அடிக்கிற அடியில்.. தாரை, தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமோ???? -நையாண்டிப் புலவர்

Read Time:13 Minute, 21 Second

2013-01-06 00:28:55 யாழில் புளுருத் வசதியால் தனியார் கல்வி நிலையத்தில் அடுத்த பக்கம் இருந்த மாணவிகளில் ஒருவருக்கு தனது முழு உடம்பின் புகைப்படத்தையும் தனது ஆண்மையின் பெருமையையும் அப்பட்டமாக அனுப்பினான் ஒரு மாணவன்… இவ்வாறு தற்போது யாழ்ப்பாணத்தில் தனியார் கல்வி நிலையங்களில் அரங்கேறுகின்றது தமிழர்களின் கலாச்சாரத்தின் உச்ச நிலை. எமது கலாச்சாரத்தை ஆமிக்காரரும் அரசாங்கமும் சீரழிப்பதாக நாம் நினைத்துக் கொண்டுள்ளோம். ஆனால்….. இவ்வாறு கூறிக் கூறியே நாமை நம்மை அழித்துக் கொண்டுள்ளோம்.

கடந்த 15 வருடங்களுக்கு முன் இருந்த தனியார் கல்வி நிலையங்கள் இப்போதும் அதே நிலையில் இருக்கின்றனவா என்பது சந்தேகத்துக்குரியது. அந் நேரங்களில் இருந்த மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப வசதியும் இந்நேர மாணவர்களின் தகவல் தொழில் நுட்ப வசதியையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது விளங்கும்.
தனியார் கல்வி நிறுவனங்களின் கற்பித்தல், ஒழுக்கம் பேணல் தொடர்பான செயற்பாடு தற்போது எந்த அளவில் உள்ளது என்பது கேள்விக் குறியே…

பாடசாலையிலும், தனியார் கல்வி நிறுவனம் ஒன்றிலும்; வாத்தியாராகக் கடமையாற்றிய ஒருவர் தனது அனுபவத்தைத் விபரிக்கின்றார். அவரும் தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கல்வி கற்றவர். அவர் தனது அனுபவத்தை தெரிவிக்கின்றார்.

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் இருபாலைச் சந்திக்கு அருகாமையில் உள்ளது ஒரு தனியார் ரியூசன் சென்றர். அங்கு நான் ஆண்டு ஆறு தொடக்கம் ஓ.எல் வரை கற்றேன். அந்த நேரம் நான் அந்த கல்வி நிலையத்தில் இருந்து வேறு கல்வி நிலையம் மாறுவதற்கு எத்தனையே முறை முயன்றும் எனது அப்பா மண்டையில் குட்டிக் குட்டி ஓடு அங்கே என அனுப்பினார். அப்பாவையும் அந்த கல்வி நிலையம் நடாத்துபவரையும் சாபம் போட்டுப் போட்டு அங்கு சென்றுள்ளேன். ஏன் தெரியுமா????

அந்த நிர்வாகி அடிக்கிற அடிதான் காரணம். அவர் கணிதமும் படிப்பிக்கிறவர். அதுவும் ஆண்டு 10 தொடக்கம் ஓ.எல் வரை கணிதம் எடுக்கிறது அவர்தான்… யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலையிலும் கல்வி கற்பித்தவர்.

அங்கு 5 நிமிடம் நேரம் பிந்திப் போனால் ஒரு மாங்கன்றுக்குப் பக்கத்தில நிற்க வேணும்….கை விரல் மொழிக்கு நல்லெண்ணை தடவி வைத்திருப்பது நல்லது. கண்ணை மண்டைக்குள் செருக்கிக் கொண்டு அவர் வரும்போதே எல்லாம் அடங்கி விடும்…. ஏன் பிந்தினாய் என்று கேட்கும் போது அழுகை வந்து விடும்…. ஏதாவது ஒரு காரணத்தை யோசிச்சு வைச்சிருந்து சொன்னாலும் அது உண்மையோ.. பொய்யோ என மனத்தாலேயே அறிந்து விட்டு எங்களுக்கு அபிசேகம் நடக்கும்….

