யுடியூபில் கோலங்கள் வரைந்து மாத வருமானம் ஈட்டலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 26 Second

‘சின்ன வயசுல, என் அம்மாவும் அப்பாவும் விவசாயம் பார்க்க போயிடுவாங்க. அப்போ வீட்டு வேலைகளை எல்லாம் நான் தான் செய்வேன். காலையில எழுந்ததும் வீட்டுக்கு பேப்பர் வரும். அந்த பேப்பர்ல பண்டிகை காலங்களில் தினமும் ஒரு கோலம் வெளியிடுவாங்க. ஒவ்வொரு நாளும், அந்த பேப்பரில் வெளியாகும் கோலம், அப்படியே என் வீட்டு வாசலிலும் இருக்கும். வாசல்ல கோலத்தை வரைஞ்சிட்டு வீட்டுக்குள்ள போய் ஒளிஞ்சு நின்னு பார்ப்பேன்.

அந்த பக்கமா நடந்து போறவங்க யாராவது என் கோலத்தை பாக்குறாங்களான்னு பார்ப்பேன். வீட்டைக் கடந்து செல்பவர்களில் யாராது ஒருத்தர் நின்று என் கோலத்தை பார்த்து ரசிச்சா போதும். அன்று முழுக்க அதை நினைச்சு பார்க்கும் போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும். ஆனா இப்போ, யூடியூபில் என்னோட கோலங்களை பல லட்சம் பேர் பார்த்து, பல ஆயிரம் கமெண்டுகளில் என்னை பாராட்டுகின்றனர்” என வியக்கிறார் ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த
சுனிதா பகலா.

‘‘பள்ளி படிப்பு எல்லாம் என் கிராமத்தில் தான் முடித்தேன். பி.காம் ஹைதராபாத்தில். முதுகலைப் பட்டப்படிப்பை தொலைதூர கல்வியில் தொடர்ந்தேன். படிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், ரங்கோலி வரைவது என்னுடைய ஃபேஷன், ஆர்வம் என்று எல்லாம் சொல்லமாட்டேன். சின்ன வயதில் இருந்தே கோலம் வரைவது என்பது என்னுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு இயல்பான விஷயம். தினமும் காலை என் வீட்டு வாசலில் நான் தான் கோலம் போடுவேன். எப்போதாவது புதிய டிசைன்களை என் நோட்டில் வரைந்து வைத்துக்கொள்வேன். அவ்வளவு தான். இதை தாண்டி கோலங்களுக்கு என பெரிய நேரம் எல்லாம் ஒதுக்கியது கிடையாது.

திருமணமாகி என் கணவர் வீட்டுக்கு வந்த போது, என்னுடன் நான் சின்ன வயதில் இருந்து வரைந்த கோல புத்தகங்களையும். நியூஸ்பேப்பரில் இருந்து சேகரித்த கோலங்களையும் எடுத்துச் சென்றேன். என் கணவர் என் கோல புத்தகத்தை வியப்பாக பார்த்தார். அப்போது தான் எனக்கே புரிந்தது. எனக்குள் கோலம் மீது தனிப்பட்ட ஆர்வம் இருப்பதை உணர்ந்தேன். குழந்தைகள் பிறந்து அவர்கள் கொஞ்சம் வளர்ந்ததும், எனக்கு வீட்டில் என்ன செய்வது என்று தெரியவில்லை. செல்போன் எல்லாம் நான் பயன்படுத்த மாட்டேன். டி.வியும் பார்க்க மாட்டேன். அதனால் என்னுடைய கவனம் சமையல் மீது திரும்பியது. யுடியூபில் ஒரு சமையல் சேனல் தொடங்கலாமா என்று யோசித்து, முயற்சி செய்தேன்.

எனக்கு செல்போன் பயன்படுத்த தெரியாததால், சமையல் சேனலுக்காக அதிக நேரமும் கடின உழைப்பும் தேவைப்பட்டது. அதற்காக தனிப்பட்ட நேரம் என்னால் செலவிட முடியவில்லை. அதனால் சமையல் சேனலை அப்படியே கைவிட்டேன். ஆனால் மனசுக்குள் மட்டும் வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதல் இருந்து வந்தது. அப்போது ஒரு நாள் என் கோலத்தைப் பார்த்த பக்கத்து வீட்டினர், உங்கள் வீட்டில் தான் மொத்த லட்சுமி கடாட்சமும் இருக்கிறது என்று பாராட்டினர். அப்போது என் மனதில் ஒரு எண்ணம் தோன்றியது.

