் என்பதற்காக தலையாட்டுவதென்பது கூடாது.

ஜனாதிபதியுடனும், அவருடைய சகோதரர்களுடனும் தற்போதைய முதலமைச்சரை விடவும் அதிகமாக நட்புக் கொண்டிருந்தவர் தான் கருணா. அவரைக் கையாடல் செய்தாரென்று சொல்ல வைத்ததும், நாட்டை விட்டு அனுப்பி வைப்பது போல் அனுப்பி வைத்து, சிறைவாழ்க்கையைப் பெற்றுக் கொடுத்ததும் மற்றவர்களுக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும். பணம் சூறையாடல் என்பது உண்மையா? பொய்யா? என்பது ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. அதனை ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தி இலங்கையிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் அவரை நாட்டை விட்டு வெளியேற்றி விட்டு சில நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். என்பதற்காகவே அக்காரியம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதேபோல், சாதாரண கடவுச்சீட்டு விவகாரத்திற்காக சிறையிலிருந்து விட்டு விடுதலையாகும் கருணாவை இலங்கைக்கு அழைத்து வருபது பற்றி எமக்கு எந்தக் தேவையும் கிடையாது என்று கூறி புறந்தள்ளியதும் சிந்திக்க வேண்டியதாகும். கருணா உண்மையிலேயே சகல விடயங்களும் அறிவுகொண்டு அரசாங்கத்தின் முழுப்பேச்சினையும் ஏற்றுக் கொள்ளாது உரிய தருணத்தில் மறுத்து வந்த ஒருவராக இருந்துள்ளார்.

ஆதலால் அவரை வைத்துக் கொண்டு தமது காய்நகர்த்தல்களைச் செய்ய முடியாது என்பதற்காக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளுக்குள்ளேயே முக்கியமான ஒரு சிலரை அரசாங்கம் தன்னுடைய உளவாளிகளாக, கைப்பொம்மைகளாக விலைக்கு வாங்கியிருந்தது. அவர்கள் மூலமாக கருணாவிற்கு எதிராக காய்களை நகர்த்தி, கருணாவே நம்பியிருந்த, அன்பு வைத்திருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முதனிலைத் தளபதியை, கருணாவிற்கெதிராக திருப்பி அதில் வெற்றியும் கண்டுள்ளனர் இன்றைய ஜனாதிபதியும் அவருடைய சகோதரர்களும்.

இதெல்லாம் இவ்வாக்கத்திற்குச் சம்பந்தமில்லாத கதையாக இருக்கலாம். ஆனால் அரசின் நம்பிக்கை என்பது குறித்து இது அவசியம் தேவைப்படுவதால் தேவையாகிறது. தற்போது கிழக்கில் முதலமைச்சராக வந்திருக்கும் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்கள் அடிக்கடி ஒரு விடயத்தை ஞாபகப்படுத்தி வந்த ஒரு விடயத்தை நினைவுகூர்ந்து விட்டு எமது விடயத்திற்கு வரலாம் என நினைக்கிறேன்.

அதாவது, அரசாங்கத்தை எதிர்த்து வெறும் வீராப்புப் பேசிக் கொண்டிருப்பதை விட, அரசாங்கத்துடன் தோழமையாக இருந்து கொண்டு அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்துவதையே நாங்கள் விரும்புகின்றோம் என்னும் கருத்தை பல தடவைகள் விபரித்திருக்கிறார். ஆனால் இதுவரையில் அரசாங்கத்தின் எந்தவொரு தவறினையும் இவர்கள் சுட்டிக்காட்டியது கிடையாது. எதற்காக என்று கேட்டதும் கிடையாது. ஒருவேளை அரசாங்கத்தின் தவறான எண்ணங்கள் புரியாமல் கூட இருக்கலாம். ஆதலால் அரசின் இத்தவறான எண்ணங்களுக்கான அடிப்படைகளை சுட்டிக்காட்டுவது நல்லதென நினைக்கிறேன்.

