மணமகள் கையை அலங்கரிக்கும் போர்ட்ரெட் மெஹந்தி! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 59 Second

இரவு படுக்கும் முன் உள்ளங்கைகளில் மருதாணி வைத்து காலையில் காய்ந்தவுடன் கழுவி சிவந்திருக்கும் நம் கையை பார்க்கும் போது வரும் ஆனந்தமே தனிதான். நம்முடைய கைகளை வளையல்கள், மோதிரம், பிரேஸ்லெட் கொண்டு அலங்கரித்துக் கொண்டாலும், மெஹந்தி கொடுக்கும் அலங்காரம் நம் கைகளை தனித்து எடுத்துக் காட்டும். இதில் பல வகை டிசைன்கள் இருந்தாலும், இதில் வேற என்ன புது மாதிரியான டிசைன்கள் உள்ளன என்று பெண்கள் தேடிக்கொண்டே இருக்கிறார்கள். இதனாலேயே புதுப்புது டிசைன்கள் மெஹந்தியில் அறிமுகமாகிக் கொண்டே இருக்கிறது. அந்த டிசைன்களில் புதுவரவுதான் ‘போர்ட்ரெட் மெஹந்தி.’

திருமண தம்பதிகளின் உருவங்களை அப்படியே மெஹந்தியில் டிசைனாக வரைவதுதான் போர்ட்ரெட் மெஹந்தி. அதனை மிகவும் நேர்த்தியாக வரைந்து வருகிறார் மெஹந்தி டிசைனர் ராஜலஷ்மி. ராஜிஸ் மெஹந்தி என்ற பெயரில் மெஹந்தி போடுவதை தொழிலாக செய்து வரும் இவர் மணப்பெண்கள் அதிகம் விரும்பும் போர்ட்ரெட் மெஹந்தி குறித்து விவரித்தார்.‘‘நான் சென்னை பொண்ணு. படிச்சதும் சென்னையில்தான்.

எனக்கு சின்ன வயசுல இருந்தே எங்க வீட்டில் அம்மா மெஹந்தி போட்டு விடுவாங்க. அதை பார்க்கும் போது என்னோட கை அலங்கரிச்ச மாதிரி அவ்வளவு அழகா இருக்கும். அதனாலேயே நான் என்னோட கையில் அந்த மெஹந்தி டிசைன் மறையும் போது எல்லாம் திரும்பத் திரும்ப போட்டுக் கொள்வேன். அதன் பிறகு நானே எனக்கு மெஹந்தி போடவும் கற்றுக் கொண்டேன். மெஹந்தியில் நிறைய டிசைன்கள் இருப்பதால், ஒவ்வொன்றையும் கற்றுக்ெகாண்டு போட ஆரம்பிச்சேன். அப்போ நான் 9ம் வகுப்புதான் படிச்சிட்டு இருந்தேன்.

நான் எனக்கு மெஹந்தி போட்டுக் கொள்வதைப் பார்த்து என் நண்பர்களும் தங்களுக்கு போடச் சொல்லி கேட்பார்கள். அவர்கள் மூலமாக மற்றவர்களும் கேட்க எங்கப் பகுதியில நான் நன்றாக மெஹந்தி போடுவேன் என்று எல்லோருக்கும் தெரிய வந்தது. பலர் தங்களின் வீட்டு விசேஷங்களிலும் என்னை அழைச்சு மெஹந்தி போட சொல்லுவாங்க. நானும் எல்லாருக்கும் போட்டு கொடுத்திட்டு இருந்தேன்.

அதனை தொடர்ந்து பியூட்டி பார்லர்களிலும் மெஹந்தி போட என்னை அழைச்சாங்க. அது எனக்கு ஒரு சிறு வருமானத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அந்த சமயத்தில தான் நான் ஏன் இதை ஒரு தொழிலாகவே செய்யக் கூடாதுன்னு எனக்கு தோணுச்சி. அதையே என்னுடைய தொழிலாக மாற்றிக் கொண்டேன். எனக்கு மெஹந்தி போட பிடிக்கும் என்பதால், அந்த வேலையை ரொம்பவே மனத் திருப்தியுடன் செய்ய ஆரம்பித்தேன். வருமானமும் கொடுத்ததால தொடர்ந்து மெஹந்தி வேலைகளை செய்ய ஆரம்பித்தேன்’’ என்றவர் எப்படி மெஹந்தியில் உருவங்களை வரைய கற்றுக் கொண்டார் என்பதை சொல்ல தொடங்கினார்.

