ஆட்சியில் பங்கு: ரணிலுக்கு ராஜபக்ஷே அழைப்பு!
இலங்கை அமைச்சரவையில் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி சேர வேண்டும் என்று அதிபர் மகிந்தா ராஜபக்ஷே திடீர் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை அதிபடீஞூன் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் ராஜபக்ஷேவை நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு இலங்கையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
இனப் பிரச்சினை குறித்து இந்த சந்திப்பின்போது முக்கியமாக விவாதிக்கப்பட்டது. சந்திப்புக்குப் பின்னர் அதிபர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி, ஆட்சிப் பொறுப்பில் பங்கேற்க வேண்டும், அமைச்சரவையில் இணைய வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கேவிடம் அதிபர் ராஜபக்ஷே வலியுறுத்தினார்.
இதன் மூலம் நாட்டை சிறந்த முறையில் வழி நடத்திச் செல்ல முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க இது சரியான தீர்வாக அமையும் என்றும் ரணிலிடம் ராஜபக்ஷே தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியைப் போல மற்ற எதிர்க்கட்சிகளும் கூட அரசில் சேர அதிபர் விருப்பம் தெரிவித்தார். மக்களின் நலம் கருதி இந்த நடவடிக்கைக்கு ஐக்கிய தேசிய கட்சி ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அதிபர் விருப்பம் தெரிவித்தார். அதேசமயம், இந்த விஷயத்திற்காக எதிர்க்கட்சிகளை கட்டாயப்படுத்தப் போவதில்லை என்பதையும், சுயமாக சிந்தித்து முடிவெடுக்க அவர்களுக்கு உரிமை உள்ளதையும் அதிபர், ரணில் விக்கிரமசிங்கேவிடம் தெரிவித்தார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இலங்கை இனப் பிரச்சினையை எதிர்க்கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சந்திக்க அதிபர் முடிவு செய்திருப்பதையே இது உணர்த்துவதாக உள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை அமைச்சரவையில் தற்போது 30 கேபினட் அமைச்சர்களும், 27 இணை அமைச்சர்களும், 30 துணை அமைச்சர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிபருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ரணில் பேசுகையில்,
ஆறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து அதிபருடன் விவாதித்தேன். அதில் அரசு எடுக்கும் நடவடிக்கையைப் பொறுத்து அரசுக்கு ஆதரவு தருவது குறித்து பரிசீலிக்கப்படும். இருப்பினும் அமைச்சரவையில் சேருவது குறித்து நாங்கள் எந்த முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என்றார்.
முக்கிய எதிர்க்கட்சியை ஆட்சியில் பங்கேற்குமாறு ராஜபக்ஷே அழைத்திருப்பது இலங்கை அரசியல் வட்டாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.