பெண்களுக்கு பேக் பெய்ன் வரக் காரணம்? (மருத்துவம்)

Read Time:11 Minute, 36 Second

நாம் பல நேரங்களில் முதுகு வலி என்று புலம்புவோம். ஆனால் இந்த முதுகு வலியை நாம் யாரும் பெரியதாக எடுத்துக் கொள்வதில்லை. முதுகில் ஏற்படும் பிரச்சனைகளில் முக்கியமானது, கீழ் முதுகு வலி (Low back pain). மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காகச் சிகிச்சை பெறும் பிரச்னைகளில், கீழ் முதுகு வலி இரண்டாம் இடத்தில் உள்ளது.

காய்ச்சலுக்கு நிகராக தற்போது பெரும்பாலான மக்கள் மருத்துவமனையை நோக்கி படையெடுக்க காரணம் முதுகுவலி தான் என்றும் சொல்லலாம். ஆபத்தான நோயல்ல ஆனால் வலி அவஸ்தையை உண்டாக்கும் நோய். சமீப காலமாக தலைவலி இருக்கா என்று கேட்பது போல முதுகுவலி இருக்கா என்று கேட்க தொடங்கிவிட்டோம். குறிப்பாக 50 வயதை கடந்தவர்களை மட்டுமே தாக்கிக் கொண்டிருந்த வலி தற்போது 20 வயதாகும் இளைய தலைமுறையையும் விட்டு வைக்கவில்லை.. பொதுவாக வரும் தலைவலி போன்று பொதுவாக எப்போதும் வந்து போகும் முதுகு வலி வருவதற்கான காரணம் என்ன? விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜனனி.

முதுகுவலிக்கான காரணங்கள்

* கூன் விழுந்த நிலையில் உட்காருவது

* வேலை நிமித்தமாகத் தொடர்ச்சியாக கணினி முன்னால் உட்கார்ந்தே இருக்க வேண்டிய சூழல்

* தினமும் இருசக்கர வாகனங்களில் நெடுந்தொலைவு பயணிப்பது

* குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணம் செய்வது

* அதிக எடையைத் தூக்குவது

* உடற்பயிற்சி இல்லாதது

* ஊட்டச் சத்துக்குறைவு

* தரையில் வழுக்கி விழுவது

* உயரமான இடத்திலிருந்து குதிப்பது, திடீரெனக் குனிவது அல்லது திரும்புவது

* உடல்பருமன் போன்ற காரணங்களால் முதுகெலும்பு இடைவட்டில் அழுத்தம் அதிகமாகிக் கீழ் முதுகில் வலி ஏற்படும்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப் பையில் கல் உள்ளவர்களுக்குக் கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்குக் கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90% முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்.

‘ஆஸ்டியோமைலிட்டிஸ்’ (Osteomyelitis), ‘ஆன்கிலோசிங் ஸ்பாண்டிலிட்டிஸ்’ (Ankylosing spondylitis), காச நோய் போன்றவற்றின் பாதிப்பாலும் கீழ் முதுகில் வலி வரும். சிறு வயதிலும் வாகன விபத்துகள் அல்லது விளையாடும்போது ஏற்படுகிற விபத்துகள் காரணமாக எலும்பு முறிந்து இந்த வலி ஏற்படலாம். சிலருக்குப் பிறவியிலேயே தண்டுவடம் செல்லும் பாதை குறுகலாக இருக்கும். இவர்களுக்குச் சிறு வயதிலேயே முதுகு வலி ஏற்படும். முதுகெலும்பில் கட்டி அல்லது புற்று நோய் தாக்குவது காரணமாகவும் இந்த வலி வரும். கர்ப்பக் காலம், விபத்துக் காயங்கள், தசைப்பிடிப்பு, தசைநார் வலி, மன அழுத்தம், நீரிழப்பு போன்றவற்றாலும் முதுகு வலி வரும்.

எலும்பின் உறுதிக்கும் ஆரோக்கியத்துக்கும் கால்சியம் சத்து தேவை. வயது அதிகமாக அதிகமாகக் கால்சியத்தின் அளவு குறைந்து எலும்பு மெலிந்துவிடும். இதற்கு ஆஸ்டியோபோரோசிஸ் என்று பெயர். இது கீழ் முதுகில் வலியை ஏற்படுத்தும்.

ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை

உடலில் இடுப்பு பகுதி என்பது சந்திகம், அபான வாயு ஆகியவற்றின் இருப்பிடமாகும். வலி, தேய்மானம் போன்ற குறியீடுகள் வாதத்தினால் ஏற்படுகிறது. மரத்து போதல் கபத்தினால் ஏற்படுகின்றது. அழற்சி பித்தத்தினால் ஏற்படுகின்றது.இந்நோயில் ஏற்படும் தேய்மான குறியீடுகள் வாதத்தின் குளிர்ச்சி, வறட்சி ஆகிய குணங்களினால் ஏற்படுகின்றது. இடுப்பு பகுதி எந்தெந்த நோய்களின் இருப்பிடம் என்பதை நினைவில் வைத்து சிகிச்சையில் முன்நோக்கி செல்ல வேண்டும்.

சிகிச்சை முறை

இந்நோய்க்கு சிகிச்சை அளிக்கும் போது அபான வாயுவையும், கபம் மற்றும் வாத கபத்தையும் குறைத்து சீர்படுத்த வேண்டும். ஒருவரின் குடல் தன்மையை அறிந்து சிகிச்சை அளிக்க வேண்டும்.