‘‘மெஹந்தி கையில் போட்டுக் கொள்ளும் ேபாது, ஒரு பாசிட்டிவான மனநிலையை கொண்டு வரும். வெறுமனே நம்மளோட கைகளை பார்க்கிறதுக்கும் மெஹந்தி போட்ட பிறகு பார்ப்பதற்கும் நிறைய வேறுபாடு தெரியும். மெஹந்தி நம்மோட கைகளை அலங்கரிப்பது மட்டுமில்லாமல், அதை பார்க்கும் போது எல்லாம் மனசுக்கு சந்தோஷமான மனநிலையை கொடுக்கும். அதனாலயே பெண்கள் அதிகம் மெஹந்தியை தங்களுடைய கைகளில் இட்டுக் கொள்ள விரும்புகிறார்கள். நான் ஆரம்பத்தில் இந்தியன் டிசைன், அரபிக் டிசைன், பாரம்பரிய டிசைன்கள், மண்டோலா டிசைன், லோட்டஸ் டிசைன்கள் என பல வகைகள்ல மெஹந்தி போட்டு வந்தேன்.

என்னிடம் வரும் வாடிக்கையாளர்கள் நிறைய புது விதமான மெஹந்தி டிசைன்களையே கேட்டாங்க. இதனாலேயே நிறைய டிசைன்களை போட கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். நான் இந்த துறைக்கு வந்த போதே, என்னைப்போல் பலர் இதே துறையில் இருந்தாங்க. அதனால் நான் இந்த துறையில தனித்தன்மையா தெரியணும்னு நினைச்சேன். அதோட தனித்தன்மை வாய்ந்த டிசைன்கள் தெரிந்திருந்தால் மட்டுமே இந்த தொழிலில் தாக்குப்பிடிக்க முடியும் என்ற நிலைமையும் இருந்துச்சு.

அப்படி புது விதமான டிசைன்களை தேடும் போது தான் வட மாநிலங்களில் மிகவும் பிரபலமான மெஹந்தி டிசைன்களை பற்றி எனக்கு தெரிய வந்துச்சு. இதில் ஒரு டிசைன் வட மாநிலங்களில் ரொம்ப பிரபலமாக இருந்தது. கல்யாணம் ஆகப் போகும் பெண்கள் தங்களுக்கு கணவராக வரப் போகும் கணவரின் பெயரையும் தங்களின் பெயரையும் கைகளில் எழுத சொல்வது வழக்கம். ஆனால் தற்போது புகைப்படமாக வரைந்து கொள்கிறார்கள். இந்த மாதிரி டிசைன்கள் தமிழ்நாட்டில் யாருமே செய்றதில்லை.

இதை பத்தி சொல்லி கொடுக்கவும் இங்க யாரும் இல்லை. அதனால நானே அதை போட்டு பழக ஆரம்பித்தேன். பழகப்பழக எனக்கு எந்த ஒரு புகைப்படத்தையும் பார்த்து வரையும் அளவிற்கு நான் அதில் தேர்ச்சி பெற்றேன். கல்யாணம் ஆகப் போற மாப்பிள்ளை, மணப்பெண்ணோட போட்டோவை பார்த்து அப்படியே மணப்பெண்ணின் கையில வரைவேன். இந்த டிசைன்கள் பெண்களுக்கு பிடிச்சு போனது. ரொம்ப நேரம் நிறைய வகையான டிசைன்களை வரைவதற்கு பதிலா இந்த மாதிரி டிசைன்கள் பார்க்கிறதுக்கு அழகாகவும் ஒரு நல்ல நினைவாவும் இருந்ததால் பெண்கள் விரும்பி தங்களோட கைகளில் வரைய சொன்னாங்க. இத வரைவது கஷ்டம். காரணம், ஒருவரின் முகத்தை ஓவியமாக வரையலாம்.

ஆனால் அதையே மெஹந்தியில் கையில் போடுவது என்பது பெரிய சவால். மணமக்களின் போட்டோக்களை வரைவது மட்டுமில்லாம பல நினைவான விஷயங்களையும் மெஹந்தியில் வரைய தொடங்கினேன். உதாரணத்திற்கு இரண்டு பேரும் சந்தித்து கொண்ட இடம் என்றால், அந்த இடத்தில் அவர்கள் இருப்பது போன்று வரைவது மட்டுமில்லாமல் அவர்கள் சந்தித்த நேரத்தையும் குறிப்பிடுவேன். ஒரு சிலர் தன் வருங்கால துணைவருடன் பைக்கில பயணித்தது மறக்க முடியாத நினைவு என்பார்கள். அதையும் வரைந்து கொடுத்திருக்கிறேன். மோதிரம் மாற்றி கொண்டது, தாலி கட்டுவது என முதல் சந்திப்பிலிருந்து அவர்கள் திருமணம் ஆனது வரை அனைத்தையும் டிசைனாக வரைந்து விடுவேன்.

