புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைத்தால் எந்நேரமும் பேச்சுக்கு தயார்
புலிகளின் தலைவரிடமிருந்து நேரடியான உத்தரவாதம் கிடைக்குமானால் சமாதானப் பேச்சுவார்த்தைகளை எந்த நேரமும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது என்று திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். அரசாங்கம் உத்தரவாதம் குறித்து கோரினால் எமது மேலிடம் அதுகுறித்து பரிசீலிக்கும் என்று புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளமை தொடர்பாக கருத்துக்கேட்டபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் கூறியதாவது.
புலிகளின் இராணுவப்பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ள கூற்றை அரசாங்கம் வரவேற்கின்றது. விரைவில் புலிகளின் தலைவரிடமிருந்து எமக்கு நேரடியான உத்தரவாதம் வருமிடத்து நாங்கள் சமாதான பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிப்போம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் அதிகாரப்பகிர்வு குறித்து ஆராய தயார் என்று தெரிவித்துள்ளார். இது சமாதான செயற்பாட்டுக்கு புதிய உத்வேகமாக இருக்கும் என்று நம்புகின்றோம்.
பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது. ஆனால் அதற்கு புலிகளின் தலைவரிடமிருந்து எமக்கு நேரடியான உத்தரவாதம் தேவையாகும்.
மூதூர் பகுதியில் பாதுகாப்பு படைகள் உயர்மட்ட பாதுகாப்பை வழங்கி வருகின்றன. மக்கள் எக்காரணம் கொண்டும் இடம்பெயரவேண்டிய அவசியமில்லை. புலிகளின் துண்டுப்பிரசுரங்கள் குறித்து மக்கள் அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை பாதுகாப்பு படைகள் வழங்கும்.
இதுவரை 40 குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனை நாங்கள் ஏற்கிறோம். ஆனால் 1000 குடும்பங்கள் இடம்பெயர்ந்ததாகக் கூறப்படுவதில் எந்த விதமான உண்மைகளும் இல்லை.