பவர் லிஃப்டிங் மூலம் என் நாட்டிற்கு பெருமை சேர்ப்பேன்!! (மகளிர் பக்கம்)

Read Time:12 Minute, 30 Second

‘‘பவர் லிஃப்டிங் செய்யும் போது தவறி விழுந்து என்னுடைய கை உடைந்து தொங்கியது. இந்த விபத்தினாலேயே பவர் லிஃப்டிங் போட்டிகளில் இருந்து சென்று விட்டாள் என்ற பெயர் இருக்கக் கூடாது. என்னுடைய இந்தப் பயணம் சாம்பியனாகத்தான் முடிவடைய வேண்டும்’’ என தன்னம்பிக்கையோடு கடுமையாக பவர் லிஃப்டிங் போட்டிகளுக்கு தயாராகி வருகிறார் ஆர்த்தி அருண். தமிழ்நாட்டின் பவர் லிஃப்டரான ஆர்த்தி, மருத்துவராகவும் பணியாற்றி வருகிறார். பத்து வருடங்களுக்கும் மேலாக பவர் லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொண்டு இன்றும் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஆர்த்தி அருண்.

‘‘ஆற்காடு, சொந்த ஊர். என் தாத்தா ரயில்வேயில் வேலை பார்த்து வந்ததால், நாங்க குடும்பத்தோடு ஹைதராபாத்தில் செட்டிலாயிட்டோம். நான் பிறந்தது, படிச்சது எல்லாம் அங்குதான். மருத்துவ படிப்பிற்காக சென்னை வந்தேன். சின்ன வயசுலேயே டாக்டர் ஆக வேண்டும் என்று எனக்கு ஆசை. என் அம்மாவின் விருப்பமும் அதுவாகவே இருந்தது. அதனால் நன்றாக படித்து டாக்டருக்கு சேர்ந்தேன். ஆனால் கல்லூரியில் படிக்கும் போதே எனக்கு எங்க வீட்டில் திருமணம் பேசி முடிச்சிட்டாங்க. என் கணவரும் மருத்துவர் என்பதால் அவருக்கு அந்த படிப்பு பற்றி விவரம் தெரியும். என்னை வீட்டில் முடக்காமல், என் கல்லூரிப் படிப்பை தொடர அனுமதி அளித்தார்.

நான் படிக்க அவர் உந்துகோலாக இருந்தார். சென்னையில் பல் மருத்துவம் படித்து முடித்ததும் மருத்துவராக வேலைக்கு சேர்ந்தேன். இதற்கிடையில் எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் பிறந்தனர். குழந்தைகள் பிறந்ததால் ஏற்பட்ட உடல் மாற்றத்தினால் என் எடை கூடியது. உடல் எடையை குறைக்க முடிவு செய்து ஜிம்மிற்கு சென்றேன். நான் ஜிம்மிற்கு செல்லும் போது பல ஆண்கள் அதிக எடையை தூக்குவதை பார்த்தேன். அந்த பயிற்சியை எனக்கும் தரும்படி கோச்சிடம் கேட்ட போதுதான் பவர் லிஃப்டிங் என்ற விளையாட்டு போட்டி ஒன்று இருப்பது பற்றி எனக்கு தெரிய வந்தது. அதைப் பற்றிக் கேள்விப்பட்டதும் எனக்கும் அந்த போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது.

அந்த போட்டி குறித்து விசாரித்த போது, தமிழ்நாட்டில் இருந்து பெண்கள் இந்த பவர் லிஃப்டிங் போட்டிகளில் ஈடுபடவில்லை என்று தெரிய வந்தது. பெண்கள் பவர் லிஃப்டிங்கில் ஏன் ஈடுபடுவதில்லை என்று என் கோச்சிடம் கேட்ட போது, அவர் இந்த போட்டிகள் ஆண்களுக்கானவை. பெண்களால் இவ்வளவு வலுவானவற்றை தூக்க முடியாது என்பதுதான் பதிலாக வந்தது. பெண்களாலும் இந்தப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜெயிக்க முடியும் என்பதை காட்ட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ள முடிவெடுத்தேன்’’ என்றவர் அதில் கடந்து வந்த சாதனை பாதைப் பற்றி சொல்லத் தொடங்கினார்.

‘‘பவர் லிஃப்டிங் போட்டிகள் நடப்பது குறித்து பல பெண்களுக்கு தெரியாது. வெளிநாடுகளில் பெண்களுக்கு தனியாகவே இந்த பவர் லிஃப்டிங் போட்டிகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் இருந்து பவர் லிஃப்டிங் போட்டிகளில் பெண்கள் கலந்து கொள்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் பவர் லிஃப்டிங் போட்டிக்கு எப்படி தயாராவது என்பது குறித்து பெண்களுக்கு சொல்லித் தருவதற்கு யாரும் இல்லை.

இதே பிரச்சனைதான் எனக்கும் இருந்தது. பவர் லிஃப்டிங் போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம் இருந்தது. ஆனால் அது பற்றி பயிற்சியளிக்க யாரும் இல்லை. நான் இந்த போட்டிகளில் கலந்து கொள்ள போகிறேன் என்று சொன்ன போது என்னை ஊக்கப்படுத்தவும் யாரும் இல்லை. அதற்காக நான் சோர்ந்து போய்விடவில்லை. பவர் லிஃப்டிங் எப்படி செய்வது என்பது பற்றி யுடியூப்பில் உள்ள வீடியோக்களை பார்த்து பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். அதோடு எனக்கு பயிற்சியளிக்க ஒருவர் முன் வந்தார். கடுமையாக பயிற்சி செய்தேன்.