உணவு முறை

கால்சியம் உணவுகள் எலும்பையும் தசையையும் வலுப்படுத்தும். கால்சியம் மற்றும் புரதம் மிகுந்த பால், முட்டை வெள்ளைக் கரு, சோயா, உளுந்து. கொண்டைக் கடலைப் போன்ற உணவு வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு கையளவு வறுத்த கொண்டக்கடலையுடன், 50 கிராம் நாட்டு சர்க்கரையை கலந்து சாப்பிடுங்கள். இவற்றை சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் காய்ச்சிய பாலை அருந்துங்கள்.இவ்வாறு தினமும் காலை அல்லது மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தாலே போதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இடுப்பு வலி, உடல் சோர்வு போன்ற அனைத்து வகை பிரச்சனைகளும் குணமாகும். கொள்ளு குதிரைக்கு மட்டும் தீவனம் அல்ல மனிதனுக்கும் சிறந்த உடல் நல மருந்தாக விளங்குகிறது. குறிப்பாக இடுப்பு வலியை சரிசெய்ய சிறந்து மருந்து என்றுகூட சொல்லலாம். எனவே வாரத்தில் இரண்டு முறை கொள்ளு ரசம் செய்து சாப்பிட்டு வர இந்த இடுப்பு வலி பிரச்சனை சரியாகிவிடும்.

தவிர்க்க வேண்டியவை

* கூன் விழாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்.

* ஒரே மாதிரியான நிலையில் வேலை செய்யும்போது, அவ்வப்போது உடலின் நிலையை மாற்றிக்கொள்ளுங்கள்.

* எந்த வேலையையும் தொடர்ந்து மணிக்கணக்கில் ஒரே நிலையில் உட்கார்ந்தவாறு செய்யாதீர்கள்.

* வேலைக்கு நடுவில் சிறிதளவு ஓய்வு அவசியம். அமர்ந்திருக்கும்போதுகூடக் கால்களின் நிலைகளை மாற்றுங்கள்.

* சிறு வயதிலிருந்தே உடற்பயிற்சி, நடைப்பயிற்சி, ஜாக்கிங், நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், யோகாசனம் போன்றவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்வது, முதுகு வலி வராமல் தடுக்கும்.

* சரியான மெத்தையில் ஒருக்களித்துப் படுக்க வேண்டும்.

* கால்களை சிறிது மடித்த நிலையில், கால்களுக்கு இடையில் தலையணையை வைத்துப் படுத்துக்கொள்ளலாம்.

* அதிக எடையைத் தூக்கக் கூடாது. அப்படியே தூக்கவேண்டி இருந்தால், எடையைத் தூக்கும் போது இடுப்பை வளைத்துத் தூக்காமல், முழங்காலை முன்புறம் மடக்கித் தூக்க வேண்டும். சுமையை மார்பில் தாங்கிக் கொள்வது இன்னும் நல்லது.

* முதுகை அதிகமாக வளைக்கக் கூடாது. திடீரெனத் திரும்பக் கூடாது. குனிந்து தரையைச் சுத்தம் செய்வதற்குப் பதிலாக, நீளமான துடைப்பத்தைக் கொண்டு நின்றுகொண்டே சுத்தம் செய்வது நல்லது.

* உயரமான காலணிகளை அணியக் கூடாது.

* மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முதுகில் சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, மசாஜ் செய்வது விபரீதங்களை விலைக்கு வாங்குவதற்குச் சமம்.

* இருசக்கர வாகனங்களில் கரடு முரடான பாதைகளில் செல்வதைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

* முதுகுத் தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளைத் தினமும் மேற்கொள்ளுங்கள்.

* உடல் பருமன் ஆவதைத் தவிருங்கள். புகை பிடிக்காதீர்கள். மது அருந்தாதீர்கள் என்று ஆலோசனை அளித்தார் மருத்துவர் ஜனனி.

இந்த இடுப்பு வலி சரியாக சுக்கு டீ மிகச் சிறந்த மருந்து.

தேவையானவை

சுக்கு – 1 கிராம்
மிளகு – 5
கிராம்பு – 5
கொள்ளு – ஒரு ஸ்பூன்
டீ தூள் – ஒரு ஸ்பூன்
தண்ணீர் – ஒரு கிளாஸ்
பனைவெல்லம் – தேவைக்கேற்ப.

செய்முறை

அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அவற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்ததும், ஒரு ஸ்பூன் டீ தூள் சேர்க்க வேண்டும். டீ தூள் சேர்த்த பிறகு மேல் கூறப்பட்டுள்ள சுக்கு, மிளகு, கிராம்பு, கொள்ளு ஆகியவற்றை சேர்க்கவும். பின்பு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 3 நிமிடங்கள் டீயை கொதிக்க விடுங்கள். பின்பு அதனுடன் தேவையான அளவு பனைவெல்லம் கலந்து தினமும் காலை அல்லது மாலை வேளையில் அருந்தி வாருங்கள். இவ்வாறு அருந்தி வருவதினால் இடுப்பு வலி உடனே சரியாகிவிடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த எண்ணெய் நல்லது? (மருத்துவம்)
Next post கிளைசெமிக்னா என்னன்னு தெரியுமா? (மருத்துவம்)