மாகாண எல்லை மீள்நிர்ணயமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும்!

Read Time:20 Minute, 1 Second

உள்ளூராட்சித் தேர்தல் முறைமையின் தெளிவின்மை மற்றும் அதனது முடிவுகளால் ஏற்பட்டுள்ள சிக்கல்நிலை எல்லாம் இன்னும் தீர்ந்தபாடில்லை.

தேசிய அரசியலில், கூட்டாட்சி நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ள ஒரு சூழ்நிலையில், உள்ளூர் அதிகார சபைகளிலும் கூட்டாட்சியை நிறுவுவது, எந்தளவுக்கு புத்திசாலித்தனமானது என்ற கேள்விக்கு விடைகாண வேண்டியிருக்கின்றது.

இந்தப் பின்னணியில், மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள தொகுதிகள் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பில், கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இப்போது ஏற்பட்டிருக்கின்றது.

குறிப்பாக, ‘எல்லா பஸ்களையும் போக விட்டுவிட்டு, பின்னால் நின்று கைகாட்டுகின்ற’ சமூகமாக மாறிவிட்டிருக்கின்ற முஸ்லிம்கள், இதில் கூடிய அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கின்றது.
நாட்டில், புதிய கலப்புத் தேர்தல் முறைமையின் கீழ், வட்டார, விகிதாசார அடிப்படையிலான உள்ளூராட்சி மன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கின்றது.

இந்தத் தேர்தல் முறைமை, முஸ்லிம்களின் குறிப்பாக, வடக்கு, கிழக்குக்கு வெளியிலுள்ள முஸ்லிம்களின் உள்ளூர் அதிகார சபை பிரதிநிதித்துவத்தை எந்தளவுக்குப் பாதித்துள்ளது என்பதையும் நாட்டில், பரவலாக முஸ்லிம் பிரதேசங்களில் ஆட்சியமைப்பதில், எவ்வாறான சிக்கலை ஏற்படுத்தியிருக்கின்றது என்பதையும் நாமறிவோம்.

இந்த நிலைமையில், கிட்டத்தட்ட இதே பண்பியல்பைக் கொண்ட, ஒரு தேர்தல் முறைமை ஒன்றின் கீழ், மாகாண சபைகளுக்கான தேர்தலானது, தொகுதி அடிப்படையில் இடம்பெறுமாயின், அது எந்தளவுக்கு முஸ்லிம்களின் பிரதிநிதித்துவ அரசியலை சிக்கலுக்குள் சிக்கவைக்கும் என்பதற்கு, இந்த உள்ளூராட்சி தேர்தலில் பெற்ற அனுபவமே நமக்குப் போதுமானதாகும்.

மாகாண சபை தேர்தலில் மட்டுமல்ல, அதற்குப் பிறகு நடைபெறும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும், இதேபோன்றதொரு சிக்கலை, முஸ்லிம்கள் எதிர்கொள்ள நேரிடும் என்பது கவனத்துக்குரியது.

மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்காக, நான்கு மாதங்களுக்கு முன்னர், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட மாகாணங்களில் உள்ள தொகுதிகள், தேர்தல் மாவட்டங்களை மீள்நிர்ணயம் செய்யும் குழு, தனது இறுதி அறிக்கையை தயாரித்திருக்கின்றது.

இந்த அறிக்கை, இம்மாதம் 19ஆம் திகதி, உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த அறிக்கை, குறித்தொதுக்கப்பட்ட காலப் பகுதிக்குள் தயாரிக்கப்பட்டமை தொடர்பில் அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஆனால், அதில் உள்ள சிபாரிசுகள் எங்ஙனம் அமைந்துள்ளன என்பதைப் பொறுத்தே, முஸ்லிம்கள் சந்தோசப்படுவதா இல்லையா என்ற முடிவுக்கு வரவேண்டி இருக்கின்றது.

இவ்வறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள சிபாரிசுகளில், திருத்தங்களை மேற்கொள்ள வேண்டி ஏற்படும் என்பதில், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் உடன்பாடு கண்டிருந்தாலும், அதில் குறைந்தளவான திருத்தங்கள் மேற்கொள்ளப்படச் செய்வதற்காகவும், முரண்பாடுகளைக் குறைப்பதற்காகவும் இவ்வறிக்கையை நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்க முன்னதாக, சர்வகட்சிக் கூட்டம் ஒன்றைக் கூட்டி, அதில் இது குறித்துக் கலந்துரையாடுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா திட்டமிட்டுள்ளார்.

