மாணவர்களின் நம்பிக்கை ஆசிரியர்கள்! (மகளிர் பக்கம்)

Read Time:10 Minute, 0 Second

பழங்குடியினருக்காக அரசு நடத்தும் பள்ளி ஒன்றில் மாணவர்களே இல்லாத நிலையை மாற்றி, 400க்கும் மேற்பட்ட மாணவர்களைச் சேர்த்திருக்கிறார் ஒரு ஆசிரியை. மிக எளிய குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்க, தன்னை முழுமையாக அர்ப்பணித்திருக்கிறார்.
“திருவண்ணாமலை மாவட்டத்தில், ஜவ்வாது மலையின் உச்சியில் ஜமுனா மரத்தூருக்கு அருகில் அமைந்திருக்கும் மலைக் கிராமம் அரசவல்லி. முழுக்க முழுக்க பழங்குடியினரே வசிக்கும் இந்த கிராமத்தில் அமைந்துள்ள அரசு பழங்குடியினர் பள்ளியில் செகண்ட்ரி க்ரேட் ஆசிரியராக முதல் நாள் பணிக்குச் சென்றேன். அங்கு செக்யூரிட்டி, விறகுகாரங்க தவிர யாருமில்லை. ‘பெல் அடித்தால் மட்டும்தான் குழந்தைங்க சாப்பாட்டுக்கு வருவாங்க’ என்று, அவர்களிடம் பேசிய பிறகு தெரிந்து கொண்ட தகவல் அதிர்ச்சியாக இருந்தது. உடைந்து போனேன்” என்று பேசத் துவங்கினார் ஆசிரியை மகாலட்சுமி.

மகாலட்சுமியின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செல்லங்குப்பம் என்ற குக்கிராமம். சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும், அவர் பிறந்து சில வருடங்களிலேயே வீட்டில் நிலைமை மோசமடைந்தது. தாய் – தந்தை இடையே பிடிக்காத திருமணம். இதனால், வீட்டில் ஏற்படும் சண்டைகள். ஒரு கட்டத்தில் தாய்க்கு மனநலம் பாதிக்கப்பட, வீடே உருக்குலைந்து போனது. அதுவரை வேலைக்குச் சென்றுவந்த அவரது தாயார் வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட, வீட்டில் வறுமை சூழ ஆரம்பித்தது. இதனால், தன் படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்குப் போய் தங்கையை படிக்க வைக்க ஆரம்பித்தார். பத்தாம் வகுப்பில் 402 மதிப்பெண்களும் 12 ஆம் வகுப்பில் 1052 மதிப்பெண்களும் எடுத்த மகாலட்சுமி, ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்து இரண்டாண்டு படிப்பை முடித்தார். பிறகு தான் படித்த பள்ளியிலேயே சில நாட்கள் வேலை பார்த்தவர், வேறொரு பள்ளியில் தற்காலிகப் பணியில் சேர்ந்தார்.

அதன் பிறகு இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கீழ் அரசவல்லியில் நடத்தப்பட்டுவந்த பள்ளியின் ஆசிரியராக நியமனமானார். ‘‘நான் வேலைக்கு சேர்ந்த அடுத்த நாள் தலைமை ஆசிரியர் வந்தார். அவரோடு ஒரு மூன்று பெண் குழந்தைகள் மட்டும் வந்தாங்க. அவங்க கிட்ட பேச்சு கொடுத்த போது, ‘யாரும் பள்ளிக் கூடத்துக்கு வர மாட்டாங்க. எங்க எச்.எம்.மிஸ் வந்ததனால நாங்க வருவோம். வீட்டில் வேலை இருந்தா அதுவும் வர மாட்டோம்’ என்று அந்த பிஞ்சுகள் சொன்னது. என்னுடைய அடுத்த கேள்வி ஏன் வரமாட்டாங்க? “தெரியாது அதெல்லம், வீட்டுல வேலை இருக்கும், மாடு மேய்க்கனும், குழந்தை வச்சுக்கனும்…’ இப்படித்தான் அவர்களின் பதிலாக இருந்தது. சரி பக்கத்தில் யார் வீடெல்லாம் இருக்கு காமிங்கனு கூட்டிட்டு போனேன். பக்கத்தில் இருந்த குழந்தைகிட்ட ‘வாப்பா ஸ்கூல் போலாம்’னு கேட்டா ‘வர்ல நீ போ’ னு உடனடி பதில் வந்தது. நான் டீச்சர் என்கிற மரியாதை ஏதும் அவர்களுக்குத் தெரியவில்லை.

