இறுதிப்போருக்காக பாரிய அழிவை ஏற்படுத்தும் புதிய ஆயுதம் தயாரிப்பு

Read Time:8 Minute, 21 Second

வடக்கில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிக் களப்பிரதேசமாகிய வன்னிக்காடுகளைத் தற்போது அரசபடையினர் முற்றுமுழுதாகச் சுற்றிவளைத்திருப்பதாகவும் இவ்வாறு சுற்றிவர நிலைகொண்டிருக்கும் களமுனைகளிலிருந்து நாளுக்குநாள் புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள மத்திய வன்னிக் கேந்திர நிலையங்களை நோக்கிச் சிறிதுசிறிதாக அரசபடையினர் முன்னேறி வருவதாகவும் இதனால் வன்னிப்பிரதேசங்கள் படிப்படியாக அரசபடையினரின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் பாதுகாப்புத்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், முகமாலை மற்றும் நாகர்கோவில் பிரதேசங்களில் பாதுகாப்பு முன்னரண் களமுனைகளில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையேயான மோதல்கள் குறைந்திருந்தாலும் வெலிஓயா, வவுனியா, மன்னார் பிரதேசங்களில் அரசபடையணிகளுக்கும் புலிகள் இயக்கத்தினருக்கும் இடையே பயங்கரமோதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தத் தாக்குதல் நடவடிக்கைகளின் போது அரச விமானப்படையினர் இராணுவத்தினருக்கு உதவியாக தீவிர விமானத்தாக்குதல்களைத் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றனர். இதன்விளைவாக அண்மையில் கடந்த 23 ஆம் திகதி மேற்படி ஒரு களமுனைப் பகுதியில் புலிகள் இயக்கத்தின் எஞ்சியிருக்கும் படைத்தலைவர்களில் முக்கிய தளபதியாகக் கருதப்படுபவரும் லெப்டினன்ட் கேணல் என்னும் பதவிப்பெயர் உடையவருமான சாரங்கன் அல்லது கரன் எனப்படும் தளபதியும் கொல்லப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குணதாஸ் சிறீதரன் எனப்படும் இயற்பெயருடைய மேற்படி பிரதான தளபதி கொல்லப்பட்டது பற்றிய தகவலையும் புலிகள் இயக்கம் மறைத்துவிட்டது. மேற்படி தளபதி சாரங்கன் அல்லது கரன் உயிரிழந்தார் என்பதை மட்டும் தெரிவித்த புலிகள் இயக்கத்தின் ஊடகத்தரப்பு அவர் எவ்வாறு எங்கே உயிரிழந்தார் என்ற தகவல்களை முற்றாக மறைத்துவிட்டது.

இவ்வாறு நாளுக்கு நாள் வடக்கில் மேற்படி புலிகளின் கேந்திர வன்னிப்பிரதேசங்களில் அரசபடையினரின் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டு சிறிதுசிறிதாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களைக் கைப்பற்றி சாவதானமாக முன்னேறிவரும்நிலையில் புலிகள் இயக்கத் தலைமைத்துவம் மேற்படி வன்னிப்பிரதேசங்கள் தொடர்ந்தும் தமது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகக் கூறிவருகின்றனர். மேலும் இவ்வாறு தொடர்ந்து பிரதேசங்களை இழக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதை அறிந்து அதைத் தடுப்பதற்காக அரசபடையினர் மீது தாக்குதல்களை மேற்கொள்ளப் புதிய திட்டங்களைத் தயாரித்துள்ளதாகவும் வன்னித்தரப்பு தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, அண்மைக்காலங்களில் அரசபடையினரின் தாக்குதல்களுக்கு புலிகள் முகம்கொடுக்க முடியாமல் பின்வாங்கிவருவதனால் புலிகளின் பிரதேசங்கள் அரசபடையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துகொண்டிருப்பதை வெளிஉலகத்துக்கு மறைப்பதற்காகவும் வன்னியில் அனைத்துப் பிரதேசங்களும் தமது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது எனவும், வன்னியின் பிரதான நகரங்களாகிய கிளிநொச்சி,முல்லைத்தீவு உட்பட வன்னியின் கேந்திரப் பிரதேசங்கள் பதற்றமின்றி வழமைநிலையிலேயே இயங்கிக்கொண்டிருக்கிறது எனப் போலியாகக் காட்டுவதற்காகவும் சில பொதுநிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்துவருகின்றனர். இந்தவகையில் அண்மையில் கிளிநொச்சியில் தமிழீழ வங்கியை புலிகள் இயக்கம் திறந்துவைத்துள்ளது.

யுத்தபீதி காரணமாக ஒதுங்கிப் பதுங்கி வாழும் வன்னிப்பிரதேச மக்கள் இந்த வங்கித் திறப்பு விழாவில் பெரும் எண்ணிக்கையில் சமுகமளிக்காவிட்டாலும் புலிகள் இயக்கத்தின் நிதிப்பிரிவுத் தலைவர்கள் உட்பட முன்னணித் தளபதிகள் அதில் பங்குபற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி புலிகளின் தமிழீழ வங்கி கிளிநொச்சியில் திருவையாறுப் பகுதியிலுள்ள மகாவித்தியாலய நிலையத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்தத் திறப்புவிழா முருகவேல் எனப்படும் புலிகள் இயக்கப் பிரமுகர் தலைமையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் தமிழீழ வங்கியில் ரூ.10,000 /= க்கு மேற்பட்ட பணத்தொகையை வைப்புச்செய்த வாடிக்கையாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன. மேலும் இந்தத் திறப்புவிழா நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் மாணவியருக்கு பணவைப்புக் கணக்குப் புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு புலிகள் இயக்கத் தலைமைத்துவம் வன்னிப்பிரதேசத்தில் படையினரின் தீவிர தாக்குதல்களும் உறுதியான படைநகர்வுகளும் நிகழ்ந்துவரும் நிலையில் பொதுநிகழ்ச்சிகளை நடத்தி வெளிஉலகத்தை ஏமாற்றும் உபாயத்தைக் கடைப்பிடித்துவரும் அதேவேளை படையினருக்கு எதிரான தாக்குதல்களுக்கும் புதிய உபாயங்களைத் திட்டமிட்டுவருகிறது. இதற்கேற்ப அண்மையில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி படையினருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தும் வகையில் புதிய ஆயுதம் ஒன்றைத் தயாரித்துள்ளதாகவும் பாதுகாப்புப் புலனாய்வுத்துறைத் தரப்பிலிருந்து தெரியவந்துள்ளது. தற்போது இருதரப்பு மோதல்களும் தீவிரநிலையடைந்திருக்கும் வேளையில் முல்லைத்தீவுப் பிரதேசத்தில் புலிகள் இயக்கத்தினரின் இறுதிச் சமர் நிகழலாம் எனத் தெரியவருகிறது. இந்த இறுதிச்சமரில் பயன்படுத்துவதற்காகவே பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி மேற்படி புதிய அழிவாயுதத்தைத் தயாரித்திருப்பதாக கிடைத்துள்ள தகவல்களுக்கேற்ப இந்தப் புதிய ஆயுதங்கள் இரசாயன வெடிப்பை ஏற்படுத்தி படையினருக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம் எனவும் புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

One thought on “இறுதிப்போருக்காக பாரிய அழிவை ஏற்படுத்தும் புதிய ஆயுதம் தயாரிப்பு

Leave a Reply

Previous post எட்டுமாத குழந்தையை கொலை செய்வதாக கூறி தாயை வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் தலைமறைவு
Next post தொழிலாளர்களின் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்