றோட்டில கூட சைக்கிளில் சமாந்தரமா நாங்கள் போகக் கூடாது…. எப்படியோ யாராவது பார்த்து அண்டி விட்டால் அடுத்தநாள் அபிசேகம் தாராளமா கிடைக்கும். இப்புடி இருக்கும் போது எங்களுக்கு வேறு எண்ணங்கள் எப்புடி வரும். வகுப்புக்குள்ள நாங்கள் இருக்கும் போது வாத்தியார் படிப்பித்துக் கொண்டு இருப்பார். நிர்வாகி ஒட்டி நின்று அதைப் பார்த்துக் கொண்டு நிற்பார். நாங்கள் அவரைக் கண்டு பிடிக்க முடியாது…. பக்கத்தில இருக்கிற பெடியனோட ஏதாவது கதைத்துச் சிரிச்சுக் கொண்டிருந்தால் ‘பச்சை சேட்டும்.. சிவப்பு சேட்டும் எழுந்து வெளியே வாங்கோ’ என்று கூட்டிக் கொண்டு போய் அபிசேகம் நடாத்தும் போதுதான் தெரியும் பதுங்கி இருந்து பார்த்திருக்கின்றார் என்று…..

வரவு மிக முக்கியம். அதற்கும் ஒரு அட்டை பதிவு இருக்கின்றது. பரீட்சைப் பெறுபேறுகள், இப்படி இப்படி என்று எங்களை வேற எந்த சிந்தனைகளுக்கும் இடம் கொடாது படிப்பதிலேயே குறியாய் இருக்க வைத்தது அந்த கல்வி நிலையம். அங்கு கற்பித்த வாத்தியார்களும் அவரின் நிலையில் தான்.

இன்னொரு வாத்தியார் கணக்குப் படிப்பித்தவர். அவர் ஆண்டு 9 படிக்கும் போது படிப்பித்த ஆளு…. அவர் படிப்பிக்கும் போது நாங்கள் இருவர் கதைத்தால் உடனடியாக புலனாய்வு விசாரனைகளை ஆரம்பித்து விடுவார். அவர் செய்யும் மிக முக்கியமான செயல் என்னவென்றால் கதைத்த இருவரையும் பிரித்து வைத்துவிட்டு தனித்தனியே விசாரிப்பார். ‘நான் உனக்கு அடிக்க மாட்டன் என்ன கதைத்தனி என்று சொல்லு’ என கேட்டால் சரியானதைச் சொல்ல வேணும். இல்லாவிடின் அதே கேள்வியை மற்றவனிடம் கேட்கும் போது அவன் வேற ஏதாவது சொன்னால் இருவருக்கும் அபிசேகம் நடக்கும்.

அங்கு படிக்கும் போது ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு காரணத்துக்காக கை மொழி வீங்கித்தான் வெளியே வருவோம். கணிதம் என்றால் வேம்பங்காயாய் இருந்த எனக்கு இவ்வாறான பயத்தால்தான் அந்தப் பாடத்தில் அக்கறை எடுத்து படிக்க முடிந்தது.

அதன் பின்னர் உயிரியல் பிரிவில் கல்வி கற்றும் தாவரவியல் பாடத்தில் மாத்திரம் திறமையான சித்தி அடைய முடிந்தது. அதற்கும நான் உயர்தரம் படித்த தனியார் கல்வி நிறுவனத்தின் அந்த குணசீலன் வாத்தியே காரணம். எழுப்பி வைத்து ஜீன்ஸ் கழன்று விழுகிறது போல பெண்களுக்கு முன்னாள் மானத்தை வாங்கி விடுவார் என்ற பயத்தில் அவரது பாடத்திற்கு மாத்திரம் ஊக்கம் எடுத்ததால் அதில் சித்தியடைந்தேன்.

இவ்வாறான பல ரியூசன்கள் அந்தக்காலத்தில் கடும் ஒழுக்கத்தைப் பேணுபவையாக இருந்துள்ளன. ஆனால் தற்போதும் அவ்வாறு இருக்கின்றனவா என்பது சந்தேகமே…..

தற்போது நானும் வலி. மேற்குப் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்வி நிலையம் ஒன்றில் கற்பித்தேன். இப்போது பெடியலுக்கு ஏன் படிக்கவில்லை என அடித்தாலோ அல்லது அவன் கதைத்துக் கொண்டிருந்ததற்கு அடித்தாலோ கல்வி நிலையம் நடாத்துபவர் இப்படி அடிக்க வேண்டாம் அவன் வேற ரியூசன் சென்று விடுவான் என்று கூறும் அளவிற்கு கல்வி நிலையங்களிடையே போட்டி இடம் பெறுகின்றது. அத்துடன் ஒரு பெடியனுக்கு அடிக்க போகும் போது அவன் என்னுடன் கிளித்தட்டு விளையாடுவது போல வகுப்புக்குள்ளேயே ஓடித் திரிகிறான்…. துரத்தி அடித்தால் றோட்டால போகும் போது மோட்டார் சைக்கிள்களில் தனது வயது மூத்த இளைஞர்களைக் கொண்டு வெருட்டும் நிலை வந்துள்ளது.

நான் படிப்பித்த ஒரு தனியார் கல்வி நிலையத்தை விட்டு தற்போது நின்று விட்டேன். எனது மனைவி என்னை ஏசினாலும் எனக்குள் இருந்த ரோசம் அங்கு செல்ல அனுமதிக்கவில்லை. தற்போது எனது மேலதிக வருமானத்தில் 7 ஆயிரம் ரூபாய்களை இழந்துள்ளேன்.

இதற்கு காரணம் என்னவெனில்…
கடந்த மாதம் நான் அந்த கல்வி நிலையத்தில் தரம் பத்து மாணவர்களுக்கு கற்பித்துக் கொண்டிருக்கும் போது ஒரு மாணவி என்னைக் கவனியாது மேசையின் கீழ் தலையை வைத்துப் பார்த்த வண்ணம் இருந்தாள். நானும் கவனித்து விட்டு அவளருகில் சென்ற போது ஒரு ஐபோன்4 கைத் தொலைபேசியைக் கையில் வைத்திருந்தாள். அதனை வாங்கிப் பார்த்த போது அவளுக்கு இரு புகைப்படங்கள் அப்போதுதான் புளுருத் அலேட் ஆக வந்திருந்தது…. அதனை பார்த்த போது அது எனது வகுப்பில் படிக்கும் ஒரு மாணவனது இரு புகைப்படங்கள். ஒன்று அவனது நிர்வாணமான புகைப்படமும் மற்றையது அவனது ஆண்மை சம்மந்தமான அப்பட்டமான புகைப்படமும் ஆகும்.

நான் அதனை வாங்கிப் பார்த்து விட்டு சும்மா இருந்திருந்தால் வேறு பிரச்சனை வந்திராது. 40 ஆயிரம் பெறுமதியான அந்த போனை நிலத்தில் போட்டு உடைத்தேன். மாணவனையும் எழுப்பி அவனது பொக்கற்றுக்குள் இருந்த நொக்கியா ரக ரச் மொடல் போனையும் வாங்கி உடைத்தேன். அதன் பின்னர் இருவரையம் நையப்புடைத்து வெளியே அனுப்பி விட்டு நானும் வெளியே வந்து நிர்வாகியிடம் இருவரையம் கூட்டிச் சென்றேன்….

எல்லாவற்றையும் கேட்ட நிர்வாகி அதுக்கு ஏன் சேர் போனை உடைத்தனீர்கள்? என கேட்டு என்னை அதிர்ச்சிப்படுத்தீனார். மற்ற பிள்ளைகளுக்கு முன்னால் இவர்களின் செயல்களை கூறினீர்களா? ஏனக் கேட்ட போது நான் இல்லை எனத் தலையாட்டி அதிர்ந்து நின்றேன். அதே கேள்வியை அந்த மாணவர்களுடைய பெற்றோரும் என்னைக் கேட்டார்களே தவிர மாணவியோ.. மாணவனோ செய்த செயல்களைப் பெரிது படுத்தியதாகத் தெரியவில்லை. அன்றிலிருந்து நான் தனியார் கல்வி நிலையத்தில் படிப்பிக்கின்றதை நிறுத்தி விட்டேன்…..

தற்போது எனது வீட்டிலேயே நான் என்னுடைய பாடத்தைப் படிப்பிக்கின்றேன். என்னிடம் வரும் மாணவர்களை எனது பாடத்தில் திறமைச் சித்தியடைய வைப்பேன் என பெற்றோரிடம் தெரிவித்து அவர்களின் ஒத்துழைப்புடன் மாணவர்களுக்கு கசப்பு மருந்து கொடுத்து படிப்பிக்கின்றேன்…..

(எமது இணையத்தளத்திற்காக எமது நண்பனாக இருக்கும் ஒருவரின் உண்மைச் சம்பவத்தின் தொகுப்பு இது….)

எந்தக் கொள்கையும் இல்லாது காசை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் ரியூட்டறிகள் இருக்கும் வரைக்கும் யாழ்ப்பாணத்தின் கல்வி நிலையையே கலாச்சாரத்தையோ நல்ல நிலைக்கு கொண்டு வர முடியாது…..
‘நல்ல குருநாதன் நம்மை வருத்துவது கொல்லவல்ல கொல்லவல்ல
பொல்லா வினைகள் போக்குதற்கே’
ஆகவே தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கும் வரை அடியுங்கள் ஆசான்களே…. அடியுங்கள்….

–நையாண்டிப் புலவர்

Thanks… ATHIRADY.COM

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவின் கடும் பனிப்பொழிவு! கடல்கள் உறைபனியாக மாற்றம்! 1000 கப்பல்களின் பயணம் ஸ்தம்பிதம் (PHOTO)
Next post ரிசானாவுக்கு மரண தண்டனை உறுதி – டாக்டர்