தேர்தல் பரப்புரைகளுக்கு மக்கள் பதில் எப்படியிருக்கும்?

Read Time:20 Minute, 25 Second

“யானையைப் பூனையாக்குவேன்; பூனையை யானையாக்குவேன்” என்று, தேர்தல் களத்தில் அரசியல்வாதிகள் இப்போதும் பேசிக் கொண்டிருக்கையில், அர்ப்பணிப்புடனான அரசியலைப் பற்றி, ஜனாதிபதிகூடச் சொல்கிறார். இவற்றுக்கான முயற்சிகள் நடைபெறுகின்றனவா, அதற்கு என்ன வழி, எவ்வாறு அதை ஏற்படுத்தப் போகிறோம் என்பது எல்லோரிடமும் எழும் கேள்விதான்.

இந்த இடத்தில்தான் மும்முரமான நடைபெற்றுக் கொண்டிருக்கிற உள்ளூராட்சித் தேர்தல் முக்கியத்துவம் பெறுகிறது. நாட்டில் 60க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், கட்சிகள் சார்ந்தும் கட்சிகள் சாராமலும் போடு காய்களாகவும், எண்ணிக்கையில் அதிகமான சுயேட்சைக்குழுக்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றன.

யாரைத்திருப்திப்படுத்தினால் நமக்கு வாக்குக்கிடைக்கும் என்றுதான் எல்லோரும் நோக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கிற இன்றைய நிலையில், 11ஆம் திகதி மாலைக்கு முன் முடிவு கிடைத்துவிடும்தானே என்றும் திருப்திப் பட்டுக் கொள்ளவும் முடிகிறது.

அரசியலைக்கற்றுக் கொடுப்பதற்கு யாரும் முன்வராத வேளையில், நாம் மக்களிடம் சென்று கவனமாக வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். மேலை நாடுகள் உள்நாட்டு அரசியலைப்பற்றிக் கவலை கொள்ளாதிருக்கிற சூழலில், இப்போதும் நாம் அதைச்சீர் செய்யமுடியாமல்தான் காலம் கடத்துகிறோம்.

கடந்த காலங்களைப் பொறுத்தவரையில் தேர்தல்கள் முழுச்சுதந்திரமாக நடைபெற்றதா என்ற சந்தேகத்துக்கு மத்தியில், இப்போது நடைபெறுகின்ற தேர்தலை முழு ஜனநாயகத்துடனான தேர்தலாகப் பார்க்கலாம். அனைத்துக் கட்சிகளும் தேர்தல் களத்தில் இருக்கின்றன. விரும்பியவர்களெல்லாம் சுயேட்சையாகப் போட்டியிடுகிறார்கள். இப்படியானதொரு நிலை, இதுவரையில் இலங்கை நாட்டில், அதுவும் வடக்கு, கிழக்கில் சாத்தியப்பட்டிருக்கவேயில்லை.

அச்சம், விருப்பமின்மை, வெறுப்பு, கணக்கெடுக்காமை எனப் பல காரணங்களால் ஒருசில கட்சிகளே தேர்தலில் போட்டியிட்டு, மிகமிகக் குறைந்த வாக்குகளினால் வெற்றிபெற்ற நிலைமையில் இம்முறை மாற்றம் ஏற்படப்போகிறது.

வடக்கு, கிழக்குத்தான் எல்லோருக்கும் கண்ணில் போட்டுவிட்ட கந்தல். தமிழர் தரப்பு, தேர்தலைச் சர்வதேச அரசியலுடன் சேர்த்துக் கொண்டு பார்க்கிறது. இது உண்மைதானா அல்லது கற்பனையா என்ற கேள்விதான் இங்கு முதன்மையானது.

ஏழு தசாப்தத்துக்கு முந்திய இலங்கை, மேற்கத்தேய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்தது. அதற்கு முந்திய காலத்தில், அதாவது 1505ஆம் ஆண்டு, போர்த்துக்கேயர் இலங்கையில் கால்பதிக்கும்வரை இந்நாடு பிராந்திய மன்னர்களின் ஆட்சியில் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்திருக்கிறது.

