எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகள் அல்லர் அவர்கள் பயங்கரவாதிகளே
எல்.ரீ.ரீ.ஈ. யினர் போராளிகளாகவும் விடுதலை வீரர்களாகவும் சர்வதேச சமூகம் கருதிய காலம் பிந்திவிட்டது. அவர்கள் உண்மையான பயங்கரவாதிகள் என்பதை இப்பொழுது முழு உலகமும் உணர்ந்துவிட்டது. அதனால் தான் அவர்களின் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் தடைவிதித்து வருகின்றன என பாதுகாப்பு தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்புக்கான தகவல் ஊடக நிலையத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது:
இந்தியாகூட புலிப் பயங்கரவாதிகளின் சுயரூபத்தைக் கண்டுகொண்டுள்ளது. இன்று நடைபெறும் சர்வகட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் இந்திய அமைச்சர் மனிசங்கர் ஐயர் உரையாற்றவுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்குச் சென்ற தமிழ் அமைப்புக்களின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தியப் பிரதமரைச் சந்திக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், எல்.ரீ.ரீ.ஈ. யினருக்கு எதிர்க் கருத்துக் கொண்ட தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். புலிகள் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் அல்ல என்பதை இந்தியா கூட ஏற்றுக் கொண்டுள்ளது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.
ஈக்கள், கொசுக்களைக் கொல்வதைப் போல எல்.ரீ.ரீ.ஈ. யினர் பொதுமக்களைப் படுகொலை செய்கின்றனர். பிரபாகரனின் மறைவிடங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் தெரிந்து வைத்துள்ளன. புலிகளின் கொலை வெறியாட்டம் தொடர்ந்தால் கிளிநொச்சிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளுமாறு அமெரிக்காவிடம் வேண்டுகோள் விடுக்கப்போவதாக இந்திய ஜனதாக் கட்சியின் தலைவர் சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். எனவே, எல்.ரீ.ரீ.ஈ. யினர் பயங்கரவாதிகள் என உலகம் ஏற்றுக் கொண்டுவிட்டது என அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.