பருவ மழையும்… வீட்டின் பாதுகாப்பும்!! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 52 Second

மழைத் தூறல்களை பார்த்தவுடன் வீட்டு பால்கனியில் சூடான தேநீர் அருந்திகொண்டு அந்த மழையினை ரசிக்க வேண்டும் என்றுதான் நம் மனம் துடிக்கும். அதே சமயம் மழையினால் நம்முடைய அழகான வீடுகளுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்கிறார் நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் அலங்கார துறை இயக்குனர் மகேஷ் ஆனந்த். இவர் பருவக்காலத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணத்தால் கட்டிடங்களில் நீர்க்கசிவு, ஈரப்பதம், பூஞ்சை ஏற்படும். இவை சுவர்களிலும், வீட்டுக் கூரைகளிலும் விரிசல்கள் ஏற்படவும், சுண்ணாம்பு உரிந்து விழுவதற்கும் வழிவகுக்கிறது என்கிறார். மேலும் வெயில் மட்டுமில்லாமல் மழைக்காலத்திலும் நம்முடைய வீட்டின் சுவர்கள் மற்றும் உட்புறங்களை எவ்வாறு எளிய முறையில் பாதுகாக்கலாம் என்பது குறித்து ஆலோசனை வழங்குகிறார்.

‘‘பொதுவாக எப்படி திடமான கட்டிடமாக இருந்தாலும், வெயில், மழை போன்ற இயற்கை சீதோஷ்ணநிலையை சந்திக்கும் போது, நாளடைவில் அது தன் பொலிவினை இழக்க வாய்ப்புள்ளது. இதன் ஆதாரமாக சுவற்றில் நீர்க்கசிவு, ஈரப்பதம் மற்றும் பூஞ்சை போன்ற பிரச்னைகள் ஏற்படும். இந்த பிரச்னை பெரும்பாலும் வீட்டின் மொட்டைமாடி, கழிவறை, பால்கனி மற்றும் அடித்தளம் போன்ற பகுதியினை அதிகம் பாதிக்கும். இந்த பாதிப்பில் இருந்து நம்முடைய வீட்டை மழைக்காலம் முன் பாதுகாக்க வாட்டர் ப்ரூஃப்பின் முறையினை கையாளலாம்.

இந்த பாதுகாப்பு முறையினை மழைக்காலத்திற்கு பிறகும் செய்யலாம். இதன் மூலம் மழையினால் ஏற்பட்ட பாதிப்பினை சீர் செய்ய முடியும். ஆனால் இது செய்வதற்கு முன் வாட்டர் ப்ரூஃப் நிபுணர்களை அழைத்து உங்கள் வீட்டில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆலோசனை பெறுவது மட்டுமில்லாமல், இந்த நேரத்தில் வீட்டினை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும் தெரிந்து கொள்ளலாம். பொதுவாக மழைக்காலத்தில் வீட்டில் ஏற்படக்கூடிய அடிப்படை பிரச்னைகள், அதனை எவ்வாறு சீர் செய்வது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

நீர்க்கசிவு: வீட்டில் நீர்க்கசிவு பழைய கட்டிடத்தில்தான் ஏற்படும் என்றில்லை. புதிதாகக் கட்டப்பட்ட வீடாக இருந்தாலும் சில காரணங்களால் அதில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த காரணங்களை அறிந்து அதற்கு ஏற்ப தீர்வு காண்பதுதான் புத்திசாலித்தனம். இதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படும் கசிவுகளைத் தடுக்க உதவும். வீட்டில் சில இடங்களில் உள்ள குழாய்களில் கசிவு இருக்கும். அல்லது தண்ணீர் செல்லும் பைப்களில் அடைப்பு ஏற்பட்டு இருக்கும்.

சில சமயம் நமக்கே ெதரியாமல் கழிவறையில் உள்ள பைப்கள் உடைந்து அதன் மூலமாகவும் நீர்க்கசிவு ஏற்பட்டு இருக்கும். உங்கள் வீட்டில் உள்ள தண்ணீர் ேடங்கில் தண்ணீர் அளவு குறைவது போல் தோன்றினால், உடனடியாக உங்கள் வீட்டில் உள்ள பைப்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதா என்பதை கவனித்து பார்த்துக் கொள்வது அவசியம். அவ்வாறு இருந்தால் உடனடியாக பிளம்பரின் உதவியோடு அதனை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

