எந்த எண்ணெய் நல்லது? (மருத்துவம்)

Read Time:27 Minute, 16 Second

கடந்த இதழில் சமையலில் எண்ணெயின் பயன்பாடு மற்றும் அதில் உள்ள கொழுப்பு சக்தி பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டோம். இந்த இதழில் அதன் தொடர்ச்சியாக எந்த எண்ணெயை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.

அதிகமாகச் சூடு செய்யும்போதும், அதிகமாக எண்ணெயைக் கொதிக்கவைக்கும்போதும் அவற்றில் புகை உண்டாகும். அந்த நிலைக்குப் புகை நிலை (Smoke Pyramid) என்று பெயர். புகைய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு எண்ணெயும் கெடுதல் விளைவிக்கக்கூடிய சூழ்நிலையை உண்டாக்குகிறது. அதனுடன், எண்ணெயானது `மாற்றுநிலை கொழுப்பு’ என்னும் மிகக் கெடுதல் செய்யும் ஒரு கொழுப்பாக மாறும் தன்மையை அடைய ஆரம்பிக்கும்.

மாற்று நிலைக்கொழுப்பு என்பது முழுமையடையாத கொழுப்பு. இது முழுமையடைந்ததைவிடப் பல மடங்கு கெடுதல் தரக்கூடியது. இந்த வகை எண்ணெய்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உண்பதால் நாளடைவில் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உண்டாகலாம். இன்றையச் சூழலில் மருத்துவ உலகமும் ஆராய்ச்சியாளர்களும், உணவு ஆலோசகர்களும் ஒருமித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் போன்றவை தினசரி சமையலுக்கு உகந்தவை. இவற்றில் ஏதேனும் இரண்டைப் பயன்படுத்தலாம்.சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவற்றைச் சமையலில் (Deep fry) பொரிப்பதற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.சுழற்சி முறையில் ஒன்று மாற்றி ஒன்றைப் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும் தினசரி ஒரு நபருக்கு 4 டீஸ்பூன் போதுமானது.

உருக்கிய நெய்யை ஒரு நபர், ஒரு நாளைக்கு 1-2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.ஒரு நாளைக்கு 15-25 கிராம் EFA போதுமானது. எப்போதுமே இரண்டு அல்லது மூன்றுவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது நல்லது.ஒரு மாதத்துக்கு, ஏதாவது ஓர் எண்ணெயை அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை ஒரு நபருக்குப் பயன்படுத்தலாம்.வனஸ்பதியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. வனஸ்பதி என்று சொல்லக்கூடிய எண்ணெய் இயற்கையானது அல்ல. அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடியது. மிகுந்த கெடுதல் செய்யக்கூடியது.

ஒரு காலகட்டத்தில் தேங்காய் எண்ணெய் மிகவும் கெடுதல் செய்யக்கூடியது என்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்களால் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அந்த ஆராய்ச்சி முழுவதும் அதிகம் கொதிக்கவைத்த மருத்துவப் பொருள்கள் சேர்த்த தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்டவை. இயற்கையாக, பல வருடங்களாக எடுக்கப்பட்ட, முறைப்படி தயாரித்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய், மாரடைப்பு, வாத நோய்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய தன்மை கொண்டவை என ஆய்வுகளில் தெரிந்திருக்கிறது.

மேலும், அவற்றுள் சங்கிலித் தொடர் கொழுப்பு உள்ளது என்றும், நல்ல கொழுப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியில் நிரூபணமானது. காலையில் ஓர் எண்ணெய், மதியம் ஓர் எண்ணெய், இரவில் ஓர் எண்ணெய் என்று எண்ணெய்களை மாற்றிப் பயன்படுத்தலாம்.ஒவ்வொரு மாதமும் ஓர் எண்ணெய் என்று மாற்றிக்கொள்ளலாம்.எண்ணெயில் செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை! மொறுமொறுவென்று வறுக்கப் பயன்படுத்தும் எண்ணெய் விரைவிலேயே கெட்டுவிடும்.

இப்படி பொரிக்கப்பயன்படுத்தும் எண்ணெயை மீண்டும், மீண்டும் பொரிப்பதற்கே பயன்படுத்தாமல், அதை பொரியல் செய்வதற்கு அல்லது வேறு எதற்காகவாவது பயன்படுத்திக் கொள்ளலாம். நாம் பொரிக்க வேண்டியவற்றை எண்ணெயில் முன்னரே போட்டுவிட்டு, பின் எண்ணெயைக் கொதிக்க வைக்கக் கூடாது. பொரிப்பதற்கான நிலையில் அதாவது, எண்ணெய் கொதித்த பின்னர் பொரிக்க வேண்டியவற்றைப் போட வேண்டும்.

ஓரிரு முறை முன்னரே பயன்படுத்திய எண்ணெயுடன் புதிதாக எண்ணெய் சேர்க்கக் கூடாது. எந்த எண்ணெயாக இருந்தாலும் மிதமாகப் பயன்படுத்த வேண்டும். சமையல் எண்ணெய்களை அதிக வெப்பம் மற்றும் சூரிய ஒளி படாமல் வைத்திருப்பது அவசியம். கண்டிப்பாக எண்ணெய்களை அடுப்பின் மிக அருகில் வைத்திருப்பது தவறு.ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் அதிக வெப்பத்தில் சூடாக்கிப் பயன்படுத்தும்போது அது கெட்ட கொழுப்பாக (Trans fat) மாறி புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்குக் காரணமாகிறது.

இன்று பல உணவுப் பண்டங்களில் குறிப்பாகத் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ் ஃபேட் (Trans fat) உள்ளதா என்று நாம் பார்த்து வாங்க வேண்டும். ரெடிமேட் ஸ்நாக்ஸ் (Readymade Snacks) வாங்கும்போது உறையில், “டிரான்ஸ்ஃபேட் (Trans fat)’ உள்ளது என்று எழுதப்பட்டிருந்தால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.

தேவையான அளவு எண்ணெயைப் பயன்படுத்தி, உணவை டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவது நல்லது. பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நல்லதல்ல. எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது டிரான்ஸ் ஃபேட் உற்பத்தியாகி, அது விஷமாக மாறுகிறது. நல்லெண்ணெய்எண்ணெய்களிலேயே சிறந்தது என அனைத்து மருத்துவர்களும் கூறுவது நல்லெண்ணெயைத்தான். எள்ளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் சத்துகள் நிறைந்துள்ளன.

*வைட்டமின் பி 6 மற்றும் இ, ஆன்டிஆக்ஸிடண்ட், தாது உப்புகளான இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம், செம்பு மற்றும் கால்சியம் போன்றவை
நிறைந்துள்ளன.

*லினொலிக் அமிலம் (Linoleic acid) மற்றும் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (MUFA) நல்லெண்ணெயில் அதிகமாக உள்ளதால், இது சமையலுக்கும் நமது ஆரோக்கியத்துக்கும் மிகவும் உகந்தது.

*மேலும், சமையலைத் தவிர்த்து சருமப் பராமரிப்புக்கும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.

*உடல் உஷ்ணத்தைக் குறைக்க, உடல் சீராகச் செயல்பட எண்ணெய்க் குளியலுக்கு முதலில் பரிந்துரைக்கப்படுவது நல்லெண்ணெய்தான். கடலை எண்ணெய்கடலை எண்ணெய் சமையலுக்கு உகந்தது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தருகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. புற்றுநோய்க் கட்டிகள் வராமல் நம்மைக் காக்கிறது.

கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பதால், கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைப்பவர்கள் உணவுடன் சிறிதளவு புளியை சேர்த்துக்கொள்ளலாம். புளியிலுள்ள நார்ச்சத்து, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.தேங்காய் எண்ணெய்கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமல்லாமல், தேகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.சிறிதளவு தேங்காய் எண்ணெயைச் சமையலில் சேர்த்தால், உணவு மணமாகவும் சுவையுடனும் இருக்கும்.

மிகவும் குளுமையானது. சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கும். செயற்கை நிறம் எதுவும் சேர்க்கப்படாத வரை நிறமற்ற தன்மையுடன் இருக்கும்.
தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. செரிமானக் கோளாறைச் சரி செய்வதோடு, சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.வயிற்றுப்புண்ணைச் சரிசெய்யும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் கூட்டும். வாதத்தைச் சமன் செய்யும்.

ஆளிவிதை ஆயில்ஃப்ளாக் சீட் (Flaxseed) எண்ணெய் சாப்பிடுவது நல்லது என்பது தற்போது பிரபலமாகி வருகிறது. இதிலுள்ள ஒமேகா 3, மீனில் உள்ள ஒமேகா 3 ஆகியவை ஆலிவ் ஆயிலிலும் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும்.

*இதன் மணம் மற்றும் நிறத்துக்குக் காரணம், இதில் உள்ள ‘செசமின்’ (Sesamin) என்னும் வேதிப்பொருளே.
*இந்த வேதிப்பொருள் சருமத்தின் முதுமையைத் தடுக்கக்கூடியது.
*இதய நோய்கள் வராமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
*வாரம் ஒருமுறை ஆளிவிதை எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால், சருமம் பளபளக்கும்.
*உடல் உஷ்ணம் குறையும். தவிர உணவிலும் பயன்படுத்தலாம்.

கடுகு எண்ணெய்

கடுகிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயைப் பெரும்பாலும் வட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு இதுஏற்றது. காரமான ருசி உடையது. உஷ்ணத் தன்மை கொண்டது. சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும்.உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். மூட்டுவலியைக் குறைக்கும்.கடுகு எண்ணெயில் உள்ள சல்ஃபர், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும்.

செரிமானச் சக்தியை அதிகரிக்கும். மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். வயிற்றுவலியைப் போக்குவதோடு கப, வாத தோஷங்களைக் குறைக்கும். பித்தத்தை அதிகரிக்கும். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

ரைஸ் பிரான் ஆயில்

தவிட்டிலிருந்து எடுக்கப்படும் இது அரிசித் தவிட்டு எண்ணெய் (ரைஸ் பிரான் ஆயில்) எனப்படுகிறது. இது உணவுக்கு உண்மையான நிறத்தையும் மணத்தையும் கொடுக்கும். சுத்திகரிக்கப்பட்ட இந்த எண்ணெய்க்கு நிறமில்லை, மணமுமில்லை. புரதச்சத்து நிறைந்தது. கொழுப்பு குறைவாக இருக்கும். இதை நீண்ட நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம். இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உணவுகளைப் பொரிக்கச் சிறந்த எண்ணெய், சமையலுக்கு உகந்தது என உலக சுகாதார நிறுவனம் சான்றளித்துள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தைக் காக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வைட்டமின் இ மற்றும் இயற்கை

ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதோடு, சருமத்தைக் காக்கும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அழற்சியைக் குறைக்கும்.

பாமாயில்

விலை மலிவாகக் கிடைக்கும் இந்த எண்ணெய் நடுத்தரவாசிகளிடையே புழக்கத்தில் இருக்கிறது. ‘பாமாயில் நல்லதல்ல’ என்ற கருத்து பரவலாக நிலவினாலும், இதில் உள்ள கரோட்டின் சத்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது.இதில் வைட்டமின் இ மற்றும் ஆன்டிஆக்ஸி–டண்ட் நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். பாமாயில், சமைக்கப்படும் உணவுக்கு நிறத்தையும் மணத்தையும் கொடுக்கிறது.பாமாயிலில் கெட்ட கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் உடல் பருமன் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே குறைந்த அளவு பாமாயிலைப் பயன்படுத்துவது சிறந்தது அல்லது சூரியகாந்தி எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம்.

ரீஃபைண்டு ஆயில்

பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் சமையலுக்குப் பயன்படுத்துவது ரீஃபைண்டு ஆயிலே. இதில் குறைந்த அளவு உயிர்ச்சத்தே உள்ளது. இதற்கு காரணம், அதன் தயாரிப்பு முறை. ரீஃபைண்டு எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது, அதில் உள்ள நிறம், கொழகொழப்புத் தன்மை மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்து அனைத்தும் நீங்கிவிடும்.ரீஃபைண்டு ஆயில்களைத் தயாரிக்கும் போது அவற்றில் உள்ள எண்ணெய் மட்டுமல்லாமல், அதனுடன் உயிர்ச்சத்துகளும் சேர்த்துப் பிரித்தெடுக்கப்படுகின்றன.

சுத்திகரிக்கப்படும்போது எண்ணெய் சூடாவதால், ரசாயனத் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. ஆகவே ரீஃபைண்டு ஆயிலை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.ரீஃபைண்டு எண்ணெய் பயன்பாடு, உடலில் நல்ல கொழுப்புச் சேர்வதைத் தடுக்கிறது. இதனால், பல்வேறுவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

தாவர எண்ணெய்

தாவர எண்ணெய் மனித உடலின் கல்லீரலுக்குச் சென்ற பின்னர் கொழுப்பாக மாறக்கூடியது. பொதுவாக, முழுமையான கொழுப்பு நிறைந்தவை கெடுதல் செய்யக்கூடியவை என்று கருதப்படுகிறது. எந்த எண்ணெய் குளிரான வெப்ப நிலையில் உறைந்துவிடுகிறதோ, அதில் அதிக முழுமையான கொழுப்பு இருக்கிறது என்று பொருள். நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை கல்லீரலில் இருந்து, அடர்த்திக் குறைந்த லிப்போ புரோட்டீன், எல்டிஎல் கொழுப்பு, கெடுதல் செய்யும் லிப்போ புரோட்டீன் ஆக மாறி, நாளடைவில் ரத்தத்தில் கலந்து, ரத்த நாளங்களில் படிந்து இதய நோய்களை உண்டாக்குகிறது.

மீன் எண்ணெய்

மீன் எண்ணெய் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. விலங்குகளிலிருந்து எண்ணெய் எடுப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மீன் எண்ணெயில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் நிறைந்துள்ளது. மீன் எண்ணெயைப் பெரிய அளவில் சமையலில் பயன்படுத்த முடியாது. ஆகவே, மாத்திரை வடிவில் உட்கொள்ளலாம். இது குறைந்த ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும். உடல் பருமனைக் குறைக்கும். சிலருக்கு மீன் எண்ணெய் மாத்திரை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. அது உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். ஒரேவிதமான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அதில் உள்ள நல்ல கொழுப்புடன் கெட்ட கொழுப்பும் சேர்ந்து உடலில் தங்கும். ஆகவே, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு வகையான எண்ணெயைப் பயன்படுத்தினால், எண்ணெய்களின் நன்மையை மட்டும் பெறலாம். அவற்றிலுள்ள கெட்டதைத் தவிர்க்கலாம்.

சமையலுக்காக வாங்கியிருந்தாலும், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை வைத்திருக்கலாம். மாறாக, அந்தந்த எண்ணெய் பாக்கெட்டுகளில் உள்ள காலாவதித் தேதியை வைத்தும் பயன்படுத்தலாம். அதில் குறிப்பிட்டுள்ள நாட்கள் வரை, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.

இப்படி சேமித்து வைத்துப் பயன்படுத்தும் எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். அது பொதுவானதே. மேலும், எண்ணெயின் பயன்பாட்டுக் காலம் அவற்றின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் கெட்டித்தன்மையை அடைந்துவிட்டால், அதன் ஆயுள் காலம் முடிந்துவிட்டது என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் கெட்டியாகி விடும். குளிர்ச்சியானது மைனஸ் 10 டிகிரிக்கும் கீழே செல்லும்போது எண்ணெய் அதன் கெட்டித்தன்மையை அடையும்.

செக்கு எண்ணெய்

செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்தினால், ரசாயனங்களில் இருந்து விடுபடலாம். செக்கில் ஆட்டிய எண்ணெய் பழுப்பாக (Brown) இருப்பதைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. ஆனால் ரீஃபைண்டு ஆயிலின் வெளிர் நிறத்தையும் தண்ணீர் போல் இருப்பதையும் பார்த்து அதுதான் சிறந்தது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது.

உடல் எடையைக் குறைக்க என எண்ணெய் வாங்கும்போது அதிகக் கவனம் தேவை. ஆலிவ் ஆயில் நம் கலாசாரத்தின்படி எண்ணெயில் பொரிப்பதற்கு ஏற்புடையதாக இருக்காது. இதன் விலையும் மிக அதிகம். சருமப் பராமரிப்புக்குச் சிறந்தது; உடனடியாகத் தயாரிக்கும் சிற்றுண்டிகளுக்கு ஏற்றது. ஆதலால் ஆலிவ் ஆயில்தான் பெஸ்ட் என்பது இல்லை. நம் முன்னோர் பயன்படுத்திய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயே உணவு சமைப்பதற்குப் போதுமானது. வட இந்தியர்கள் அவர்களது சூழலுக்கேற்ற கடுகு எண்ணெய் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.

கலப்படமற்ற, சுத்தமான இயற்கைக் குணங்கள் மாறாமல், பாரம்பரிய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. செக்கு முறையில் எடுக்கப்படும் எண்ணெயில் வெப்பம் இருக்காது. இதனால், எண்ணெயில் ஏற்படும் உயிர்ச்சத்துகளின் இழப்பு தடுக்கப்படும். செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு சிறிது நிறம் குறைவாக இருக்கும். தானியங்களின் மணம் நிறைந்திருக்கும். இவற்றை ஒரு வருட காலம் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். செக்கு எண்ணெய் நல்ல மணத்துடனும் கெட்டித்தன்மையுடனும் இருக்கும். அதிக பிசுபிசுப்புத்தன்மை அற்றதாக இருக்கும்.

*செக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியது. நோய்த் தாக்குதல்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை வழங்கக்கூடியது.

*வைட்டமின்கள், இரும்புச் சத்து, துத்தநாகம், மக்னீசியம், செம்பு மற்றும் கால்சியம் சத்துகள் செக்கு எண்ணெயில் நிறைந்துள்ளன.

*இவற்றில் உள்ள தாதுப்பொருள்கள் கைகால் மூட்டு எலும்புகளுக்கு வலிமையைத் தரும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.

*உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடலைச் சுத்தம் செய்வதோடு, முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு பிரச்னைகளைக் குணப்படுத்தும். உடலை வலுப்படுத்தும்.யாரெல்லாம் எண்ணெய் பயன்படுத்தக்கூடாது?

அனைவரும் எண்ணெயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான கொழுப்பு, எண்ணெயின் மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது. எண்ணெயின் அளவைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர, ஒரேடியாக ஒதுக்கிவிடக் கூடாது.இதய நோயாளிகள் நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி, ரீஃபைண்டு ஆயில், ரைஸ் பிரான் ஆயில் போன்றவற்றை உபயோகிக்கலாம். நெய், வனஸ்பதி, பாமாயில் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.

சமையல்கலை நிபுணர் நித்யா

நடராஜன் நட் பட்டர் கப்ஸ் செய்யும் முறையை இங்கே விளக்குகிறார்…

நட் பட்டர் கப்ஸ்

தேவையான பொருட்கள்

பாதாம் – 1 கப்
தேங்காய் எண்ணெய் – ¼ கப்
தேன் – 2 டீஸ்பூன்
பேரீச்சம்பழம் – 1 கப்
கோகோ பவுடர் – ½ கப்
பீநட் பட்டர் – 1 கப்
(Peanut Butter)
பாதாம் – நறுக்கியது கொஞ்சம்
பேப்பர் கப்ஸ் – 10.

செய்முறை

முதலில் பாதாம் மற்றும் பேரீச்சம்பழத்தை மிக்ஸியில் சேர்த்து நன்கு அடிக்கவும்.பின் இதன் கலவையை எடுத்து கப்கேக் கவரில் கால்வாசி போட்டு நன்கு அழுத்தவும். பின் அதன் மேல் சிறிது பீநட் பட்டரை சேர்க்கவும். இதை குளிர்சாதனப் பெட்டியில் அரை மணி நேரம் வைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோகோ பவுடர், தேங்காய் எண்ணெய், தேன் ஆகியவற்றை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள நட் பட்டர் கப்ஸை எடுத்து அதன் மேல் இந்த கோகோ மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையை சேர்த்து, அதன் மேல் நறுக்கிய பாதாமை சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் 1 மணி நேரம் வைத்து எடுத்து பின் பரிமாறலாம். மிகவும் ருசியானது மற்றும் சத்தானது. தேங்காய் எண்ணெய் வாசம் பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்தால் நொடியில் காலியாகிவிடும்.தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து டீஸ்பூன் வரை பயன்படுத்துவது சிறந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேவை தேனிலவு! (அவ்வப்போது கிளாமர்)
Next post பெண்களுக்கு பேக் பெய்ன் வரக் காரணம்? (மருத்துவம்)