அதாவது, கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ரகசியமாகவும், பரகசியமாகவும் பேரினவாதக் கட்சிகளின் ஆதரவுடன் ஏற்படுத்தப்பட்டு வருவதாக மாற்றுத் தமிழ் அமைப்புக்கள் பரவலாகச் சுட்டிக்காட்டி வருகின்றன. அதற்காதாரமாகவே, கிழக்கு மாகாண சபையின் காணிகள் அமைச்சராக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கின்றார். இது குறித்து இதுவரைக்கும் முதலமைச்சர் அவதானித்ததாகவோ, செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்ததாகவோ தெரியவில்லை. ஏன் இந்த நிலை? இதுபற்றிக் கேட்டு அரசாங்கத்தின் மனக்கசப்பிற்கு ஆளாவதைவிட, சும்மா இருந்து கொண்டு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம் என்னும் எதிர்பார்ப்போ தெரியவில்லை.

ஆனால் இந்த அபிவிருத்திப் பணிகளெல்லாம் யாருக்காக? என்னும் கேள்வி வருகின்ற போது, அங்குள்ள குடியேற்றங்கள் குறித்த கேள்வியும் அவசியமாகின்றது. வெறுமனே வீறாப்பாக இதனைக் கேட்க வேண்டியதில்லை. சந்தர்ப்பம் வருகின்ற போது தோழமையுடன் மனம் கோணாமல் மெதுவாக கேட்டுப் பார்க்கலாம் தானே? ஏனெனில் அரசாங்கம் மக்களது கவனங்களை அபிவிருத்திகளிலும், சிறுசிறு பிரச்சினைகளிலும் திசைதிருப்பி விட்டு கிழக்குப் பிரதேசத்தின் காணிகளை சூறையாடுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது.

தூரநோக்குடனான, துல்லியமான செயற்திட்டங்களுடன் இதனை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இத்தூரநோக்குத் திட்டமானது எதிர்காலத்தில் கிழக்குப் பிரதேசங்களில் பெரும்பான்மை இனத்தவரது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவது அல்லது தமிழ் மக்களுடைய ஆதிக்கத்தை குறைக்கச் செய்வது என்பதாகவே அமைந்துள்ளது. இத்தேவையானது, கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போதே இவர்களுடைய கண்களுக்குள் அகப்பட்டிருந்தது. ஏனெனி;ல் இத்தேர்தலின் போது பெரிய பெரிய பெரும்பான்மைக் கட்சிகளெல்லாம் சிறுபான்மை கட்சிகளிடம் கையேந்த வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இதனையொரு குரோதத்துடனும், சவாலுடனும் ஏற்றுக் கொண்ட இப்பேரினவாதக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவே இந்த செயற்திட்டங்களாகும். அதற்காக கிழக்கு மக்களின் கவனங்களையெல்லாம் அபிவிருத்திகளில் திசைதிருப்பி, எதிர்காலக் கிழக்கில் சிங்களவர்களின் இருப்புக் குறித்து காய்களை நகர்த்தி வருகின்றது. ஆகவே பேரினவாதம் தனது சந்ததிகள் குறித்த கவலை கொள்;ளும் போது ஏன் நமது சந்ததிகள் குறித்து நாம் சிந்திக்கக் கூடாது? என்பதே இங்கு கேள்வியாகும்.

கிழக்குத் தமிழ் மக்கள் பாமர மக்களாக இருக்கிறார்கள் என்பது உண்மையானது தான். அதனால் தான் அரசியலே தெரியாதவர்களையெல்லாம், அரசியல் தெரிந்தவர்களாக எண்ணி அருகில் வைத்துக் கொண்டு அரசாங்கத்தின் சொல்லுக்கேற்ப நடந்து வருவதை அவதானிக்க முடிகின்றது. இதனால் இவர்கள் அரசியலில் ஒரு வரலாற்றுத் துரோகத்திற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அத்துடன் பேரினவாதிகளின் இத்திட்டம் செவ்வனே நிறைவேற்றப்பட்ட பின்பு அதனை மீண்டும் மாற்றியமைப்பதென்பது இயலாத காரியம் என்பதையும் இவர்கள் தெளிவாக உணர்ந்த கொள்ள வேண்டும். இந்த அபிவிருத்தியும் பிறவும் நிரந்தரமாக வேண்டுமானால் கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பும் மிகமுக்கியமானதாகும்;.