நானும் டீச்சர் என்பதை எல்லாம் மறந்து அவர்களுள் ஒருத்தியாக, கைவிடாமல் ஒவ்வொரு வீடும் ஏறி இறங்கினேன். அந்த பெற்றோர்கள், ‘உனக்கு மட்டும் ஏன் இவ்வளவு அக்கறை. ஒரு நாலு நாள் இருந்துட்டு போயிடுவ. மாசமானா சம்பளம் தானா வரப் போகுது…’ என்று அவர்கள் என்னிடம் கேட்ட கேள்விகள் அதிகமாக இருந்தது. இந்த கேள்விகள், என் மீதான சந்தேகங்கள் எங்கிருந்து வந்தது என்று ஆராய்ந்தால், எனக்கு முன் இருந்தவர்கள் அவர்களுக்கு கொடுத்த அனுபவம் என்பதை புரிந்து கொண்டேன். தொடர்ந்து அவர்களுடன் பேசி, அவங்க வீட்டில்ஒருத்தியாக என்னை ஏற்றுக் கொண்ட பின் குழந்தைகளை அனுப்ப முன் வந்தனர்” என்கிறார் மகாலட்சுமி. இங்கு படிக்கும் பெரும்பாலான குழந்தைகள் பழங்குடியினர் இனத்தை சேர்ந்த வறுமை பின்னணி கொண்டவர்கள். பல சமயங்களில் முடி வெட்டி விடுவது, குளிப்பாட்டி விடுவது போன்ற செயல்களை மகாலட்சுமி செய்துள்ளார்.

“பள்ளிக்கு விருப்பப்பட்டு வருபவர்கள் அலங்கரித்து வருவாங்க. அப்படி வருபவர்கள் சொற்பம். பள்ளிக்கு வரவே விருப்பம் இல்லாதவங்க எப்படி தன்னை அலங்கரித்து, குளித்து, தலை சீவி… எல்லாம் வருவாங்க. அதனால் வீடு வீடாக போய் அங்குள்ள இளைஞர்களின் உதவியோடு தூக்கி வந்தேன். ஒரு சில வீட்டில் அந்த குழந்தைகளின் அம்மாக்கள் முகம் மட்டும் கழுவி அனுப்பி வைப்பாங்க. அவங்கள கூட்டிட்டு வந்து முடி வெட்டி, குளிப்பாட்டி விட்டேன். ஒரு சிலருக்கு மாற்று துணி இருக்காது. அவர்கள் போட்டு வந்த துணியை துவைத்து காயவைப்பேன். அவர்கள் குளித்து முடிக்கும் நேரத்தில் அந்த துணி காய்ந்துவிடும். ஆண் குழந்தைங்க என்னிடம் குளிக்க வெட்கப்படுவாங்க. ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா உங்க அம்மா, அக்கா மாதிரி தானே’ என்று சொல்லும் போது ஒரு சிலர் சம்மதிப்பாங்க, சிலர் ‘நான் அந்த அண்ணங்கிட்ட குளிச்சுக்கிறேன்’ என்று சொல்லிவிடுவார்கள்” என்றார்.

மகாலட்சுமி இங்கு சேரும் போது மோசமாக இருந்த மதிய உணவின் தரம் போகப்போக பெரிய அளவில் மேம்பட்டிருக்கிறது. 13 ஆண்டுகளுக்கு பிறகு சிறப்பான பள்ளியாக மாற்றி இருக்கும் மகாலட்சுமி, பாடங்கள் மட்டுமின்றி குழந்தைகளின் முழுமையான ஆளுமையில் கவனம் செலுத்தி அவர்களது எதிர்காலத்தை வடிவமைத்திருக்கிறார். 2006ல் 10 குழந்தைகள்கூட இல்லாத இந்தப் பள்ளியில் தற்போது ஒன்று முதல் 8 ஆம் வகுப்பு வரை 417 குழந்தைகள் படிக்கிறார்கள். இவர்களில் 90 % மேற்பட்டவர்கள் மலை கிராமங்களைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர். முதல் தலைமுறையாக பள்ளிக்கு வருபவர்கள். “யாருக்கும் இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன் என்ற கேள்வி வரலாம். என் பிள்ளைன்னா செய்வேன்ல. எனக்கு பிறந்தாதான் பிள்ளைகளா? என் தங்கையோ, தம்பியோ, என் பிள்ளையோ இருந்தால் என்ன செய்வேனோ அதைத்தான் செய்து வருகிறேன். இங்கு பெரிய பணக்காரர்கள், குழந்தைகளின் திறமைகளை புரிந்து கொள்கிற பெற்றோர்கள் என்று யாரும் கிடையாது.

ஒரு குழந்தைக்கு மியூசிக்கோ, விளையாட்டோ வருகிறதென்றால் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் வாய்ப்பு இங்கு இல்லை. இந்த குழந்தைகளுக்கு கல்வி மட்டும் தான். இங்கு கல்வி என்று எதை வரையறுத்து வைத்திருக்கிறார்கள். சாப்பிடறது, வாமிட் பண்றது, மதிப்பெண்… இதெல்லாமே இருந்தாலும் கூட இந்த குழந்தைகளை ஒரு படிக்கு மேல போக முடியும் என்கிற ஒரு நம்பிக்கையை கொடுத்து அனுப்புற வேலையைத்தான் ஆசிரியர்கள் ஒரு சவாலாக எடுத்துக்கணும். மாணவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக் கூடிய நட்சத்திரங்களாக ஆசிரியர்கள் இருந்தால் எல்லாமே சாத்தியப்படும்” என்கிறார் மகாலட்சுமி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
Next post இதய நோய் தடுக்க வழிமுறை…!! (மருத்துவம்)