குறுநில இராச்சியங்களில் தொடங்கி, பிராந்தியம் வரை மன்னராட்சி நிலவியிருக்கிறது. ஆங்கிலேயர், நமது நாட்டில் நடைபெற்ற சுதந்திரத்துக்கான போராட்டங்களை அடுத்து, ஏற்படுத்திக் கொடுத்த ஒருமித்த இலங்கை என்ற ஆட்சி, நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

சேர்த்துக் கொடுத்து, பிரித்து வைத்தல் என்ற பிரித்தாளும் தந்திரம், பலித்ததன் பயன் இன்றும், நாம் நாட்டுக்குள் சட்டையிட்டுக் கொண்டிருக்கிறோம். இது ஒருவகையில் பிரச்சினையில்லையென்றால் அரசியலில்லை என்பதற்குச் சமமானதே.

நாட்டில் நடந்து கொண்டே இருக்கும் தொடர் பிரச்சினைகளால், போர்த்துக்கேயரின் வருகையிலிருந்து தொடங்கிய ஏகாதிபத்தியவாதிகளின் கொலனித்துவ ஆட்சி முடிவுக்குவராமலேயே இருந்திருக்கலாம் என்று எண்ணுபவர்களும் இருப்பார்கள்.

இரண்டு மொழி, மூன்று இனம், நான்கு மதங்கள் என்று பிரிந்து கிடக்கிற இலங்கையில் பறங்கியர்கள், மலேயர்கள் என்று சிறு தொகுதியான இனங்களும் உள்ளன. தாம் உண்டு, தமது வேலையுண்டு என்றிருந்தாலும் பிரச்சினைகள் வந்தே தீருவதுதான் வாழ்க்கை.

இதேபோன்றுதான், இலங்கையில் நடைபெற்று வருகின்ற அரசியல் நிலைமைகளும் காட்சிதருகின்றன.
இலங்கையில், 1978க்குப் பின்னர் ஆரம்பமான ஆயுதக்கலாசாரம் 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இந்த முடிவு, தமிழ் மக்களின் நிரந்தரமான முடிவு என்றுதான் இலங்கையின் பெரும்பான்மையினர் எண்ணிக் கொண்டனர். அதன் பின்னரான முயற்சிகள் காரணமாக உருவாக்கப்பட்ட, பெரியதொரு தோற்றப்பாடு, இப்போது முன்னெடுக்கப்பட்ட வண்ணமிருக்கிறது.

தமிழர் பிரதேசம் என்று சொல்லப்படுகின்ற வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள், உள்ளூராட்சித் தேர்தலில் களம் இறங்கியிருக்கிற பல்வேறு கட்சிகளாலும் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் தமிழரது இரத்தத்தில் ஊறிப்போன விடயங்களிலிருந்து, அவர்கள் மாற்றத்துக்கு உட்படுவார்களா என்பது கேள்வி.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், தாம் போட்டியிடுகின்ற உள்ளூராட்சி சபைகள் அனைத்தையும் வெல்லக்கூடிய வாய்ப்புத் தமக்குத்தான் இருக்கிறது என்று மார்தட்டிக் கொள்ளும் தன்மை ஒன்று இருக்கிறது.

அதேநேரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்வைக்கப்பட்டுவரும் பல விமர்சனங்கள் மிகவும் கடுமையானவையாக இருக்கின்றன. குறிப்பாக, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் விவகாரம் முக்கியமானது.

அடுத்ததாக, இம்முறை நடைபெற்ற வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது, அதற்கு ஆதரவு வழங்குவதற்காக இருபது மில்லியன் ரூபாய், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டமை. அடுத்து, பிணைமுறி விவகாரத்தில் அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படாமை என்பவைகளாகும்.

ஆனாலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், இவ்வாறான பொய்த்தனமான விமர்சனங்களை முன்வைத்து, மக்களைக் குழப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவைகளைக் கண்டு மக்கள் குழம்புகின்றவர்கள் அல்ல; அவர்களுக்கு உண்மை நிலைமை தெரியும் என்பதே அவர்களின் பதிலாக இருக்கிறது.

இடைக்கால அறிக்கையைப் பொறுத்தவரையில், இடைக்கால அறிக்கை என்று சொல்லும் போது, நடவடிக்கைக்குழு விவாதித்து மேற்கொள்ளப்பட்ட ஓர் அறிக்கை. அந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதோ நிராகரிப்பதோ என்கின்ற கேள்விக்கே இடமில்லை.