ஈரப்பதம் மற்றும் கசிவு: சுவர்கள் மற்றும் கூரைகளில் உள்ள ஈரப்பதம், அதில் சின்னச் சின்ன திட்டுக்கள் மற்றும் கரைகள் ஏற்படுத்தக்கூடும். இது நாளடைவில் சுண்ணாம்பு உதிர்ந்து அந்த இடம் மட்டும் தனிப்பட்டு தெரியும். மேலும் சுவற்றில் உள்ள அலங்காரங்கள் மற்றும் ஓவியங்களும் சுவற்றில் உள்ள ஈரப்பதத்தினால் சேதமடையும். பருவ மழைக் காலத்தில் சுவர்களில் அதிக அளவு ஈரப்பதம் (humidity) இருந்துகொண்டே இருக்கும். இதனால் செங்கல், கற்கள் மற்றும் ஓடுகள் சிதைந்து கட்டட அமைப்பை வலுவிழக்கசெய்யலாம். சுவர் மட்டுமில்லாமல் தரை
களிலும் ஈரப்பதம் படியும் என்பதால், அது தரையில் ஒட்டப்பட்டு இருக்கும் டைல்சினையும் பாதிக்கும். இதனால் அவை வெடிக்கும் வாய்ப்புள்ளது. இதனை சமாளிக்க வாட்டர் ப்ரூஃப் பூச்சுகள் கொண்டு ஈரப்பதத்தினால் ஏற்படும் பாதிப்பினை தீர்க்க முடியும்.

பாசிகள் மற்றும் பூஞ்சைகள்: பாசிகள் மற்றும் பூஞ்சைகள் நீண்டகாலம் கவனிக்காமல் இருந்தால் அது சுவற்றில் அரிப்பை ஏற்படுத்தும். உதாரணமாக, குழாய்களில் ஏற்பட்ட விரிசல்களை கவனிக்காமல் விட்டுவிட்டால் அங்கு தண்ணீர் கசிந்து ெகாண்டே இருக்கும். விளைவு அங்கு பாசிகள் மற்றும் பூஞ்சைகள் வளர ஏதுவாக நாம் வசதி ஏற்படுத்தி தருகிறோம். அந்த குழாய் வழியாக வரும் தண்ணீரை நாம் சமையலுக்கோ அல்லது குடிக்க பயன்படுத்தினால் அது உடல் உபாதைகள் ஏற்படுத்தும். தண்ணீர் கசிவினை சீர் செய்வது மட்டுமில்லாமல் அங்கு ஈரப்பதம் இல்லாமல் இருக்க வாட்டர்ப்ரூஃப் கோட்டிங் மூலம் இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.

சுவற்றில் ஏற்படும் அரிப்பு: உங்கள் வீடு 5 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்தால், அரிப்பிற்கான எச்சரிக்கை அறிகுறிகளை நாம் கண்கூடாக பார்க்க முடியும். சுவற்றில் கறைகள், சுண்ணாம்பின் நிறமாற்றம், சுவற்றில் பள்ளம் மற்றும் கழிவறை, சமையல் அறைகளில் உள்ள குழாய்களின் தோற்றத்தில் மாற்றம் தென்படும். இதனை கூர்ந்து கவனியுங்கள். இதனால் கசிவுகள், தண்ணீரில் ஒருவித துர்நாற்றம் மற்றும் தண்ணீரின் நிறத்தில் மாற்றம் தென்படும். சில சமயம் குழாய்களை முற்றிலும் மாற்ற வேண்டிய சூழல் ஏற்படும். உங்கள் வீட்டில் உள்ள சுவற்றில் ஏதேனும் மாற்றங்கள் தென்பட்டால் உடனடியாக அதற்கான நிபுணர்களை அழைத்து அதில் உள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்.

ஒவ்வொருவரும் தாங்கள் வாசம் செய்யும் வீட்டின் பராமரிப்பினை புரிந்து கொள்வது அவசியம். இதனால் பருவ மழையோ அல்லது வெயில் காலமோ எந்த நேரமாக இருந்தாலும் வீட்டில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்னைகளுக்கு உடனடியாக அந்தந்த நிபுணர்களை கொண்டு தீர்வு காண்பது அவசியம். இதன் மூலம் மழைக்காலங்களில் சுவற்றில் தண்ணீர் கசிவு ஏற்படுமா என்ற மன அழுத்தம் இல்லாமல், சூடான தேநீரை ரசித்து குடிக்கலாம் என்று ஆலோசனை வழங்கினார் மகேஷ் ஆனந்த்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நலம் காக்கும் பருப்பு வகைகள்!! (மருத்துவம்)
Next post பவர் லிஃப்டிங் மூலம் என் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)