சென்னை மாவட்ட பவர் லிஃப்டிங் அசோசியேஷன் சார்பாக நடந்த போட்டிதான் நான் கலந்து கொண்ட முதல் போட்டி. பெரும்பாலும் பெண்களே நிறைந்திருந்த அரங்கத்தில் என்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தேன். இதன் மூலம் எனக்கு மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. அதில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். இந்த வெற்றி எனக்குள் பெரும் உத்வேகத்தை ஏற்படுத்தியது. மேலும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டேன். மாநில போட்டியில் தங்கம் வென்றேன்.

அதனைத் தொடர்ந்து நான்கு வருடமும் மாநில அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கங்களை வென்றேன். அடுத்து தேசிய அளவிலான போட்டிகளில் கவனம் செலுத்த தொடங்கினேன். அதிலும் நான்கு முறை தங்கம் வென்றேன். ஆசிய அளவிலான போட்டிக்காக பயிற்சி எடுத்தேன். ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், ஃபெடரேஷன் போட்டிகளில் ஜெயிக்க வேண்டும். அதிலும் என் வெற்றியினை பதிவு செய்து ஆசிய போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை தக்கவைத்துக் கொண்டேன். 2019ம் ஆண்டு ஹங்காங்கில் நடந்த ஆசிய அளவில் பவர் லிஃப்டிங் போட்டியில் இந்தியாவிலிருந்து சென்ற 9 பெண்களில் நானும் ஒருவர்.

அதில் தமிழ்நாட்டை சேர்ந்தவர் நான் மட்டும்தான். பல நாடுகளில் இருந்து வந்திருந்த பெண்கள் தங்களின் திறமையினை வெளிப்படுத்தினர். போட்டியும் கொஞ்சம் கடுமையாகத்தான் இருந்தது. இருந்தாலும் தமிழ்நாட்டிற்கு நான் பெருமை சேர்க்கும் வகையில் தங்கப் பதக்கத்தை வென்றேன். இந்தியாவே என்னுடைய வெற்றியை கொண்டாடியது. ‘சிறந்த பவர் லிஃப்டர்’ என்கிற விருதும் கிடைத்தது. அடுத்து காமன்வெல்த் போட்டியில், 380 கிலோ தூக்கியதோடு ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றேன். வெற்றியையே பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு ஓய்வு தேவை என்பதாலோ என் வாழ்க்கையில் நான் மீண்டே வர முடியாத அந்த சம்பவம் நடந்தது.

‘‘போட்டிகள் என்று நான் பறந்து கொண்டிருந்த அந்த நேரத்தில்தான் கொரோனா தொற்று தாக்கியது. அதனால் என்னுடைய பயிற்சிக்கு சில காலம் ஓய்வு கொடுத்தேன். எல்லாம் சகஜ நிலைக்கு திரும்பியதும், மீண்டும் என்னுடைய பயிற்சியை நான் ஆரம்பிச்சேன். கோவையில் ஆசிய அளவிலான பவர் லிஃப்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் சாதனை படைக்க வேண்டும் என்பதில் நான் தீவிரமாக இருந்தேன். ஆசிய போட்டிகளில் இதுவரை 190 கிலோ எடையை தூக்கி சாதனை படைத்திருந்தார்கள்.

இந்த சாதனையை நான் முறியடிக்க விரும்பினேன். அதற்கான பயிற்சியும் எடுத்தேன். போட்டிக்கு 20 நாட்களுக்கு முன், 200 கிலோ எடையினை தூக்கி பயிற்சி பெறும் போது, அது தவறி என் கை மேலே விழுந்தது. என்னுடைய வலது கை எலும்பு உடைந்து, கை மட்டும் தனியா தொங்கியது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கையில் டைட்டானியம் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சிகிச்சை முடிந்ததும் இனி நான் இந்தப் போட்டியில் பங்கு பெறக் கூடாது என்று டாக்டர்கள் உறுதியாக சொல்லிவிட்டார்கள்.

ஆனால் அவர்கள் சொன்ன அந்த விஷயமே எனக்குள் பெரிய அளவில் மன உளைச்சலை ஏற்படுத்தியது. என்னைப் பொறுத்தவரை எதை செய்யக்கூடாது என்று சொல்கிறார்களோ அதையே செய்து காட்ட வேண்டும் என்ற வெறி எனக்குள் தொற்றிக் கொள்ளும். திருமணத்திற்கு பிறகு படிக்க முடியாது என்றார்கள். என் கணவர்தான் என்னை படிக்க வைத்தார். அதேபோல் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்ற பேச்சு வந்ததும் பிசியோதெரபியை மேற்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கனமான பொருட்களை தூக்க தொடங்கினேன். ஆறு மாதங்களில் நான் என்னை தயார்படுத்திக் கொண்டேன். திரும்பவும் என்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை துவங்கினேன்.

சென்னையில் நடந்த போட்டியில் தங்கம் வென்றேன். அடுத்து ஆந்திராவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் வெண்கலம் கிடைத்தது. இதில் 325 கிலோ பளுவை தூக்கினேன். நான் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றாலும், உலக அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற வேண்டும். தற்போது தமிழ்நாடு பெண்களுக்கான கிக் பாக்ஸிங் சேர்மேனாக இருக்கிறேன். எதிர்கால திட்டம் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பெற்று இந்த விளையாட்டுக்கு மட்டுமில்லாமல் என் நாட்டுக்கும் பெருமை சேர்க்கணும்’’ என்கிறார்
ஆர்த்தி அருண்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பருவ மழையும்… வீட்டின் பாதுகாப்பும்!! (மகளிர் பக்கம்)
Next post ஹேர் டை கவனிக்க வேண்டியவை! (மருத்துவம்)