கிளிநொச்சிக்கு பல ஆண்டுகளின் பின் மீண்டும் (வெடிக்காமல்) சென்ற யாழ்தேவி ரயில்

Read Time:4 Minute, 57 Second

train.yarl-deviஇலங்கையில், இந்திய உதவியுடன் மேற்கொள்ளப்படும் ரயில்வே பாதை அமைப்பு திட்டத்தில், விடுதலைப் புலிகளின் முன்னாள் நிர்வாக தலைநகர் கிளிநொச்சிக்கு நேற்று (சனிக்கிழமை) ரயில் விடப்பட்டது. இந்த ரயிலில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே முதல் பயணியாக டிக்கெட் வாங்கி பயணம் செய்து கிளிநொச்சியில் போய் இறங்கினார்.

30 ஆண்டு காலமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக 1990களில் இலங்கையின் வட பகுதிக்கான ரயில்வே சேவை நிறுத்தப்பட்டது. ஈழ விடுதலை இயக்கம் ஒன்றினால் (டெலோ) ரயிலில் வைக்கப்பட்ட வெடிகுண்டு காரணமாகவும், வட பகுதியில் இருந்த ரயில்வே தண்டவாளங்கள் அகற்றப்பட்டு, அவற்றை உபயோகித்து பதுங்கு குழிகள் அமைக்கப்பட்ட காரணத்தாலும், ரயில்வே பாதையே இல்லாது போனது.

யாழ்ப்பாணத்துக்கும், வவுனியாவுக்கும் இடைப்பட்ட வன்னி பகுதி விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காரணத்தால், ரயில்சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.

வன்னியில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த இளைய தலைமுறையைச் சேர்ந்த பலர், தமது வாழ்நாளில் ரயிலையே கண்களால் கண்டதில்லை என்ற நிலை இருந்தது.

2009-ம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு வந்தபின், இலங்கையின் வடபகுதிக்கு ரயில்வே பாதைகளை அமைக்கும் திட்டத்தை செய்துகொடுக்க இந்தியா முன்வந்தது.

வவுனியாவுக்கு அருகேயுள்ள ஓமந்தை என்ற இடத்தில்தான் முன்பு விடுதலைப் புலிகளின் சோதனைச் சாவடி இருந்தது. அதற்கு வடக்கே யாழ்ப்பாணம், காங்கேசன்துறை வரை ரயில்வே பாதை இருக்கவில்லை. ஓமந்தையில் இருந்து ரயில்வே பாதை அமைக்கப்படும் திட்டத்தில் தற்போது கிளிநொச்சி வரை ரயில்வே பாதை அமைக்கப்பட்டு விட்டன.

நேற்று கொழும்புவில் இருந்து புறப்பட்ட முதலாவது பயணிகள் ரயில், கிளிநொச்சி வரை வந்தது. இன்று முதல், கொழும்புவில் இருந்து கிளிநொச்சிக்கு தினமும் மூன்று ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அதற்கான ஆசனங்களை முன் கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என ரயில்வே அமைச்சின் போக்குவரத்து அதிகாரி ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்.

தினமும் காலை 5.45க்கு கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்படும் ‘யாழ்தேவி’ என்று அழைக்கப்படும் ரயில், பகல் 12.35 மணிக்கு கிளிநொச்சியை சென்றடையும். அதேபோன்று காலை 6.00 மணிக்கு மற்றுமொரு ‘யாழ்தேவி’ கிளிநொச்சி ரயில்வே நிலையத்தில் இருந்து புறப்படும். இந்த ரயில் பகல் 1.00 மணிக்கு கொழும்பு கோட்டையை சென்றடையும்.

இரண்டாவது ரயில், தினமும் காலை 6.50க்கு கொழும்பிலிருந்து புறப்படும் இன்டர்-சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.50க்கு கிளிநொச்சியை சென்றடையும். காலை 5.45 க்கு புறப்பட்ட யாழ். தேவியை அனுராதபுரம் ரயில்வே நிலையத்தில், இன்டர் சிட்டி ரயில் முந்திச் செல்லும்.

இதே இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் பிற்பகல் 2.10 மணிக்கு கிளிநொச்சியிலிருந்து மீண்டும் புறப்படும். இது இரவு 7.15 க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும். இரவு 8.15 க்கு புறப்படும் மெயில் ரயில் அதிகாலை 4.10 க்கு கிளிநொச்சியை சென்றடையும். இரவு 8.30க்கு கிளிநொச்சியிலிருந்து புறப்படும் மெயில் ரயில் அதிகாலை 4.35க்கு கொழும்பு கோட்டையை சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

train.yarl-devi

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடக்கின் வசந்தம் எமக்கும் வருமா? -கே.வாசு- (வாசகர் ஆக்கம்)
Next post கோட்டைக்கல்லாறு பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு