வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)

Read Time:14 Minute, 45 Second

பிறக்கும்போது எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் வெள்ளைக்காகிதமாகவே உள்ளது. அவர்களுக்கு அமையும் சந்தர்ப்ப சூழ்நிலைகளை, பிரச்சினைகளை எத்தகைய கண்ணோட்டத்துடன் எதிர்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்தே அவர்களது வாழ்க்கை வெற்றி சரித்திரமாக மாறுகிறதா? அல்லது வெறும் கிறுக்கல்களாக போகிறதா என்பது முடிவாகிறது. பிரிய சகி என்ற பெயரில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் எழுத்தாளராகவும் கவிஞராகவும் வலம்வரும் ஆசிரியர் அனி ப்ளாரன்ஸ் தனது வாழ்வின் பெருங்கனவை இங்கே நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

“நடுத்தரக் குடும்பத்தில் அப்பா சேவியர் செல்வராஜுக்கும் அம்மா மேரிக்கும் மூன்றாவதாக பிறந்த நான் எல்லா பெண்களையும் போல், அமைதியான சராசரி பெண். அதிர்ந்து பேசாத அன்பான பெற்றோரின் செல்ல கடைக்குட்டியான என் வாழ்க்கை பத்தாவது படிக்கும் வரை சலனமற்ற நீரோடையாகவே இருந்தது. காலாண்டுத் தேர்வில் மதிப்பெண் குறைவாகப் பெற்ற என் அக்காவைத் திட்டி மறுநாள் வரும்போது பெற்றோரை அழைத்து வரும்படி பள்ளி ஆசிரியர் சொல்லியிருந்தனர். தன்னால் தன் பெற்றோருக்கு அவமானமாகிவிடக்கூடாதே என்று தற்கொலை செய்து கொண்டார் அக்கா. இத்தனைக்கும் என் பெற்றோர் அக்காவை நன்றாக படிக்கும் என்னோடும் அண்ணனோடும் ஒப்பிட்டு பேசியதோ திட்டியதோ கிடையாது. மதிப்பெண் பட்டியலில் கையெழுத்திடும்போதும் அடுத்த முறை நன்மதிப்பெண் வாங்கிடு பாப்பா என்று மட்டுமே சொல்வார் அப்பா. நன்றாக ஓவியம் வரையவும், கவிதை எழுதவும் திறமை வாய்ந்த என் அக்காவை மதிப்பெண் சார்ந்த கல்வி பழிவாங்கிவிட்டதே என்ற கோபம் அப்போதே என் மனதில் விதையாக விழுந்தது.

கற்றல் குறைபாடுகள் பற்றிய புரிதல்கள் அப்போது இல்லாவிடினும், எவ்வித அழுத்தங்களும் இல்லாத மகிழ்வான கற்றலைத் தரும் இடமாக பள்ளிக்கூடங்கள் இருந்தால் எப்படி இருக்குமென்று அன்று நான் கண்ட கனவே என் வாழ்க்கையை இன்றைக்கு நான் இருக்கும் இந்த இடத்திற்கு நகர்த்தி உள்ளது என நினைக்கிறேன். அக்கா இறந்த சோகத்தில் நோயாளியான அப்பா, நான் பன்னிரண்டாவது படிக்கும்போது படுத்தப்படுக்கையானார். இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்த கையோடு அத்தை மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். சொந்தத்தில் திருமணம் செய்ததன் பரிசாகப் பிறந்த மகள் மருந்தில்லா மரபியல் நோய் காரணமாக ஒன்றரை வயதில் இறந்தாள்.

வாழ்வே முடிந்ததென விரக்தியின் எல்லையில் முடங்கிப்போன என்னைத் தேற்றி பி.எட் படிக்க ஊக்குவித்து ஆசிரியர் ஆக்கியவர் அன்பு கணவர் அந்தோணி வில்சன் பாபு. கவிஞர் தாமரையின் கவிதை ஒன்றில்… ‘‘என் பெயரை மறந்துபோனேன்… என் மணவிழாவில் நான் தொலைந்து போனேன். ஆனால் யாரும் என்னைத் தேடவில்லை’’ என்று திருமணத்திற்கு பின்பு சுயம் தொலைக்கும் பெண்களைப் பற்றி எழுதியிருப்பார். பெரும்பாலான பெண்கள் எத்தகைய திறமை வாய்ந்தவர்களாக இருந்தாலும் திருமணத்திற்கு பின் குடும்பம் என்னும் குறுகிய வட்டத்திற்குள் நின்றுவிடுகின்றனர். ஆனால், என்னை நானே அடையாளம் கண்டுகொண்டது திருமணத்திற்குப் பின்னர்தான்.

தொடர்ந்து மேலே படிக்க ஊக்குவித்து, என் திறமைகளை வளர்த்துக்கொள்ள, கருத்தரங்குகளுக்கு செல்ல, சங்கீதம் கற்றுக்கொள்ள, தியான வகுப்புகளுக்கு செல்ல… எதற்கும் மறுப்பு சொல்லாதவர் என் கணவர். சில ஆண்டுகளில் மகளின் மரண சோகம் மறைந்து மனம் தேறிய பின்னர் மீண்டும் கருவுற்றேன். ஒன்றைப் பறித்த இறைவன் இரட்டைக் குழந்தைகளைக் கொடுத்தார் என்று மகிழ்ந்திருந்தோம், ஆனால், அம்மகிழ்ச்சியும் நீடிக்கவில்லை. ‘‘கண்ணிழந்தான் மீண்டும் பெற்றிழந்தானென’’ இரட்டைக் குழந்தைகளையும் மூன்றரை வயதில் மரபியல் நோய்க்கு பலிகொடுத்தோம். மிகுந்த மனஉளைச்சலில் இருந்த நான் அப்போது தனியார் பள்ளியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

மன அழுத்தத்திலிருந்து விடுபட பள்ளிக்குழந்தைகளை கலைநிகழ்ச்சிகளில் பயிற்றுவித்தல், மண்புழு உரம் தயாரித்தல், புகையில்லா போகியை வலியுறுத்தி வீதி நாடகங்களை நடத்துதல் என குழந்தைகளோடு ஐக்கியமானேன். 2003 ஆம் ஆண்டு அரசு உதவி பெறும் பள்ளியான தூய கபிரியேல் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக வேலை கிடைத்தது என் வாழ்வின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சலேசிய அருட்தந்தையர்களால் நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் அடித்தட்டு மக்களின் பிள்ளைகளே படிக்கின்றனர். அறமும் அறிவும் இரு கண்களெனக் கொண்டு மாணவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த இப்பள்ளி எனக்களித்த பல்வேறு வாய்ப்புகளே என்னை எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் உருவாக்கியது.

ஆனால் இங்குள்ளமாணவர்களுக்கு கல்வி கற்பிப்பது சவாலானதாக இருந்தது. ஆடல், பாடல், விளையாட்டு என திறமைகள் இருந்தும் பல மாணவர்கள் கற்றலில் மிகவும் பின்தங்கியிருப்பது ஏன் என்ற கேள்வி என் மனதைக் குடைந்தெடுத்த சமயத்தில்தான் ‘தாரே ஜமீன் பர்’ என்ற இந்தி திரைப்படம் வந்து கற்றல் குறைபாடுகள் பற்றிய தெளிவை எனக்கு ஏற்படுத்தியது. இணையத்தின் மூலம் மேலும் தகவல்களை திரட்டினேன். தேடல் மிகுதியால் மெட்ராஸ் டிஸ்லெக்‌ஷியா அசோசியேஷன் நடத்திய இரண்டு மாத பயிற்சி வகுப்பில் சேர்ந்து கற்றல் குறைபாடுகள் உள்ள குழந்தைகளைப் பயிற்றுவிக்கும் முறைகளைக் கற்றறிந்தேன்.

என் பள்ளி மாணவர்களில் எத்தனை பேர் கற்றல் குறைபாடு உள்ளவர்கள் என்பதைக் கண்டறிய செய்த முயற்சிகளின் மூலம் அதிக, குறைந்த, மிகக் குறைந்த குறைபாடுகள் உள்ளவர்கள் என்ற மூன்று பிரிவுகளையும் சேர்த்தால் ஐந்தில் ஒருவருக்கு கற்றல் குறைபாடு உள்ளது என்ற அதிர்ச்சி தரும் உண்மையில் உறைந்து போனேன். அம்மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களில் மதிப்பெண்கள் குறைவாகப் பெறுவதால் பள்ளியிலும் வீட்டிலும் உறவினர்களுக்கு மத்தியில் அவர்கள் பெறும் அவமானங்களும், வலிகளும் என் அக்காவை நினைவூட்டியது. பிற திறமைகள் இருப்பினும் மதிப்பெண்கள் எடுக்க முடியாத மாணவர்களை முட்டாள், மரமண்டை, வீணானவன் போன்ற வார்த்தைகளால் பள்ளிக்கூடங்கள் குத்திக்கிழித்து காயப்படுத்துவதை நிறுத்த என்ன செய்வது என்ற கேள்வி என்னை உறங்கவிடாமல் அலைக்கழித்தது.

