By 16 September 2013 0 Comments

வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)

P1040660வவுனியா, ஏ9 பிரதான வீதியில் ஓமந்தைக்கு அண்மித்ததாக வவுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட வவுனியா பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள ஒரு கிராமமே மாணிக்கவளவு (மாணிக்க இலுப்பைக்குளம்) ஆகும். கடந்த காலங்களில் இடமபெற்ற யுத்த அனர்த்தங்களின் காரணமாக போர் வலயத்திற்குள் காணப்பட்ட இக் கிராமமானது தற்போது மீள்குடியேற்றம் செய்யப்பட்ட கிராமங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

இப் பிரதேச மக்கள் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து இந்தியாவுக்கும் உறவினர்கள் வீடுகளிலும் தங்கிவிட்டு மீண்டும் 2010 முதல் இப் பகுதியில் குடியேறி வருகின்றனர்.

இவ்வாறு மக்கள் மீள்குடியேறி நான்கு ஆண்டுகள் நிறைவடைகின்ற போதும் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் இன்னும் முழுமையாக பூர்த்தியாக்கப்படவில்லை.

P1040658இக் கிராமத்தின் ஊடாக செல்லுகின்ற பிரதான வீதியானது, சிதம்பரம், கள்ளிக்குளம் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லுகின்றது. எனினும் மாணிக்கவளவு, சிதம்பரம், கள்ளிக்குளம் மக்களே இவ் வீதியைப் அதிகமாக பயன் படுத்துகின்றனர். ஏனெனில் இவ் மூன்று கிராமங்களினதும் பிரதான வீதி இதுவே. இந் நிலையில் இவ் வீதி தற்போது உள்ள நிலையில் போக்குவரத்து செய்ய முடியாதுள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் மாணிக்கவளவு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.செல்லத்துரை கூறுகையில், “சண்ட முடிஞ்ச பிறகு எங்கள இங்க கொண்டந்து மீள்குடியேற்றம் செய்தாங்க. ஆனா எங்களுக்கான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படல. இந்த றோட்டு இப்பவே இப்படி இருக்கு. இனி மழை காலம் ஒரே சேறாய் தான் இருக்கும். இஞ்ச ஒரு கிறேசர் போட்டிருக்கிறாங்க. அதால ஒரே டிப்பர் போய்வரும். டிப்பர் தான் இந்த றோட்ட மோசமாக்கீற்று. எங்கட பிள்ளைகளும் பள்ளிக் கூடம் போக இந்த றோட்ட தான் பயன்படுத்துறதுகள். பள்ளிக் கூடம் போகேக்க வெள்ளையோட போகுங்கள் வரேக்க றோட்டு செம்பாட்டு மண்ணோட வருங்கள்” என்றார்.

P1040650ஆம், இப் பகுதியின் பிரதான வீதியானது போக்குவரத்து செய்ய முடியாதவாறு குன்றும் குழியுமாக காணப்படுகின்றது. இக் கிராமத்தில் கிறேசர் காணப்படுவதனால் தினமும் டிப்பர் ரக வாகனங்கள் இவ் வீதி வழியாக பயணிப்பதனால் இப் பகுதி புழுதி மண்டலமாக காட்சியளிக்கின்றது.

இப் பகுதி மாணவர்கள் ஆரம்பக் கல்வியினை இப் பகுதியில் உள்ள பாடசாலையில் கற்கின்ற போதும் உயர் கல்வியினை ஓமந்தை மகாவித்தியாலயத்திலேயே கற்கின்றனர். இதனால் இவ் வீதியூடாக வெள்ளை சீருடையுடன் செல்லும் மாணவர்கள் தமது சீருடை வெள்ளை தானா? என சந்தேகம் அடையக்கூடிய வகையில் டிப்பர் செல்வதனால் ஏற்படும் தூசிப்படிவுகளால் அவர்களது சீருடை நிறம் மாறுகின்றது.

P1040654கடந்த வருடம் பெய்த மழையின் போது இவ் வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்பட்டது. பாடசாலை சென்ற மாணவர்கள் வழுக்கி விழுந்து பாடசாலைக்கு செல்லாது இடைநடுவில் வீடு வந்த சந்தர்ப்பங்களும் உள்ளது.

இனி மாரி காலம் வரவுள்ள நிலையில் சேறும் சகதியுமாக இவ் வீதி மாறக் கூடிய நிலையில் உள்ளதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை ஏற்படும் என்கின்றனர் கிராம மக்கள்.

P1040656இது ஒரு புறமிருக்க, இப் பிரதேசத்தில் குடிநீர் தட்டுப்பாடும் காணப்படுகின்றது. இது தொடர்பில் எம்.குகராணி கூறுகையில், “இது கல்லுப் பூமி. இஞ்ச கிணற்று வெட்டி பெருசா தண்ணி எடுக்கேலா. நாலு குழாய் கிணறுகள் இருக்கு. ஆனா ரெண்டு குழாய் கிணற்றில தான் குடிக்கிறதுக்கு தண்ணி எடுக்கக் கூடியதாகவுள்ளது. மற்றதுகள் பயன்படுத்தக் கூடிய நிலையில் இல்ல” என கூறினார்.

நாளாந்தம் கூலி வேலை செய்து கஸ்ரப்பட்டு இப் பகுதியில் வாழும் மக்கள் போக்குவரத்து பிரச்சனை, குடிநீர் பிரச்சனை மட்டுமன்றி சில வீடுகளில் மலசலகூட வசதி கூட இல்லாத நிலையிலேயே குடியிருக்கின்றனர்.

எனவே, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளே வடக்கின் வசந்தம் என்றும் துரித அபிவிருத்தி என்றும் நீங்கள் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களில் எமக்கு ஒன்றும் இல்லையா? என்ற ஏக்கத்துடன் இருக்கும் மாணிக்கவளவு மக்களுக்கு என்ன செய்யப் போகின்றீர்கள்?
-கே.வாசு-

P1040641
P1040642
P1040644
P1040649
P1040656
P1040654
P1040650
P1040658
P1040660Post a Comment

Protected by WP Anti Spam