அப்பாவி கிழக்குத் தமிழர்கள் இது விடயத்தில் எதுவுமறியாதவர்களாக தானும் தன்பாடும் என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அபிவிருத்தித் திட்டங்களும், பொருளாதார முன்னேற்றங்களும் மக்கள் மத்தியில் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பொறுப்பானவர்கள் தெரிவிக்கிறார்கள். பொருளாதார முன்னேற்றம் என்று எதனை விபரிக்கிறார்களோ தெரியவில்லை. வாகரைப் பிரதேசங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் சிங்களவர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. 2இலட்சம், 3இலட்சம் ரூபாய்களுக்குக் கூட விற்கப்பட முடியாதிருந்த காணிகள் தற்போது 7இலட்சம், 8இலட்சம் ரூபாய்களுக்கு கொழும்பைச் சேர்ந்த சிங்களவர்களுக்கு விற்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இதன் மூலமாக வாகரைத் தமிழர்கள் பெருந்தொகையான காணிகளை விற்றுவிட்டுக் கிடைக்கின்ற பணங்களைக் கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ முட்படுகிறார்கள். இதுதான் இவர்களது பொருளாதார முன்னேற்றங்கள் போலும். இத்தமிழர்களுடைய காணிகளை இவர்கள் இவ்வளவு விலைகொடுத்து வாங்குவதன் அவசியம் அரசினதும், பேரினவாத சக்திகளினதும் துல்லியமான சதித்திட்டமேயாகும். இவ்வாறு ஒரு பிரதேசக் காணிகளை வாங்கியபின் அடுத்த நிலங்களை வாங்குவதற்கு பணங்கள் அவசியமில்லை. எல்லை வேலிகட்ட மட்டுமே பணங்கள் தேவை என்பதையும் இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அதேபோல், தொப்பிக்கல பிரதேசத்தை தனியான சிங்கள பிரதேச செயலகப் பிரிவொன்றாக மாற்றுவதற்கான திட்டங்களும் அரசாங்கத்தினால் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வருவகின்றது. அதன் ஆரம்பக்கட்டமாகவே கிழக்கின் இதயமாக கருதப்படுகின்ற தொப்பிக்கல பிரதேசத்தில் 200 இராணுவக் குடும்பங்களுக்கான காணிகளை அரசாங்கம் சட்ட ரீதியாக வழங்கியுள்ளதுடன், அதனை பழைய சிங்கள பூமியாகவும் அரசாங்கமும், இனவாதக் கட்சிகளும் சித்தரித்து வருகின்றன.

இத்திட்டங்களினால் தமிழ் மக்களுடைய அரசியலுக்கு ஆபத்து நேரமாட்டாது என்பது குறித்து தூரநோக்குடன் தங்களுடைய கருத்துக்களை கூறவேண்டியது உரியவர்களுடைய பொறுப்பாக அமைகின்றது. இல்லாது போனால் போராட்டத்திலும், அரசியலிலும் கூட தோல்விகண்ட சமூகமாக தமிழ் சமூகம் மாறிவிடும் அபாயம் உள்ளது. எதிர்காலத்தில் தமிழ் மக்களை செல்லாக் காசாக மாற்றிவிடும் அரசின் திட்டங்கள் என்று இங்கு குறிப்பிடுவதை கட்டாயம் தற்போது கிழக்கில் அதிகாரத்திலிருக்கின்றவர்கள் நிரூபிக்க வேண்டும். இல்லாது போனால் “பாலுக்கு காவலாக பூனையின் தோழன்” இருந்த கதை இவர்களின் கதையாக ஆகிவிடும்

அதிரடிக்காக.. திரு.செல்வபாரதி –மட்டுநகர்
ThankyouFor… WWW.ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 70வயது பெண் இரட்டை குழந்தை பெற்று கின்னஸ் சாதனை படைத்தார்
Next post ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதியாக முகாபே மீண்டும் பதவி ஏற்றார்