அந்த நடவடிக்கைக் குழுவில் அங்கம் வகித்த கட்சிகள் அனைத்தும் சேர்ந்து, ஓர் இணைப்பு உருவாக்கியிருக்கின்றன. அந்த இணைப்பில், இது அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்ட அல்லது முழுமையான அறிக்கை இல்லை என்பது மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த அறிக்கை சம்மந்தப்பட்ட ஆறு குழுக்கள், ஆறு முக்கிய விடயங்கள் சம்மந்தமாக ஆராய்ந்து, ஆறு அறிக்கைகளைத் தயாரித்துள்ளன. இவ்வறிக்கைகள் விவாதிக்கப்பட்டு, இறுதி அறிக்கை ஒன்று தயாரிக்கப்படும்.

அந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதன் பின்புதான், அரசியல் வரைபு ஒன்று வரும். அந்த வரைபு வருகின்ற போதுதான், அதை ஏற்பதா, இல்லையா என்ற கேள்வி கேட்கப்படும்.

அதை ஏற்பதா, இல்லையா என்கின்ற கேள்வி வரும்போது, தமிழ் மக்களுக்கு ஏற்புடையதான ஒரு தீர்வாக இருந்தால் மாத்திரமே நாங்கள் அதை ஏற்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புச் சொல்கிறது.

ஆனால், அதற்கெதிராக விமர்சனங்களை முன்வைத்துவரும் தமிழ்த் தரப்புகள் தமிழ் மக்களுக்குப் பாதகமான அரசியல் தீர்வாகத்தான் இது இருக்கும்; இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளித்திருக்கிறது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருக்கின்றன.

அரசியலில், எதிர்த்தரப்பு என்று ஒருவரை அல்லது ஓர் அைமப்பைத் தீர்மானித்துவிட்டால், அதைப் பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்.
அது, தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் தமிழர் தரப்பிலிருந்துதான் தொடர்ந்த வண்ணமிருக்கிறது.

எதுஎப்படி இருப்பினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போதும் ஒரு பலமான கட்சியாக இருக்கின்றதா என்ற கேள்வியையும் கேட்டுக் கொள்ளத்தான் வேண்டும்.

அரச ஆதரவுக் கட்சிகளாக இருந்தாலும் சரி, சுயேட்சைக் குழுக்களாக இருந்தாலும் சரி அதைப் பலவீனப்படுத்துவதற்காகவே முயன்று வருகின்றனர் என்பது கண்கூடு.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி , தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இவை தவிர முன்னாள் விடுதலைப்புலிகளின் கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி கருணாவின் சுயேட்சைக்குழு, முன்னாள் வடக்கு, கிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப் பெருமாள் தலைமையிலான சுயேட்சைக் குழுக்கள் என இவைதவிர, ஏற்கெனவே வடக்கு, மலையகம் எனத் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றுப்போன ஒரு சில அரசியல் கட்சிகளின் சுயேட்சைக் குழுக்கள் எனத் தமிழர் பிரதேசங்களில் பெருந்தொகையான கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

ஆனாலும், அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதாகச் சர்வதேசத்துக்குக் கொடுத்திருக்கும் வாக்குறுதி நிறைவேற்றப்படுவதே, காலங்காலமாக நடத்தப்பட்டு வந்த, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்துக்குப் பிரதிபலனாக இருக்கும்.

அந்த வாக்குறுதியின் அடிப்படையில் தமது முன்னெடுப்புகளை நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கம் மிகமிக மெதுவாக முன்னெடுப்புகளில் ஈடுபட்டாலும் கூட, அதைத் தொடர்வோம்; அரசாங்கம் கவிழ்ந்தால், அது அவர்களின் பிரச்சினை. அது கவிழும் பட்சத்தில் சர்வதேசத்திடம் சென்று எமது பிரச்சினைக்கான உதவிகளைக் கேட்க முடியும் என்பது, கூட்டமைப்பின் நிலைப்பாடாகும்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலானது, உள்ளூர் அதிகாரங்களுக்கானது தானே; இதில், எதற்கு சர்வதேச அரசியல் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்த்தரப்பினருடைய கேள்வியாக இருக்கிறது. இது ஒருவகையில் சரியான கேள்வியே.