மனித ஆளுமை அளவிட முடியாத திறன் வாய்ந்தது என்பதில் நான் திடமான நம்பிக்கைக் கொண்டுள்ளேன். ஒவ்வொருவரும் தம் தடத்தை இவ்வுலகில் விட்டுச்செல்ல முடியும். நான் கண்டறிந்த கற்றல் குறைபாடுள்ள மாணவர்களைப் பற்றிய தகவல்களை என் பள்ளி தலைமையாசிரியர், தாளாளரிடம் காட்டி, இதேபோல ஒவ்வொரு பள்ளிகளிலும் இருக்கும் கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஏதாவது செய்ய வேண்டும் என்று கலந்தாலோசித்தபோது அருட்தந்தை ஜோசப் ஜெயராஜ் என்ற உளவியலாளரை சந்திக்கும்படி கூறினர். அவரது தலைமையில் இன்னும் சில நண்பர்களின் உதவியோடு பல நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் கற்றல் குறைபாடுகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பொம்மலாட்ட நிகழ்ச்சிகள், வீதி நாடகங்கள் நடத்தி விழிப்புணர்வை பரவலாக்கினோம்.

இவற்றின் தொடர்ச்சியாக ‘நிறைவகம்’ என்ற உளவியல் சேவை மையத்தை நிறுவி அதன் மூலம் பல பள்ளிகளில் ரெமெடியல் ஆசிரியர்களை பணிக்கு அமர்த்தி, கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து அவர்களின் குறை நீங்கிட, திறன் வளர்த்திட வகை செய்துள்ளோம்.மனநல ஆலோசகர்களையும் பள்ளிகளில் பணிக்கு அமர்த்தி மாணவ, மாணவியர்களின் உளவியல் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்க வழி செய்துள்ளோம். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறோம். நம் எண்ணங்கள் தூய்மையானதாக இருந்தால், நம் கனவுகள் பொதுநல நோக்கம் கொண்டதாக இருந்தால் அக்கனவு நிறைவேற தேவையான உதவிகள் இந்த பிரபஞ்சத்தின் எந்த மூலையிலிருந்தும் நமக்கு கிடைத்தே தீரும்.

எனக்கு கிடைத்த அனுபவத்தை ஆவணப்படுத்தும் விதமாக கற்றல் குறைபாடுகள் குறித்து ‘கசக்கும் கல்வியும் கற்கண்டாகும்’ என்ற நூலையும், ‘நன்மைகளின் கருவூலம்’ என்ற குழந்தை வளர்ப்பு உளவியல் நூலையும் நானும் உளவியலாளர் ஜோசப் ஜெயராஜ் அவர்களும் எழுதினோம். எட்டு வகையான அறிவுத்திறன் பற்றியும் அவற்றை மேம்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் இந்த புத்தகங்கள் விளக்கும், ‘கண்டேன் புதையலை’ என்ற பன்முக அறிவுத்திறன் பற்றிய நூல், ‘நான் ஏன் பிறந்தேன்’ என்ற சிறுகதை தொகுப்பு, ‘நாளைய பொழுது நல்லதாய் விடியட்டும்’ என்ற மொழியெர்ப்பு நூல் ஆகியவை பிரியசகி என்ற பெயரில் ஒரு எழுத்தாளராய் இலக்கிய உலகத்திற்கு அடையாளம் காட்டின. எழுத்துப் பணிகளுக்கும், கல்வி பணிகளுக்கும் அங்கீகாரமாய் பல விருதுகள் குவிந்தாலும் என் தேடல் இன்னும் பூர்த்திஆகவில்லை.

கொரோனா என்னும் கொடிய அரக்கனால் உலகமே வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தாலும் குழந்தைகளுடனான என் பயணத்தை தொடர பிரியசகி சேனல் என்ற யூடியூப் சேனலைத் தொடங்கி மாயக்குரல் கலைஞராய் சகா என்ற பொம்மைத் தோழனுடன் குழந்தைகளைக் கவரும் கதைகள் சொல்லி வருகிறேன். மெய்நிகர் கூட்டங்கள் மூலமும் ஆசிரியர்களுக்கு கற்றல் குறைபாடுகள் குறித்த பயிற்சிகளையும், பெற்றோர்களுக்கு குழந்தை வளர்ப்பு பற்றி ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன். மதிப்பெண்ணை நோக்கி ஓடாமல், குழந்தைகளின் திறமையை முழுமையாக வெளிக்கொணர உதவும் பாடத்திட்டம் கொண்ட, மகிழ்வான கற்றல் கற்பித்தல் கொண்ட பள்ளிகளை உருவாக்க வேண்டும் என்பதே என் எதிர்காலத் திட்டம். இந்த லட்சியத்தை நோக்கிய எனது பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டியதாயிருந்தாலும், ஒவ்வொரு அடியும் சிகரத்தை நோக்கி எடுத்து வைக்கின்றேன். நிச்சயம் ஒருநாள் என் இலக்கை அடைந்தே தீருவேன்” என்ற தன்னம்பிக்கை வார்த்தைகளுடன் பேசி முடித்தார் பிரிய சகி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடியோ ஆதாரத்துடன் நடந்த மர்மம் Kanneka Jenkins Mystery !! (வீடியோ)
Next post மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்! (மகளிர் பக்கம்)