இந்த மாதிரி மெஹந்திகள் போட்டு கொடுப்பதால அந்த நாள் மட்டுமல்ல மெஹந்தி டிசைனும் மறக்க முடியாததாக அவங்களுக்கு மாறிடுது’’ என்றவர் அவர் மனதை மிகவும் நெகிழ வைத்த சம்பவத்தை பகிர்ந்தார்.‘‘ஒரு முறை கல்யாண ஆர்டர் வந்தது. அப்போது மணப்பெண்ணின் அம்மாவிற்கு மெஹந்தி போட்டுக் கொண்டிருந்தேன். அவர்கள் தனக்கு இரண்டு பெண்கள் என்றும். முதல் பெண்ணிற்கு தான் தற்போது திருமணம் நடைபெறுவதாக சொன்னார்கள். மேலும் அவரின் இரண்டாவது பெண் இறந்துவிட்டதாக கூறி ரொம்ப வருத்தப்பட்டாங்க. நான் உடனே அவர்கள் முகத்தில் ஒரு புன்னகையை பார்க்க விரும்பினேன்.

அவரின் கையில் இரண்டாவது பெண்ணுடைய உருவத்தை மெஹந்தியா வரைந்து கொடுத்தேன். நான் மெஹந்தி போட்டு கொடுத்ததை பார்த்த அந்த அம்மா, அவங்க பெண்ணே திருமணத்திற்கு வந்த மாதிரி இருக்குன்னு சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டாங்க. அவர்களின் கண்ணில் தென்பட்ட அந்த சந்தோஷத்திற்கு ஈடு இணையே கிடையாது. நான் இவ்வளவு காலம் மெஹந்தி போட்டு இருந்தாலும், அந்த நாளை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. மெஹந்தி பெண்களுக்கானது மட்டுமில்லை… தற்போது ஆண்களும் திருமண நாளன்று தங்களின் கைகளில் மணப்பெண்ணின் உருவத்தை வரைய சொல்லிக் கேட்கிறார்கள்’’ என்றவர் பல பிரபலங்களின் விருப்பமுள்ள மெஹந்தி டிசைனராக உள்ளார்.

‘‘நான் பயன்படுத்துற மருதாணிகள் எல்லாமே இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவது. நான் எந்த விதமான ரசாயனமும் இதில் கலப்பதில்லை. நானே இதை தயாரிக்கிறேன். கடைகளில் விற்கும் மெஹந்தி கோன்களை வாங்குவதில்லை. அதனால் தான் நான் போடும் மெஹந்தி 10 நாட்கள் வரைக்கும் அவர்களின் கைகளில் இருக்கும். நம் முன்னோர்கள் திருமண வைபோகம் மட்டுமில்லாமல் தீபாவளி, பொங்கல் போன்ற விசேஷ நாட்களிலும் மருதாணி இலையை அரைத்து அதை கையில் சொப்பு போல் வைத்துக் கொள்வது வழக்கமாக இருந்தது.

அது மாறவில்லை. ஆனால் கைகளில் போடப்படும் டிசைன்கள் தான் மாறியுள்ளன. மேக்கப் போடுவது போல், கைகளில் மெஹந்தி டிசைன்களும் போட்டுக் கொள்கிறார்கள். சாதாரண மருதாணி சொப்பு என்றால் வீட்டில் யார் வேண்டுமானாலும் வைத்துவிட முடியும். ஆனால் அதுவே டிசைனாக வரையும் போது பார்க்க அழகாக இருக்கணும். அதனால் பல பெண்கள் இதையே தொழிலாக மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். அதனால் நான் இதற்கான பயிற்சியும் அளித்து வருகிறேன். கடந்த இரண்டு வருஷத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் என்னிடம் பயிற்சி எடுத்துள்ளனர்’’ என்றவர், பாடல் வரிகளில் உள்ள முக்கியமான வரிகளை மட்டும் தேர்வு செய்து அதை மெஹந்தி டிசைனாக மாற்ற முயற்சி செய்து வருவதாக கூறினார் ராஜலஷ்மி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேனின் வகைகளும் பயன்களும்!! (மகளிர் பக்கம்)
Next post செக்ஸ் நமக்கு பாதுகாப்புக் கவசம்?(அவ்வப்போது கிளாமர்)