அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோர்-ராஜபக்சே
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் வேலுப்பிள்ளை மற்றும் வள்ளிபுரம் பார்வதி அம்மாள் ஆகியோர் வவுனியா அகதி முகாமில் தங்கியிருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்துள்ளார். வவுனியாவில் புதிதாக அமைக்கப்பட்ட அகதி முகாமில் பிரபாகரனின் பெற்றோரும், ஏனைய விடுதலைப் புலித் தலைவர்களின் உறவினர்களும் தங்கியுள்ளதாகவும் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார். ‘பிரபாகரன் பெற்றோர் திருவேங்கிடம் வேலுப்பிள்ளை- வள்ளிப்புரம் பார்வதி ஆகியோர் எம்மிடம் சரணடைந்துள்ளனர். வன்னியில் பொதுமக்களுடன் இணைந்து படையினர் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிக்கு இவர்கள் வந்துவிட்டனர்’ என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர்கள் படைக் கட்டுப்பாட்டு பிரதேசத்துக்கு வந்த தேதி குறித்தோ, பிரபாகரன் ‘மரணம்’, அவரது மனைவி- பிள்ளைகள் பற்றியோ அவர் ஏதும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 1924ம் ஆண்டு சிங்கபூரில் பிறந்தவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை. அங்கு தபால் துறையில் ஊழியராக பணியாற்றிய பின்னர், 1947ம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். இலங்கை அரசில், யாழ்ப்பாணம் நிலவள அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். நீண்டகாலம் திருச்சியில் தங்கியிருந்த வேலுப்பிள்ளையும் அவரது மனைவி பார்வதியும் சில ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் போர் உக்கிரமடைந்த தருணத்தில் தன் மகன் பிரபாகரனுடன் இருக்க விரும்பி வன்னிக்குச் சென்றுவிட்டனர்.
Average Rating