கோலம் வரைவதில் ஏன் கவனம் செலுத்தக் கூடாதுன்னு. என் கணவரிடம் இதை தெரிவித்ததும் அவரும் எனக்கு உதவ தயாராக இருந்தார். நான் இத்தனை நாட்களாக சேகரித்து வைத்திருந்த நூற்றுக்கணக்கான கோலங்களை ஒன்வொன்றாக மீண்டும் ஒரு மர டீபாயில் வரைந்தேன். நான் வரைந்ததை என் கணவர் வீடியோவாக பதிவு செய்தார். பிறகு அதை எடிட் செய்து யுடியூபில் ‘‘ஈசி ரங்கோலி” எனும் சேனலை உருவாக்கி வெளியிட்டார். ஆரம்பத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு மிகவும் குறைவான பார்வையாளர்கள் தான் இருந்தாங்க. ஆனால் நான் தினமும் வீடியோ போடுவதை மட்டும் விடவில்லை. எப்படி காலையும் மாலையும் என் வீட்டு வாசலில் கோலம் போடுவேனோ அதே போல, எங்கள் வீட்டு டீபாய் மீதும் கோலம் போட்டு தினமும் இரண்டு வீடியோவை பதிவேற்றி விடுவேன்.

ஆரம்பத்தில் ஒரு சப்ஸ்க்ரைபர் அதிகமானாலே ரொம்ப சந்தோஷமாக இருக்கும். பத்து நூறானது, நூறு ஆயிரம் ஆனது. ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைக்க பல மாதங்கள் ஆனது. ஒரு லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் கிடைத்ததும் எனக்கு யூடியூபில் இருந்து சில்வர் பட்டன் கொடுத்தார்கள். பின், எப்படியாவது பத்து லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் உடன் கோல்டுபட்டன் வாங்க வேண்டும் என்பதை என் இலக்காக வைத்தேன். கோல்டன் பட்டனும் கிடைத்தது. இப்போது என் அடுத்த இலக்கு டைமண்ட் பட்டன் தான். இப்போது எனக்கு 21.6 லட்சம் சப்ஸ்க்ரைபர்ஸ் இருக்கிறார்கள். நிச்சயம் ஒரு கோடி சப்ஸ்க்ரைபர்ஸ் வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றவர் தானே வீடியோ எல்லாம் எடுக்க கற்றுக் கொண்டு அதை பதிவேற்றி வருகிறார்.

‘‘இப்போது பலரும் அப்பார்ட்மெண்ட் வீடுகளில் வசிப்பதால், அதற்கு ஏற்ற மாதிரி சிறிய கோலங்களையும் என் பக்கத்தில் பார்க்கலாம். வெறும் விழா காலங்களில் தான் பெரிய கோலங்கள் இருக்கும். மற்ற படி எளிமையான டிசைனில் சிறிய கோலங்களை நேர்த்தியாக வரைந்தாலே அது மிகவும் அழகாக இருக்கும். நாம் எவ்வளவு பெரிய கோலம் வரைகிறோம் என்பதை தாண்டி எவ்வளவு நேர்த்தியுடன் வரைகிறோம் என்பதுதான் முக்கியம். டிசைன்கள், நேர்த்தியை தாண்டி நாம் பயன்படுத்தும் கோல மாவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் வீட்டு மேற்பரப்பை பொருத்து கோலமாவின் வகைகளும் மாறும்.

தெருவில் தார் ரோட்டில் கோலம் போடப் போகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு வகையான கோலமாவை பயன்படுத்த வேண்டும். அப்பார்ட்மெண்டில் டைல்ஸ் தரையில் கோலம் போடும் போது அதற்கு வேறுவிதமான கோல மாவை பயன்படுத்த வேண்டும். நான் போர்டில் தான் கோலம் போடுகிறேன். அதற்கு ஏற்ற கோலமாவை மொத்தமாக 25 கிலோவாக வாங்கி அதை மீண்டும் சலிப்பேன். அதில் இருக்கும் மண், அழுக்கை எல்லாம் நீக்கிடும். தேவைப்பட்டால் கொஞ்சம் அரிசி மாவு கலந்து வரைவேன்.

பலருக்கு அழகான கோலம் வரையணும்ன்னு ஆசை இருக்கும். ஆனால் ஆரம்பத்தில் கோலமாவை எடுத்து வரையும் போது நிச்சயம் நாம் எதிர்பார்க்கும் நேர்த்தி கிடைக்காது. இதற்கு நிறைய பயிற்சியும், பொறுமையும் தேவை. கோலமாவில் வரைய முடியவில்லை என்றால் சாக் பீஸ் கொண்டு வரையலாம். அதன் மீதே கோலமாவை வைத்து பயிற்சி செய்யலாம். இப்படி செய்தால் சீக்கிரம் கற்றுக்கொள்ள முடியும். எனக்கு இதை என் அம்மா தான் சொல்லி கொடுத்தார். அவர் தான் என் குரு. அவர் தினமும் காலையில் வாசலில் கோலம் போடுவதை பார்ப்பேன். நான் அவர் வரைந்த கோலத்திற்கு அருகில் ஒரு சிறிய கோலத்தை வரைவேன். பின் நாள் போக்கில் நானே கோலம் போட ஆரம்பித்துவிட்டேன்.

இதுவரை என்னுடைய யூடியூபில் ஐயாயிரத்திற்கும் அதிகமான கோல டிசைன்களை வரைந்துள்ளேன். கலை எல்லா இடத்திலும் இருக்கிறது. இயற்கையில், கோயில் கோபுரத்தில், மக்கள் அணிந்திருக்கும் உடையில், நகையில் என நாம் பார்க்கும் இடத்தில் எல்லாம் கலையும் அழகியலும் இருக்கின்றன. அதை நாம் எப்படி மாற்றி அமைக்க வேண்டும்ன்னு பார்க்கணும். நான் வெளியே செல்லும் போது எனக்கு பிடித்த டிசைன்களை எப்படி கோலத்தில் கொண்டு வரலாம்ன்னு யோசிப்பேன். முதலில் ஒரு பேப்பரில் வரைந்து பார்ப்பேன். அதன் பிறகு இதற்கு எத்தனை புள்ளிகள் வைக்கலாம், எப்படி இதை முழுமையாக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்த பிறகு தான் கோலம் போட ஆரம்பிப்பேன்’’ என்றவர் காலை, மாலை என இரண்டு வேளையும் கோலங்களை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்.

‘‘தினமும் காலை 5.30 மணிக்கு ஒரு வீடியோ வெளியிடுவேன். அதன் பிறகு மாலையில் ஒரு கோல வீடியோ. சிலர் நிறங்கள் கலக்காத கோலங்களை விரும்புவார்கள். சிலர் நிறங்கள், பூக்கள் கலந்து கோலங்களை விரும்புவார்கள். அதனால் அனைவரது விருப்பங்களையும் மனதில் வைத்துக்கொண்டு தான் என் கோலங்களை ஒவ்வொன்றாக வெளியிடுவேன்.

இது மட்டும் இல்லாமல் தொடர்ந்து என் பார்வையாளர்களின் கமெண்டுகளுக்கும் பதிலளித்துவிடுவேன். என் யுடியூப் கோலத்தைப் பார்த்து அவர்கள் வரைந்த கோலத்தை எனக்கு போட்டோ எடுத்து அனுப்புவார்கள். ஆரம்பத்தில் செல்போன் கூட உபயோகிக்க தெரியாத எனக்கு இப்போது யுடியூப் மூலம் நிலையான மாத வருமானம் வருகிறது. இதில் எல்லாம் வருமானம் ஈட்டலாம் என்றே எனக்கு தெரியாது. எதிர்காலத்தில் சமையல் சார்ந்த ஒரு யுடியூப் சேனலும் ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது” என்கிறார் சுனிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடல் நீரிழப்பு குறித்து அறிந்துகொள்ளுங்கள்…!! (மருத்துவம்)
Next post உடலுறவுக்கு பின் செய்யவேண்டிய விளையாட்டுகள் பற்றி தெரியுமா ! தெரியவில்லை என்றால் இதைப் படிங்க..!! (அவ்வப்போது கிளாமர்)