பருப்புமாவுடன் லொறி பிடிப்பட்டது… இடம்பெயர்ந்தவர்களுக்கான உணவுப்பொருள் என தெரிய வந்துள்ளது!
இடம்பெயர்ந்து நிர்க்கதியாகியுள்ள மக்கள் மத்தியில் விநியோகிப்பதற்கென நட்பு நாடொன்றினால் அன்பளிப்பு செய்யப்பட்ட கோதுமைமா மூடைகளும் பருப்பு மூடைகளும் திருட்டுத்தனமாக வேறுஇடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவது தெரிய வந்துள்ளது. அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்களுக்கு விநியோகிப்பதற்காக நட்புறவு நாடொன்றினால் வழங்கப்பட்ட மாமூடைகளும் பருப்பு மூடைகளும் தோப்பூரிலிருந்து கடத்தப்பட்டு தம்புள்ள பொருளாதார நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்த வேளையில் பொருள்களை ஹபரணைப் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். ஹபரணைப் பொலிஸாருக்கு கிடைத்திருந்த இரகசியத் தகவலையடுத்து அவர்கள் ஹத்தரஸ்கொட்டுவ வீதித்தடுப்பு பரிசோதனை நிலையத்தில் சம்பந்தப்பட்ட லொறியை நிறுத்தி சோதனை நடத்தினார்கள். இந்த உணவுப்பொருட்கள் ஏற்றப்பட்டிருந்த லொறியை தடுத்து காவலில் வைத்ததோடு அதில் இருந்த ஐந்து நபர்களையும் சந்தேகத்தில் பொலிஸார் கைது செய்தனர். இந்த நபர்கள் வெகுகாலமாகவே இவ்வாறு உணவுப் பொருட்களை கடத்தி வருவது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. தம்புள்ளவில் உள்ள முக்கிய வியாபாரப் புள்ளிகள் பலர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்நபர்கள் விரைவில் பொலிஸ் காவலில் வைக்கப்படுவார்கள் என அதிகாரியொருவர் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட லொறியில் இருந்து 50கிலோ நிறைகள் கொண்டிருந்த 48பருப்பு மூடைகளும் 50கிலோ நிறைகள் கொண்ட 50 மாமூடைகளும் கைப்பற்றப் பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating