எத்தியோப்பிய படையினர் சோமாலியாவினை நோக்கி பயணம்
எத்தியோப்பியாவின் நூற்றுக்கணக்கான படையினர், நாட்டின் எல்லையைக் கடந்து, சோமாலிய இடைக்கால அரசாங்கத்தின் முற்றுகையிடப்பட்ட தலைமையகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மத்திய சோமாலியாவில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இஸ்லாமியப் படைகள் இடைக்கால அரசாங்கத்துக்கு அச்சுறுத்தலாக இருந்தால், தாம் தலையிடுவோம் என்று எத்தியோப்பியா முன்பு கூறியிருந்தது.
முன்னதாக இஸ்லாமிய நீதிமன்றங்களின் கூட்டமைப்புக்கு விசுவாசமான கிளர்ச்சிக்காரர்கள், தெற்கு சோமாலியாவின், கிஸ்மயோ துறைமுகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது இஸ்லாமியவாதிகள், மத்திய மற்றும் தெற்கு சோமாலியாவின் பெரும்பாலான பகுதிகளை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கிஸ்மயோவாசிகள், கிளர்ச்சிக்காரர்களை வரவேற்க முன்வந்தனர். ஆனால் பின்னர் இஸ்லாமிய நீதிமன்ற கிளர்ச்சிக்காரகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள், இஸ்லாமிய தலையங்கிகளை எரித்தனர். இந்த ஆர்ப்பாட்டக்காரகளைக் கலைக்க கிளர்ச்சிக்காரர்கள் சுட்டதில், குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன.