விம்பிள்டன் டென்னிஸ் 2008: மகளிர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் தோல்வி..
இங்கிலாந்தின் இலண்டன் மாநகரில் இடம்பெற்றுவரும் வருடத்தின் 3வது கிராண்டஸ்லாம் டென்னிஸ் போட்டிகளான விம்பிள்டனில், மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஆட்டமொன்றில் உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான சேர்பியாவின் எலீனா ஜன்கோவிச் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். விம்பிள்டன் தரவரிசையில் இடம்பெறாத தாய்லாந்தின் தாமரைன் தானாசுகர்ன் உடன் நேற்று இடம்பெற்ற 4வது சுற்று ஆட்டத்தில் மோதிய ஜன்கோவிச் 3-6, 2-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இதன் மூலம், கடந்த விமபிள்டன் போட்டிகளில் வெளியேறியது போல் இம்முறையும் 4வது சுற்றுடன் ஜான்கோவிக் வெளியேறுகிறார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீராங்கனைகள் சேர்பியாவின் அனா இவானோவிச், ரஷ்யாவின் மரியா ஷரபோவா, ரஷ்யாவின் குட்நட்சோவா மற்றும் இந்தியாவின் சானியா மிர்ஷா ஆகியோர் ஏற்கனவே அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறி உள்ளனர். மகளிர் ஒற்றையர் பிரிவில் தற்போது அமெரிக்க சகோதரிகள் வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் ஆகியோரே முன்னணி வீராங்கனைகளாக உள்ளனர். இவர்களுக்கு கிண்ணம் வெல்லும் வாய்ப்புக்கள் அதிகம். 4வது சுற்று ஆட்டமொன்வில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம், ரஷ்யாவின் அலிசாவை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் எளிதாக வீழ்த்தினார். தானாசுகர்ன், வீனஸ், செரீனா ஆகியோர் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர். தாய்லாந்து வீராங்கனையான தானாசுகர்ன் காலிறுதிக்கு முன்னேறிய முதலாவது ஆசியப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதனிடையே, ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கடந்த 5 ஆண்டுகளாக விம்பிள்டன் பட்டம் வென்றுள்ள சுவிற்சலாந்தின் ரொஜர் பெடரர் தகுதி பெற்றார். நேற்று நடந்த 4வது சுற்று ஆட்டத்தில் அவர் 7-6, 6-2, 6-4 என்ற நேர் செட்களில் அவுஸ்திரேலியாவின் லேடன் ஹெவிட்டை வீழ்த்தினார்.
Average Rating