ரீ.ஆர்.ஓ. வின் வங்கிக் கணக்குகள் தொடர்பாக இரகசியப் பொலிஸார் விசாரணை !
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (ரீ.ஆர்.ஓ.) வங்கிக் கணக்குகள் தொடர்பான விசாரணைகளை இரகசியப் பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் சர்வதேச பொலிஸாரின் உதவியும் பெறப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பேரில் இலங்கiயிலுள்ள வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிதிகள் கடந்த காலத்தில் எவ்வாறு கையாளப்பட்டன என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படும்.
வடக்குக் கிழக்கு மக்களின் நல்வாழ்வுக்காக நிதி சேகரிப்பதாகக் கூறிக்கொண்டு உலகின் பல நாடுகளில் இவ்வமைப்பு பெருந்தொகையான நிதியைத் திரட்டியுள்ளமை தெரியவந்துள்ளது. அத்துடன், வடகிழக்கில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச அமைப்புக்கள் வழங்கிய நிவாரண நிதியும் இந்த வங்கிக் கணக்கிலேயே பதியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
தமிழர் புனர்வாழ்வுக் கழகத்திற்கு இலங்கையில் உள்ள வங்கிகளில் 163 கணக்குகள் இருப்பதாகத் தெரிவந்ததையடுத்து இதுதொடர்பான விரிவான விசாரணைகளை மேற்கொள்ள விசேட இரகசியப் பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் எல்.ரீ.ரீ.ஈ. ஆதரவாளர்கள் இந்த நிதியைப் பயன்படுத்தியே ஆயுதக் கொள்வனவுக்காக முயற்சித்துள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.