சர்வகட்சிக் கூட்டம் நிறைவடைந்ததும், வர்த்தமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக, மாகாண சபைகளுக்கான எல்லை மீள்நிர்ணய இறுதி முன்மொழிவுகள், பொதுமக்கள் பார்வைக்காகப் பிரசுரிக்கப்படும்.

அதன்பிறகு, நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டு, இது நிறைவேற்றப்படும். ஆனால்,வர்த்தமானி அறிவித்தல் வெளியாவதற்கும் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுவதற்கும் இடைப்பட்ட காலம் குறுகிய காலமாக இருப்பதற்கே சாத்தியங்கள் உள்ளன.

எனவே இப்போதிருந்தே, இது விடயத்தில் முஸ்லிம் அரசியல்வாதிகளும் மக்களும் விழிப்புடன் பணியாற்ற வேண்டியிருக்கின்றது.

கடந்த காலத்தில், எத்தனை சந்தர்ப்பங்களை முஸ்லிம் சமூகம் தவறவிட்டுவிட்டு, பின்னர் கைசேதப்பட்டிருக்கின்றது என்பது நமக்குத் தெரியும். உள்ளூராட்சித் தேர்தல் முறைமையும் அதில் ஒன்றுதான்.

இதற்கு முன்னதாக, 18ஆவது திருத்தம், நிறைவேற்ற முடியாமல் போன 20ஆவது திருத்தம், உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டம், முஸ்லிம்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்காத அரசமைப்பு மறுசீரமைப்புக்கான இடைக்கால அறிக்கை என்று எத்தனையோ விடயங்களைச் சொல்லலாம். எனவே, இனியும் இவ்வாறான வாய்ப்பைத் தவற விடக் கூடாது.

பெருந்தேசியக் கட்சிகளுக்கு, நல்ல பிள்ளையாகத் தம்மை காட்டிக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ, அரசாங்கத்துடன் முகத்தை முறித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவோ, முக்கியமான சட்டமூலங்கள், திருத்தங்கள், தேர்தல் முறைமைகள் நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வரப்படுகின்ற வேளையில், அதேபோன்று மாகாண சபைகளுக்கு அங்கிகாரத்துக்காக விடப்படுகின்ற வேளையில், முஸ்லிம் கட்சித் தலைவர்களும் அமைச்சர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் அதுபற்றிய பூரண அறிவோ, விளக்கமோ இல்லாமல் கண்ணைமூடிக் கொண்டு, கையை உயர்த்துகின்ற போக்குகளை முஸ்லிம் மக்கள் தொடர்ச்சியாக அவதானித்து வருகின்றார்கள்.

மாகாணசபை எல்லை மீள்நிர்ணயம் மற்றும் அதற்குப் பின்னரான சட்டவாக்க நடவடிக்கைகளில், அவ்வாறான ஒரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலையடுத்து, தேசிய அரசியலில் இன்று ஏற்பட்டிருக்கின்ற நெருக்கடிகளை வைத்துப் பார்க்கின்ற போது, மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்துவதற்கு துணியுமா என்ற கேள்வி எழுவது இயல்புதான்.

ஆனால், எல்லை மீள்நிர்ணய பணிகள் முடிவடைந்து விட்டால், அதற்குப் பிறகு, வேறு எந்தக் காரணத்தைச் சொல்லியும் அரசாங்கம் தேர்தலை இழுத்தடிக்க முடியாது. இத்தகைய நிர்ப்பந்தம் வரும்போது, இன்னும் சில மாதங்களில் தேர்தலை நடத்தியே ஆக வேண்டி ஏற்படும்.

தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஏற்கெனவே தேர்தல் நடத்த வேண்டும் என்ற அழைப்பை விடுக்கத் தொடங்கி விட்டனர். ஆகவே, ஓர் ஆரோக்கியமான சமூகம், எல்லை மீள்நிர்ணய விடயத்தில் அசட்டையாக இருக்க முடியாது.

புதிய தேர்தல் முறைமைகள், கொண்டு வரப்பட்டதற்கு இணங்கவே எல்லை மறுசீரமைப்பு அல்லது மீள் வரையறை செய்யும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு முன்னர், வட்டார மற்றும் உள்ளூராட்சி மன்ற எல்லைகள் மீள்நிர்ணயம் செய்யப்பட்டன. இதைப் பெரிதாக முஸ்லிம்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
பின்னர், வட்டார மீள்நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்ட வேளையில்தான், அதன் உள்ளடக்கம் புரிந்தது. பல விடயங்களில் சமச்சீர் இன்மைகள் காணப்பட்டன.

சபை உறுப்பினர்களின் எண்ணிக்கை உட்படப் பல விடயங்களில் முரண்பாடு இருந்தது. இது போதாது என்று, கலப்பு முறையிலும் தேர்தல் நடந்தது. இதனால், இரண்டு விதமான அடிப்படையில் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள் என்று கூறலாம்.

அந்த அடிப்படையிலேயே மாகாண சபை தேர்தல் விடயத்திலும் முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டு விடுவார்களோ என்ற நியாயமான அச்சம் இப்போது சமூக செயற்பாட்டாளர்களிடையே ஏற்பட்டிருக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்ட குழப்பங்களில் இருந்து, இன்னும் மீளாத முஸ்லிம் சமூகம், மாகாண சபைகளுக்கான தேர்தல் முறைமை மற்றும் தொகுதிகளின் எல்லை மீள்நிர்ணயம் என்பவற்றிலும் கவனம் செலுத்துவதற்கு முன்னரே, நமது கையை மீறி, எல்லாம் போய்விடுமா என்ற எண்ணமும் எழுகின்றது.

உள்ளூராட்சித் தேர்தலில் வட்டார எல்லைகளும் பல வட்டாரங்களை உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்ற எல்லைகளும் மீள்வரையறை செய்யப்பட்டு, அதற்குள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அவ்வாறே மாகாண சபைத் தேர்தலுக்காக, தொகுதிகளினதும், தொகுதிகளை உள்ளடக்கியதான தேர்தல் மாவட்டங்களினதும் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யும் பணிகளே இப்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன.

இதற்காக நியமிக்கப்பட்ட குழு எல்லை மீள்நிர்ணய சிபாரிசுகள் அடங்கிய அறிக்கையை விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கையளித்துள்ளது. அந்த அறிக்கை, திருத்தங்களுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படுவது மட்டுமே மீதமாக உள்ளது.

கலப்புத் தேர்தல் முறைமை ஒருபுறமிருக்கத் தக்கதாக, வட்டாரப் பிரிப்பு நடவடிக்கையின் போதும் முஸ்லிம்களுக்கு பெரும் அநீதிகள் இழைக்கப்பட்டன.

அவ்வாறே, தொகுதிப் பிரிப்பு விடயத்திலும், முஸ்லிம்களின் அபிலாஷைகள் உள்வாங்கப்படவில்லை என்ற தகவல்கள் கசிந்துள்ளன.

இந்த எல்லை மீள்நிர்ணயக் குழுவில் முஸ்லிம்கள் சார்பில் பேராசிரியர் எஸ்.எச். ஹஸ்புல்லா நியமிக்கப்பட்டிருந்த போதும் அவருடைய சிபாரிசுகள், குழுவின் சிபாரிசாக உள்ளடக்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்ததாகவும், இவ்வாறு முஸ்லிம்களின் விடயங்கள் கண்டுகொள்ளப்படாத சூழலில், பேராசிரியர் ஹஸ்புல்லா, தனியான ஓர் அறிக்கை இணைப்பைக் கொடுத்துள்ளதாகவும் நம்பமாகத் தெரியவருகின்றது.

அப்படியாயின், மாகாண எல்லை மீள்நிர்ணயத்தின் போது, முஸ்லிம்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டு விடுமோ என்கின்ற பயம், மேலும் ஊர்ஜிதமாகின்றது.

அதாவது, புதிய தொகுதி மற்றும் தேர்தல் மாவட்ட எல்லை மீள் நிர்ணயங்களின்போது, முஸ்லிம்களுக்குச் சாதகமில்லாத விதத்தில், எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட நிறையவே வாய்ப்பிருக்கின்றது என்பதை, இலங்கையில் இருக்கின்ற அனைத்து முஸ்லிம்களும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலுக்காக, தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டத்தை மீள் வரையறை செய்யும் நடவடிக்கையே இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.

அந்த அடிப்படையில், வடக்கு, கிழக்கில் உள்ள சிறுபான்மைச் சமூகங்களை முதன்மைப்படுத்தியும் சிங்கள சமூகத்துக்கும் உரிய பங்கை வழங்கும் விதத்திலும் தொகுதிகள் மீள்வரையறை செய்யப்பட வேண்டும்.

குறிப்பாகத் தமிழர்களின் உறுப்பினர்களை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது முஸ்லிம்களின் உறுப்பினர்களை அதிகரித்தால் மட்டும் போதும் என்ற நினைப்பிலோ மேற்கொள்ளப்படும் மீள்நிர்ணய நடவடிக்கையை, நியாயமான செயன்முறை என்று கூற முடியாது.

ஆனால், அவ்வாறுதான் இந்த மீள் நிர்ணயம் அமையும் சாத்தியமிருப்பதாக ஐயம்கொள்ள முடியும்.
குறிப்பாக, முஸ்லிம் பிரதேசங்கள், தொகுதிக்குள் இணைக்கப்படும் விதமும், முஸ்லிம் பிரதேசங்கள் தமிழ், சிங்களப் பிரதேசங்களுடன் இணைக்கப்பட்டு, ஒரு தொகுதியாக வரையறை செய்யப்படும் விதமும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவங்களை வெகுவாகப் பாதிக்கும்.

குறைந்த வாக்குகளைக் கொண்ட இரு முஸ்லிம் பிரதேசங்களை விட, அதிக வாக்குகளைக் கொண்ட வேறு இனம் வாழும் பிரதேசம் ஒன்று, புதிதாக இணைக்கப்படுமாயின் முஸ்லிம்களின் மாகாண சபை உறுப்புரிமை கேள்விக்குறியாகும். அதேபோல், சில முஸ்லிம் பிரதேசங்களை வேறு இனங்களைச் சேர்ந்த மக்களுடன் இணைக்கும் போது, அங்கு அந்த முஸ்லிம் மக்களின் அரசியல் அதிகாரமும் இனத்துவ அடையாளமும் நசுக்கப்படுவதே நடைமுறை யதார்த்தமாக இருக்கும்.

சிங்கள மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் எண்ணிக்கையில் குறைவாக முஸ்லிம்கள் வாழ்ந்தாலும், இதுவரை காலமும் அவர்களது பிரதிநிதித்துவங்கள் ஓரளவுக்கு உறுதிசெய்யப்பட்டு வந்தன.
ஆனால், முஸ்லிம் சிற்றூர்கள் ஒரு தனித் தொகுதியாக நிர்ணயிக்கப்படாமல் சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களுடன் இணைக்கப்படுமாயின், அந்த முஸ்லிம்களுக்கு, அரசியல் பிரதிநிதித்தவம் இல்லாது போய்விடும்.

இம்முறை, உள்ளூராட்சி சபை தேர்தல் 60இற்கு 40 என்ற வட்டார, விகிதாசார அடிப்படையில் இடம்பெற்றதைப் போன்று, நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலும் முதன்முதலாக 50 இற்கு 50 என்ற சதவிகித சமன் அடிப்படையில் இடம்பெறத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கமைய,50 சதவீதமான உறுப்பினர்களின் தெரிவு, தொகுதி அடிப்படையிலும் மீதி 50 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசாரப் பொதுப் பட்டியலில் இருந்தும் நியமிக்கப்படுவார்கள்.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கின்றபோது, இந்த முறைமை மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்களுக்குப் பாதகமாக அமையும் என்றே ஊகிக்க முடிகின்றது.

முஸ்லிம் ஊர்களை ஒருங்கிணைத்த விதத்தில், தொகுதிகள் உருவாக்கப்படாத விடத்து, முஸ்லிம் பிரதேசங்கள் வேறுவேறு மக்கள் பிரிவினர் வாழும் தொகுதிகளுடன் இணைக்கப்படும் போது, அந்த மக்கள், தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது கல்லில் நார் உரிக்கின்ற வேலையை விட சாத்தியமற்றதாகவே இருக்கும்.

எனவே, இது விடயத்தில் எல்லா முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டும்.
எல்லை மீள்நிர்ணய அறிக்கையானது, சர்வகட்சிக் கூட்டத்துக்கும் நாடாளுமன்றத்துக்கும் கொண்டுவரப்படும் சந்தர்ப்பத்தில், முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் அபிலாஷைகளையும் உறுதிப்படுத்த முஸ்லிம் அரசியல் கட்சி தலைவர்களும் எம்.பிகளும் முன்னிற்க வேண்டும்.

அதற்கான அழுத்தத்தை முஸ்லிம் சிவில் சமூகம் வழங்க வேண்டியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பள பாக்கி – கமல் மீது கவுதமி குற்றச்சாட்டு!
Next post மணிரத்னம் படத்தில் நடிக்க விடாமல் தடுக்கிறார்கள் – சிம்பு குற்றச்சாட்டு!