சிறையில் இருந்து விடுதலை ஆனதும் சோப்ராஜ் உடன் பிரான்சில் ரகசிய திருமணம்: 20 வயது காதலி தகவல்
சிறையில் இருந்து சோப்ராஜ் விடுதலை ஆனதும் அவனை ரகசிய திருமணம் செய்து கொள்வேன் என்று 20 வயது காதலி நிகிதா தெரிவித்தார். பல ஆண்டுகளுக்கு முன் சர்வதேச அளவில் பிரபல கடத்தல் மன்னனாக இருந்தவன் சோப்ராஜ். இந்தியாவை சேர்ந்த இவன், நேபாளத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணிகளை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று காட்மண்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். கடந்த 1975-ம் ஆண்டு நடந்த கொலை தொடர்பாக, 2004-ம் ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது 64 வயதாகும் சோப்ராஜ், தன்னுடைய மொழிபெயர்ப்பாளராக பணியாற்றும் நிகிதா என்ற 20 வயது பெண்ணுடன் காதல் வசப்பட்டு இருக்கிறான். இருவரும் திருமணம் செய்யவும் திட்டமிட்டு உள்ளனர். இதையடுத்து சோப்ராஜின் செய்தி தொடர்பாளராகவே அந்த பெண் மாறிவிட்டார். தனது காதல் குறித்து நேற்று நிகிதா கூறியதாவது:- சார்லஸ் சோப்ராஜை பத்திரிகைகளும், மீடியாக்களும் எப்போதும் மோசமாகவே சித்தரித்து வந்துள்ளன. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு அப்பாவி. 30 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலையில் தவறான ஆதாரங்களை கொண்டு சோப்ராஜை போலீசார் சிக்க வைத்துள்ளனர். இளம் பெண்களை கடத்திச் சென்று கொலை செய்ததாகவும், `பிகினி கில்லர்’, `செர்பன்ட்’ போன்ற பட்ட பெயர்களையும் கொடுத்துள்ளனர். இப்போது கூட சில பத்திரிகைகள் என்னை தவறாக சித்தரிக்கின்றன. காதலுக்கு வயது தடையில்லை. என்னுடைய சரியான தேர்வு சோப்ராஜ். அவரை ரகசியமாக திருமணம் செய்ய விரும்புகின்றேன். ஜெயிலில் இருந்து அவர் விடுதலையாவதற்காக காத்து இருக்கிறேன். பிரான்சு நாட்டில் எங்களுடைய திருமணத்துக்கு எந்த சட்ட தடையும் இருக்காது. இவ்வாறு நிகிதா தெரிவித்தார். இரட்டை கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள சோப்ராஜ், அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளான். அந்த மனு மீதான இறுதி விசாரணை விரைவில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சோப்ராஜ்-நிகிதா காதல் குறித்து மூத்த பத்திரிகையாளர்கள் கூறுகையில், `ஒரே நாளில் உலக அளவில் பெரும் புகழைப் பெறுவதற்காகவே கல்லூரி மாணவியான நிகிதா, சோப்ராஜை காதலிப்பதாக கூறுகிறார்’ என்று தெரிவித்தனர்.
Average Rating