By 19 August 2020 0 Comments

காற்று மாசை இனி கட்டுப்படுத்தலாம்!! (மருத்துவம்)

தேசத்தின் தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து, நம் மாநிலத்தின் தலைநகரான சென்னையையும் நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது காற்று மாசு. இத்தகைய சூழலில் நாம் வாழும் நம் வீடு/அலுவலகத்தில் சுத்தமான காற்றை சுவாசிக்கத் தரும் செடிகள் குறித்து தெரிந்துகொள்வோம்…

சோற்று கற்றாழை (Aloe Vera)

தீக்காயம் மற்றும் எரிச்சல் போன்ற பாதிப்புக்களைக் குணப்படுத்துவதில் சிறந்த மூலிகையாகக் கற்றாழை திகழ்கிறது. இது திறந்த வெளியைப் போலவே வீட்டின் உட்புறங்களிலும் செழித்து வளரும் தன்மை கொண்டது. (அதே நேரம் சூரிய வெளிச்சம் தேவைப்படுகிறது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.) தரை விரிப்புகள் மற்றும் பலகைகள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் பென்சீன்(Benzene) முதலான வேதியியல் கலவைகளை விரைவாக வடிகட்டி வெளியேற்றுவதற்கு இந்தக் கற்றாழை பயன்படுகிறது.

குவளை மலர் தாவரம் (Peace Lily)

ஆங்கிலத்தில் Peace Lily என அழைக்கப்படும் இந்த வீட்டுத் தாவரம், ஒரே சமயத்தில் காற்றில் உள்ள மாசு நீக்கியாகவும், ஈரப்பதத்தை உண்டாக்கும் காரணியாகவும் செயல்படும் ஆற்றல் கொண்டது. இந்தச் செடி காற்றில் மயக்கத்தை உண்டாக்கக்கூடிய கூறுகள் மற்றும் அசிட்டோன்(Acetone) என்ற வேதிப்பொருளையும் சுத்தம் செய்யும். இந்தத் தாவரம் தன்னுடைய கிரகித்துக் கொள்ளும் தன்மையால் உள்ளரங்குகளில் வீசுகிற காற்றை 60 சதவீதம் வரை தூய்மைப்படுத்துகிறது. அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள மாசு, துகள் ஆகியவைகளைத் தன் பக்கம் ஈர்த்து உணவாகவும் உட்கொள்கிறது.

மணி பிளான்ட் (Money Plant)

வீடுகளின் முகப்பு பகுதி, பெரியபெரிய அரங்குகள் மற்றும் மருத்துவமனை வளாகங்கள் போன்ற இடங்களில் அழகிற்காகவும், வரவேற்பிற்காகவும் வளர்க்கப்படுவதுதான் மணி பிளான்ட் என்ற இந்த குரோட்டன்ஸ் என்பது பலரின் எண்ணம். இதற்கு மாறாக அழகியல் தாவரமான மணி பிளான்ட் காற்றில் உள்ள நச்சுத்தன்மை ரசாயன கலவைகளை அறவே நீக்குகிறது. இதன் மூலம் காற்று மண்டலத்தில் படிந்துள்ள மாசுகளை அகற்றி, சுவாசிப்பதற்கு ஏற்ற வகையில் அதனை மாற்றுகிறது. மேலும் சிந்தட்டிக் பெயின்ட், தரை விரிப்புகள் ஆகியவற்றில் இருந்து வெளிப்படும் தீங்கு விளைவிக்கக்கூடிய கரிமப் பொருட்களின் கலவை முதலானவற்றையும் அகற்றுகிறது.

ஸ்பைடர் பிளான்ட் (Spider plant)

Spider plant தாவரம் காற்று மாசினை அகற்றக்கூடிய செடியாகவும், சிறந்த ஆக்ஸிஜனேற்றியாகவும் சூழலியலார்களால் கருதப்படுகிறது. குறிப்பாக காற்றில் கலந்துள்ள கார்பன் மோனாக்சைடை நீக்குவதில் இதன் பங்கு அளப்பரியது. பல்வேறு ஆய்வுகளின் முடிவில், இரண்டு நாள் முடிவில் 90 விழுக்காடு அளவிற்கு மாசினை அகற்றுவதாக கண்டறியப்பட்டு உள்ளது.

படர் கொடி(English Ivy)

மூக்கடைப்பு, ஆஸ்துமா முதலான சுவாசக் கோளாறுகளால் அவதிப்படுபவர்களுக்கு English Ivy எனக் குறிப்பிடப்படுகிற இந்தக் கொடி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தசை சுரப்பிகளை நன்றாக செயல்பட வைப்பதில் இத்தாவரம் சிறந்து விளங்குகிறது. உடல் வீக்கம், தலைவலி முதலானவற்றைக் குணப்படுத்தவும் இந்த படர் கொடி உதவுகிறது.

மூங்கில் பனை(Bamboo Palm)

காற்றில் அதிகளவில் காணப்படுகிற பென்சைன் வேதிப்பொருளை அகற்றுவதில் இந்தப் பனை அதிக திறன் வாய்ந்ததாக உள்ளது. சாயம், எரிபொருள், சோப்பு ஆகியவற்றைத் தயாரிக்க இந்த வகை ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது. குறைந்த அளவு நீரை உட்கொள்ளும் இச்செடி, ஈரப்பதம் அதிகமுள்ள பகுதிகளுக்கு ஏற்ற ஒன்றாகவும் திகழ்கிறது.Post a Comment

Protected by WP Anti Spam