என் பேச்சால்தான் மக்களை கவர்ந்தேன்! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 18 Second

‘‘நான் பிறந்த மூணு மாசத்தில் பார்வையில் பிரச்னை இருப்பதை கண்டுபிடிச்சாங்க. விழித்திரை இயங்காத காரணத்தால் பார்வை கிடைப்பது கஷ்டம்னு டாக்டர் சொல்லிட்டார். அந்தக் குறைபாடு எனக்கு ஒரு குறையா தெரியல’’ என்கிறார் எம்.ஏ பட்டதாரியான சாஹித்யா. இவருக்கு பிறவியிலேயே பார்வை குறைபாடு இருந்தாலும், தனக்கான ஒரு அடையாளத்தினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பிளாக்‌ஷீப் என்ற ஊடக நிறுவனத்தில் வீடியோ மற்றும் ஆடியோ ஜாக்கியாக வேலை பார்த்து வரும் சாஹித்யா இந்தியாவின் முதல் பார்வைக் குறைபாடு கொண்ட வீடியோ ஜாக்கி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

‘‘என் பக்கபலம் என் அம்மாதான். எனக்கு பார்வை வராதுன்னு சொன்னதும், அவங்க என்னை எப்படி நல்லபடியா வளர்க்கணும்னு யோசிச்சாங்க. நான் பேச ஆரம்பித்த பிறகு பழங்கள், காய்கறிகள் என ஒவ்வொரு பொருளையும் தொட்டுப் பார்க்க சொல்லி அது என்னென்னு சொல்வாங்க. என்னுடைய நான்கு வயசில் நான் சிறப்புப் பள்ளியில் சேர்ந்து படிச்ேசன். பிரெய்லி முறையில் படிக்க வேண்டும் என்பதால், என் பெற்றோருக்கும் அதற்கான பயிற்சி அளிச்சாங்க. அம்மாவும் பிரெய்லியை எப்படி பயன்படுத்தணும்னு கத்துக்கிட்டாங்க. வீட்டில் அவங்கதான் எனக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாங்க.

இதற்கிடையில் எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனது. அதனால் சிறப்பு பள்ளியில் ஏழாம் வகுப்பு வரைதான் படிச்சேன். எட்டாவது முதல் மற்ற பசங்க படிக்கும் பள்ளியில்தான் படிச்சேன். நான் மட்டும் என்னுடைய பாடங்களை பிரெய்லி யில் பதிவு செய்வேன். கணிதம் தவிர மற்ற பாடங்கள் எல்லாம் நான் அவங்க சொல்லிக் கொடுக்கும் போது புரிந்து கொள்வேன். கணிதம் மற்றும் அறிவியல் படங்களை அம்மா எனக்கு வீட்டில் பிரெய்லி முறையில் சொல்லிக் கொடுப்பாங்க. காரணம், என் ஆசிரியர்களுக்கு பிரெய்லி சிஸ்டம் தெரியாது என்பதால், +2 வரை அம்மா தான் சொல்லிக் கொடுத்தாங்க. அம்மாவும் நான் படிச்ச பள்ளியிலேயே ஆசிரியரா வேலைக்கு சேர்ந்ததால், எனக்கு பாடம் சொல்லிக் கொடுக்க வசதியா இருந்தது. 10வது மற்றும் +2வில் நான் நல்ல மதிப்பெண் எடுத்தேன்’’ என்றவர் ஊடகத் துறையில் வந்தது குறித்து விவரித்தார்.

‘‘சின்ன வயசில் எனக்கு மைக்கில் பேச பிடிக்கும். அப்பா மைக் வாங்கிக் கொடுத்தார். அதை கொண்டு வீட்டில் நடக்கும் சின்னச் சின்ன குடும்ப விழாக்களை நான் தொகுத்து வழங்குவேன். அது தான் நிகழ்ச்சியை ெதாகுத்து வழங்குவதுன்னு எனக்கு அப்ப தெரியல. அதன் பிறகு மீனாட்சி மேடம், பார்வையற்றவர்களுக்கான தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சாங்க. அதற்கான குறும்
படத்தை வசந்த் அவர்கள் இயக்க, நான் அதில் சின்ன கதாபாத்திரத்தில் நடிச்சேன்.

அதைப் பார்த்து மீனாட்சி மேடம் அவங்க நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க சொன்னாங்க. இதெல்லாம் நான் +2 படிக்கும் போதே செய்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில்தான் எனக்கு ரேடியோ கேட்பதில் ஆர்வம் ஏற்பட்டது. பாட்டுக்கு இடையே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் பேசுவதை கேட்பேன். அது எனக்கு பிடிச்சிருந்தது. வீட்டில் அவர்களை போல் பேசிப் பார்ப்பேன். அப்போது ரேடியோ ஜாக்கிக்கான 6 நாள் வர்க்‌ஷாப் குறித்து தெரிந்து அதில் சேர்ந்தேன். பயிற்சி முடிக்கும் போது, மாக் டெஸ்ட் இருக்கும்.

அதில் நான் நல்லா பேசினதைப் பார்த்த என் பயிற்சியாளர்தான் எனக்கு ரேடியோ ஜாக்கிக்கு வாய்ப்பு இருப்பது குறித்து சொன்னார். இங்கு விக்கி அண்ணா தான் நேர்காணல் செய்தார். அவருக்கு நான் பேசியது பிடிச்சு போச்சு. 2011ல் அங்கு வேலைக்கு சேர்ந்தேன். பல நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கி வருகிறேன். 2022ல் அதே நிறுவனம் சேனலும் ஆரம்பிச்சாங்க. அதில் வீடியோ ஜாக்கியாக எனக்கு வாய்ப்பு கொடுத்தாங்க. இப்ப நான் இரண்டு துறையிலுமே நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குறேன்’’ என்றவர் வீடியோ ஜாக்கியாக சந்தித்த சவால்கள் பற்றி விவரித்தார்.

‘‘எனக்கு மத்தவங்க மாதிரி கைய ஆட்டி பேசத் தெரியாது. அவங்க எப்படி பேசுவாங்கன்னு நான் பார்த்தது இல்லை. அதனால சாதாரணமா தான் பேசுவேன். முதலில் மக்கள் என்னை ஏத்துப்பாங்களான்னு தயக்கம் இருந்தது. ஆனால் எனக்குள் ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. என்னுடைய பேச்சுத் திறமையால் கண்டிப்பா மக்களை ஈர்க்க முடியும்னு நினைச்சேன். அதில் சக்சஸும் அடைந்தேன்.

பலர் என்னை பாராட்டும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு. நான் எதையும் திட்டமிடல. ஆனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திப்பேன். கொடுக்கும் வேலையை சரியா செய்யணும். மீடியா துறையில் என் குரல் மூலம் நான் நல்ல ஒரு எண்டர்டெயினரா இருக்கணும். அது நிகழ்ச்சி தொகுப்பாளரா இருந்தாலும் சரி… டப்பிங் செய்தாலும் சரி… எதுவாக இருந்தாலும் அதில் சாதிக்கணும்’’ என்றார் சாஹித்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஆண்களிடம் எளிதில் மயங்கும் பெண்கள் எப்படிப்பட்டவர்கள்…?(அவ்வப்போது கிளாமர்)
Next post மணப்பெண்கள் விரும்பும் நகாஸ் நகைகள்!! (மகளிர் பக்கம்)