இயக்கம் இணைத்த இணையர்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 19 Second

தோழர்களாகி காதலர்களாகி கணவன் – மனைவியானவர்கள் செல்வாவும் பாரதியும். அரசியல், சமூகம், குடும்பம் என பலவற்றில் இருவருக்கும் உள்ள கருத்தொற்றுமையே இவர்களின் திருமண வாழ்க்கையை சாத்தியப்படுத்தியிருக்கிறது. கணவன் – மனைவி உறவுக்குள் தங்களது தனிப்பட்ட சுதந்திரங்களை இழந்து விடாமல் இருவரும் தொடர்ச்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் கொண்டிருக்கும் புரிந்துணர்வே இதற்குக் காரணம். திருமணத்துக்கு முன் எப்படியிருந்தார்களோ தற்போதும் அப்படியே இருப்பதாகக் கூறும் இத்தம்பதியரிடம் பேசினேன்…

‘‘எங்க ரெண்டு பேருக்கும் சென்னைதான் சொந்த ஊர். இடதுசாரி குடும்பப் பின்னணி கொண்டவள் நான். என்னையும் இடதுசாரி சிந்தனைகளோடதான் வளர்த்தாங்க என் அம்மாவும் அப்பாவும். பல தலைவர்களைப் பற்றிய அறிமுகமும் வாசிப்பும் என் பள்ளிக்காலத்துலயே இருந்தது. இந்திய மாணவர் சங்கத்துல நான் இருந்தப்ப ஒரு பொதுக்கூட்டத்துலதான் செல்வாவைப் பார்த்தேன். அவர் இந்திய மாணவர் சங்கத்தோட சென்னை மாவட்ட செயலாளராக இருந்தார்.

பெரிய தலைவர்கள் பேசுற பொதுக்கூட்ட மேடையில் கல்லூரி மாணவராக இருந்த செல்வா ரொம்பவும் துடிப்பா பேசினார். அந்தப் பேச்சை கேட்டதுமே அவர் மேல ஒரு ஈர்ப்பு வந்தது. இப்படிப்பட்ட ஒருத்தரோடதான் வாழணும்னு தோணுச்சு. அந்த ஈர்ப்பு காதலாக மாறினப்புறம் அவர்கிட்ட அதை வெளிப்படுத்தினேன். அவர் அதை மறுத்துட்டார். கட்சியில் முழு நேர ஊழியராக வேலை செய்யணும்ங்கிறதுதான் அவருடைய நோக்கமாக இருந்தது. அந்த சூழலில் திருமண வாழ்க்கை தனக்கு சரிப்பட்டு வராதுன்னு சொன்னார்.

நான் அவரை திருமணம் செய்துக்கணும்ங்கிறதுல உறுதியாக இருந்தேன். தொடர்ச்சியா அது பத்தி அவர்கிட்ட பேசிட்டும் இருந்தேன். அவருக்கு அப்ப கட்சி தந்த சம்பளம் 2 ஆயிரம் ரூபாய். திருமண வாழ்க்கையில பொருளாதாரம் சார்ந்த தேவைகள் அதிகம் இருக்கும். அந்த சம்பளத்தை வெச்சிக்கிட்டு குடும்பம் நடத்த முடியாது. அது மட்டுமில்லாமல் குடும்பத்துக்காக தன்னுடைய நேரத்தை ஒதுக்கிறதுலயும் சில பிரச்னைகள் இருக்குன்னு நடைமுறைச் சிக்கல்களைப் பத்தியெல்லாம் பேசினார். அதெல்லாம் பிரச்னையே இல்லைன்னு சொல்லி அவரைத் திருமணத்துக்கு சம்மதிக்க வெச்சேன். என் பெற்றோருக்கு செல்வாவை நல்லாவே தெரியும்.

