மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் துருக்கி தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தார்; உயிருக்கு பாதுகாப்பில்லை என்று அறிவிப்பு
மலேசியா முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம், உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி துருக்கி தூதரகத்தில் தஞ்சம் புகுந்தார். அதோடு தன் மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறியவரிடம் நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். மலேசிய முன்னாள் துணைப்பிரதமர் அன்வர் இப்ராகிம் மீது செக்ஸ் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. அவரது உதவியாளராக இருந்த 23 வயது சைபுல் புகாரி அஸ்லன் கூறினார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினார்கள். இந்த குற்றச்சாட்டை மறுத்த அன்வர், இது அரசியல் காரணமாக கூறப்பட்டு உள்ள பொய்ப்புகார் என்று மறுத்து இருக்கிறார். இந்த நிலையில் அவர் தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருப்பதாகவும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் கூறி, கோலாலம்பூரில் உள்ள துருக்கி தூதரகத்தில் அவர் தஞ்சம் புகுந்தார். பிரதமர் படாவி, தனிப்பட்ட முறையில், அவரது பாதுகாப்புக்கு கியாரண்டி அளித்தால்தான் அவர் தூதரகத்தை விட்டு வெளியே வருவார் என்று அவர் மனைவி வான் அசிசா வான் இஸ்மாயில் தெரிவித்தார். அவர் போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார் என்றும் அவர் கூறினார். துருக்கி நாட்டு அரசாங்கத்துக்கு பொருளாதார ஆலோசகராக நான் இருக்கிறேன். இதனால் துருக்கி நாட்டு தூதர் அழைப்பின்பேரிலேயே நான் அந்த நாட்டு தூதரகத்தில் அடைக்கலம் புகுந்தேன் என்று அன்வர் இப்ராகிம் தெரிவித்தார். மாலையில் அவர் தூதரகத்தை விட்டு வெளியேறினார். இதற்கிடையில் மலேசிய வெளிநாட்டு மந்திரி ரால்ஸ் யாதிம், துருக்கி தூதரை தன் அலுவலகத்துக்கு வரவழைத்து உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதாக கூறி கண்டனம் தெரிவித்தார்.
Average Rating