ஜனநாயகப் போராளிகள் போட்டியிடுகிறார்கள். பெண்கள், இளைஞர்கள் போட்டியிடுகிறார்கள். என்றாலும், வடக்கு, கிழக்கில் இருக்கிற காணி அபகரிப்பு, காணாமல் போனோர் பிரச்சினை, அரசியற் கைதிகள் பிரச்சினை, வேலையில்லாப் பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு, கடந்த ஆட்சி நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டு மூன்று வருடங்களாகியும் தீர்வைக் கண்டு கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த உள்ளூராட்சித் தேர்தலானது இறுதி நேரத்தில்தான் முடிவைச் சொல்லும் என்று நம்புவோம்.

வடக்கு, கிழக்கு மாகாணம் பூராகவும் உள்ள பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதென்பது, ஆண்டாண்டு காலமாக இருக்கின்ற பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருவதாகவே அமையும். அரசாங்கம் மிகமிக மெதுவாகத்தான் காரியங்களை ஆற்றிக் கொண்டிருக்கையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் என்ன முடியும் என்பதும் சந்தேகமானது.

தமிழர்களின் பிரச்சினை தொடர்பில் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்துக் கொண்டே, காலத்தைக் கடத்தும் அரசாங்கங்களிடம் காணி விடுவிப்புகள் பற்றிப் பேசப்படுகின்றன. முக்கியமாக, இப்போதும் சூடுபிடித்துக் கொண்டிருக்கும் கேப்பாப்பிலவில் ஒருவருடத்தை எட்டவுள்ள காணாமல் போனோர் தொடர்பான போராட்டம், அரசியற் கைதிகள் விவகாரம்.

தமிழர் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காணாமற் போனோர் பிரச்சினை தான் பெரிய பிரச்சினையாக இருந்து வருகின்றது. இந்த அரசு மாத்திரமல்ல எந்த அரசும் இவ்விடயத்தில் சரியான ஒரு பதிலைத் தரத் தயாரில்லை என்பதே உண்மை.

காணாமல் போனோர் அலுவலகம் திறப்பதற்கு வரவுசெலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அது சம்மந்தமான நடவடிக்கைகளும் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று மாத்திரம் நம்பிக்கை கொள்ளலாம்.

அரசாங்கத்திடம் மாத்திரமல்ல சர்வதேசத்திடமும் விடயங்களை எடுத்துக் கூறி, அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருப்பதால் எதை அடைந்து கொள்ள முடியும். அதேநேரத்தில், போராட்டங்களை நடத்தியும் எதனை அடைந்து கொள் ள முடியும் என்பதும் அடுத்த கேள்வி.

வேலையில்லாப் பிரச்சினை நாடு பூராகவும் இருந்தாலும் வடக்கு, கிழக்கில் அது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. சில வேளைகளில் மத்திய அரசாங்கத்தின் ஊடாகத் தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படுகின்ற நிலையும் இருக்கிறது. இவ்வாறான செயற்பாடுகளால் தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையீனங்கள் ஏற்படுகின்றன. இவை களையப்படுதல் முக்கியமாகும்.

பிணைமுறி விடயம் தொடர்பில் குற்றவாளிகள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டைத் தவிர, வேறு எந்த முடிவிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லை என்று தான் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

எது எவ்வாறானாலும், உள்ளூராட்சித் தேர்தலில் 25 சதவீதமான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துதல், வட்டாரங்களின் பிரதிநிதித்துவம், விகிதாசாரத்துக்கான நியமன வேட்பாளர்களைத் தெரிவு செய்தல் என்றெல்லாம் இருக்கின்ற இந்த உள்ளூராட்சித் தேர்தலில், தமிழர் தரப்பின் உரிமை சார்ந்த போராட்டம் எவ்வாறு நின்று பிடிக்கப் போகிறது என்பதே எதிர்பார்ப்பு.

பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்புகள், போக்குவரத்து வசதி வளர்ச்சி, கல்வி முன்னேற்றம், சமூக முன்னேற்றங்கள் என்று வரிசைப்படுத்திக் கொண்டு செல்லக்கூடிய பட்டியலில், நுழைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விடுமா? அல்லது மீண்டும் ஒருமுறை, தேர்தல் வரும்போதுதான் அரசியல்வாதியைக் காணப்போகின்றோமா என்ற சாதாரண வாக்காளர்களின் கேள்விக்கும் பதில் கிடைக்கட்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 24 இலட்சம் பெறுமதியுடைய தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட பெண் கைது!!
Next post நேர்மறை எண்ணங்கள் ஆயுளை வளர்க்கும்!!