அதனால அவரைத் திருமணம் செய்ய விரும்புறதை சொன்னப்போ என் அப்பா சந்தோஷப்பட்டார். அம்மாவுக்கும் அதில் சம்மதம் இருந்தது. ஆனால் நானும் ஒரு முழு நேர ஊழியரை மணக்கிறதுல அம்மாவுக்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. இரு வீட்டார் சம்மதத்தோடு, தாலி இல்லாமல், உறுதிமொழி ஏத்துக்கிட்டு சுய மரியாதைத் திருமணம் பண்ணிக்கிட்டோம். எங்களுக்கு ரெண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தப்போ நாங்க டெல்லிக்குப் போனோம். தலைமை அலுவலகத்துல செல்வா இந்திய மாணவர் சங்கத்தோட இந்திய துணைச் செயலாளராக இருந்தார். பொருளாதார நெருக்கடிகள் இருந்தாலும் கட்சி, செயல்பாடுன்னு மகிழ்ச்சியாகத்தான் வாழ்க்கை போச்சு. தமிழ்நாட்டுல செய்ய வேண்டிய பணிகள் நிறைய இருக்குங்கிறதால் சென்னைக்கு திரும்ப வந்துட்டோம்.

நான் முதுகலை சமூகப்பணி படிச்சிருக்கேன். தன்னார்வ தொண்டு நிறுவனத்துல வேலை செஞ்சுட்டிருந்தேன். ஒரு கட்டத்துல அது போன்ற நிறுவனங்களில் சுதந்திரத்தோட இயங்க முடியலைன்னு உணர்ந்த பின்னாடி வெளிய வந்துட்டேன். ஓர் அமைப்புன்னு இல்லாமல் பல அமைப்புகளிலும் இணைஞ்சு வேலை செய்யுறேன். குடும்பத்தோட பொருளாதாரத்துக்காக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதி ஒன்றை நடத்திக்கிட்டிருக்கேன்.

எங்களுக்குத் திருமணமாகி 12 ஆண்டுகளாகுது. பொருளாதார ரீதியிலாக நெருக்கடிகளைச் சந்திச்சிருக்கோமே தவிர இந்த உறவிலிருந்து விலகணும்னு எனக்குத் தோணுனதே இல்லை. ஏன்னா இந்த உறவில் எனக்கு கட்டற்ற சுதந்திரம் இருக்கு. குடும்பத்துக்கான முடிவுகளை நாங்க ரெண்டு பேரும் பேசித்தான் எடுப்போம். சமூகத்தில் இருக்கக் கூடிய சுதந்திரம், பொருளாதார ரீதியிலான சுதந்திரம்னு ரெண்டு விதமான சுதந்திரமும் எனக்குக் கிடைச்சிருக்கு. எங்களுக்குள்ள திருமண உறவைத்தாண்டியும் பல அரசியல் உரையாடல்கள் நடக்கும்.

மதம் தொடர்புடைய எந்தப் பண்டிகைகளையும் நாங்க கொண்டாடுறதில்லை. எங்க குழந்தைகளும் அப்படித்தான். அவங்க அவங்களோட விருப்பப்படி வாழணும் என்கிறதுதான் எங்க எண்ணம். ஆனாலும் அடிப்படையா சில விசயங்களை அவங்களுக்குப் புகட்ட வேண்டியிருக்கு. நேர்மையான வாழ்க்கையை வாழ கற்றுக் கொடுத்திருக்கிறோம். சமூகத்தில் எந்த விதமான மாற்றத்தை எதிர்பார்க்கிறோமோ அதை குடும்பத்துக்குள்ள கொண்டு வருவதற்கான வாய்ப்பு எங்க உறவில் இருக்கு. எங்க ரெண்டு பேருடைய பெற்றோரும் எங்களுக்கு உறுதுணையாக இருக்காங்க.

அமைப்பு சார்ந்த சில கூட்டங்களுக்காக தமிழ்நாட்டுல பல இடங்களுக்கு நான் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அப்போதெல்லாம் என் மாமியார்தான் எங்க குழந்தைகளைப் பார்த்துக்குவாங்க. செல்வா அவருக்குக் கிடைக்கிற நேரங்களை குழந்தைகளோட செலவு பண்ண விரும்புவார். குழந்தைகளை கவனிச்சுக்கிறதுல அவர் எந்த எல்லையையும் வகுத்துக்க மாட்டார். இந்தந்த விசயங்களைத்தான் அப்பா செய்யணும்னெல்லாம் நினைக்க மாட்டார். அவருக்குக் கிடைக்குற நேரத்துல அவர் குழந்தைகளை கவனிச்சுக்கவும், அவங்களுக்கு நிறைய விசயங்களை கத்துக் கொடுக்கவும் செய்வார். திருமணம்ங்கிற உறவுல அன்பைத் தாண்டி எதுவுமே இல்லை. அந்த அன்பு எங்களுக்குள்ள குறையாம இருக்கு.

