ஜிம்பாப்வே நாட்டு ஜனாதிபதியாக முகாபே மீண்டும் பதவி ஏற்றார்
ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் நடந்த தேர்தலில் எதிர்வேட்பாளர் இன்றி தன்னந்தனியாக போட்டியிட்டு வெற்றி பெற்ற ராபர்ட் முகாபே நேற்று ஜனாதிபதியாக மீண்டும் பதவி ஏற்றார். ஜிம்பாப்வே நாட்டில் கடந்த 27 ஆண்டுகளாக ஜனாதிபதியாக இருந்து வரும் ராபர்ட் முகாபேக்கு இப்போது 84 வயது ஆகிறது. இங்கிலாந்து நாட்டு மைனாரிட்டி வெள்ளைக்காரர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டுவதற்காக போராடினார். இதற்காக அவர் 10 ஆண்டு கால ஜெயில் தண்டனை பெற்றார். 7 ஆண்டு காலங்கள் சிறையில் கழித்த நிலையில், இங்கிலாந்து நாட்டுடன் பேச்சுவார்த்தை மூலம் உடன்பாடு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 1980-ம் ஆண்டு முதல் கறுப்பு பிரதமராக அவர் பதவி ஏற்றார். 2 முறை அந்த பதவியில் இருந்தபிறகு அவர் அரசியல் சட்டத்தை திருத்தி, 1990-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றார். இவரது ஆட்சிக்காலத்தில் பொருளாதார நிலை மோசம் அடைந்தது. உலகிலேயே பணவீக்கம் இந்த நாட்டில் தான் அதிகம். 1,65,000 சதவீதமாக அது இருக்கிறது. வறுமை, வேலை இல்லாத்திண்டாட்டம் ஆகியவை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் நாட்டை விட்டு அண்டை நாடுகளுக்கு தப்பி ஓடிவிட்டனர்.
மார்ச் மாத தேர்தலில்…
கடந்த மார்ச் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் முகாபேயை எதிர்த்து போட்டியிட்ட ட்ஸ்வங்கிராய், முகாபேக்கு முதல் முறையாக தோல்வியை கொடுத்தார். ஆனால் ஆட்சி அமைப்பதற்கு தேவையான அளவு முழு மெஜாரிட்டி அவருக்கு கிடைக்கவில்லை. இதனால் மறு ஓட்டுப்பதிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
இதில் ட்ஸ்வாங்கிராய் போட்டியிடவில்லை. முதல் ஓட்டுப்பதிவில் முகாபே வன்முறையை கட்டவிழ்த்து விட்டதால், இவரது கட்சி ஆதரவாளர்கள் 90 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போட்டியிட வில்லை என்று அவர் கூறிவிட்டார்.
பதவி ஏற்றார்
எதிர் தரப்பு போட்டியில்லாமல் தனி ஒருவராக தேர்தலை சந்தித்த முகாபே, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 85.5 சதவீத ஓட்டுக்கள் கிடைத்ததாக தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தேர்தல் கமிஷன், தேர்தல் முடிவை அறிவித்த ஒரு மணி நேரத்துக்கு பிறகு, அவர் புதிய ஜனாதிபதியாக பதவி ஏற்றார். பதவி ஏற்பு விழாவில் பேசியபோது, “எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பேன்” என்று அறிவித்தார். அவரது வெற்றி நியாயமற்றது என்று ஆப்பிரிக்க பார்வையாளர்கள் வர்ணித்தனர்.
Average Rating