அதுதான் எங்க வாழ்க்கையை அர்த்தப்படுத்துது’’ என்கிறார் பாரதி. செல்வாவிடம் பேசினேன்… ‘‘கருத்துரீதியாக பல ஒற்றுமை எங்களுக்குள்ள இருக்கு. என் நோக்கமென்ன, என் செயல்பாடு எப்படிப்பட்டதுன்னு பாரதிக்கு நல்லாவே தெரியும். அதைப் புரிஞ்சுகிட்டு அவங்களும் நடந்துக்குவாங்க. எல்லாத்தையும் அவங்ககிட்ட பகிர்ந்துக்குவேன். இந்த வாழ்க்கையில் பல சிக்கல்களை எதிர்கொண்டாலும் அது பெரிய பிரச்னையாக தெரியுறதில்லை. அதுக்குக் காரணம் பாரதி. எங்க ரெண்டு பேருக்குமே சமூக நோக்கம் இருக்கு. சமூகத்துக்காக வேலை செய்யணும்ங்கிறதுதான் ஆர்வம்.

அதை நாங்க இப்பவும் தொடர்ந்துகிட்டிருக்கோம். எப்பயும் தொடர்வோம். எங்களுக்குள்ளான காதல்தான் இதை சாத்தியப்படுத்தியிருக்கு. காதல் திருமணம் ரொம்ப நல்லது. ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க காதல்தான் உதவும். ஒருத்தருடைய ப்ளஸ்- ஐ விட மைனஸ்-ஐ காதல் மூலமாகத்தான் தெரிஞ்சுக்க முடியும். நாங்க காதலிச்சபோது எங்களை நாங்க முழுமையா வெளிப்படுத்திக்கிட்டதால் திருமண உறவில் பெரிய பிரச்னைகள் இருக்கிறதில்லை.

அதையும் மீறி பிரச்னைகள் வரும்போது அதை நாங்களே பேசித் தீர்த்துக்குவோமே தவிர இது வரை மூன்றாவது நபருக்குக் கொண்டு போனதில்லை. காதலிச்சுக்கிட்டிருந்தபோது எப்படியிருந்தோமோ அப்படியேதான் இப்பவும் இருக்கோம். ஒரே வீட்டுல, ரெண்டு குழந்தைகளோட இருக்கிறது மட்டும்தான் ரெண்டுக்குமான வித்தியாசம். நாங்க திட்டமிட்டு எதுவும் பண்றதில்லை. என்னை மாதிரியே அவங்களாலயும் குடும்பத்துக்காக நேரம் ஒதுக்க முடியாத சூழல்கள்ல நான் அதை பார்த்துக்குவேன்.

எங்களுக்குள்ள கருத்து வேறுபாடுகள் வந்ததே கிடையாதுன்னு சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட கருத்து இருக்கும். அதிலிருந்து இன்னொருத்தர் மாறுபட்டு இருக்கிறது யதார்த்தம். கருத்து வேறுபாட்டை ஜனநாயகமாக எதிர்கொள்வதுதான் அவசியம். எங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை அப்படியாகத்தான் எதிர்கொள்றோம். திருமணமானப்போ பாரதிகிட்ட இருந்து பல விசயங்களைக் கத்துக்கிட்டேன். இப்ப எங்க பொண்ணுங்ககிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டிருக்கேன். ஒருத்தரை புரிஞ்சுக்கிறதும், அவங்களிடமிருந்து கத்துக்கிறதுமா வாழ்க்கை சிறப்பாவே போய்க்கிட்டிருக்கு’’என்கிறார் செல்வா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அண்ணே பேர கேட்டு கலெக்டர் ஆபீஸே கதிகலங்கி கிடக்கு!!(வீடியோ)
Next post கணவருக்கு சன்னிலியோன் தந்த வாக்குறுதி !!