By 31 January 2015 0 Comments

பெண்களை நடுங்க வைக்கும் செயின் பறிப்பு கொள்ளையர்கள்: மது–மாதுவுக்கு மயங்கும் இளைய தலைமுறை!!

47eb5d51-94ec-4997-99f7-80dab9253542_S_secvpfதனியாக நடந்து சென்ற பெண்ணிடம் செயின்பறிப்பு…. வீட்டு முன்பு கோலம் போட்ட பெண்ணை தாக்கி நகை கொள்ளை… இதுபோன்ற செய்திகள் சென்னையில் இன்று அன்றாட நிகழ்வுகளாகி விட்டது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்திலோ அல்லது பல இடங்களிலோ செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைவரிசை காட்ட தவறுவதில்லை. விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களில் ஹெல்மெட் அணிந்தபடி சர்…… சர்ரென்று பறக்கும் வாலிபர்கள் கண் இமைக்கும் நேரத்தில் பெண்கள் கழுத்தில் கிடக்கும் செயினை பறித்துக் கொண்டு தப்பி விடுகிறார்கள்.

சில நிமிடங்களிலேயே அடகு கடையில் அது பணமாக மாறிவிடுகிறது. ஒரு தெருவில் செயினை பறித்து, பக்கத்து தெருவிலேயே அதனை அடகு வைத்து காசாக்கி விடலாம் என்கிற நிலை சென்னை முழுவதும் பரவிக்கிடக்கிறது. இதுவும் சென்னையில் செயின் பறிப்பு அதிகம் நடப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகள் எப்படிப்பட்டவர்கள்? இப்போதுள்ள காலகட்டத்தில் செயின் பறிப்பில் யார்–யாரெல்லாம் ஈடுபடுகிறார்கள்? இதனை தடுத்து நிறுத்த…. கட்டுப்படுத்த எந்த மாதிரியெல்லாம் போலீசார் வேலை செய்கிறார்கள் என்பது பற்றி விரிவாக பார்ப்போம்.

இதற்கு முன்னர் ஏதாவது ஒரு பகுதியில் செயின் பறிப்பு சம்பவமோ, பிக்பாக்கெட்டோ, வழிப்பறியோ, வீடு புகுந்து கொள்ளையடிக்கும் சம்பவங்களோ நடந்து விட்டால், சம்பவ இடத்தில் போய் விசாரணை செய்த அடுத்த நொடியே குற்றவாளி யார்? என்பதையும் போலீசார் முடிவு செய்து விடுவார்கள். சில மணி நேரங்களில் குற்றவாளியும் பிடிபட்டு விடுவான். அப்படியே சம்பந்தப்பட்ட குற்றவாளி தலைமறைவாகி இருந்தாலும், போலீஸ் தேடுவதை அறிந்து தானாகவே வந்து சரண் அடைந்து விடுவான். ஒருவேளை சரண் அடையாமல் இருந்தாலும் அவனை பிடிப்பதில் போலீசுக்கு பெரிய அளவில் வேலை இருக்காது.

எந்த ஒரு வழக்கிலுமே குற்றவாளி யார்? என்பதை கண்டுபிடிப்பது வரை மட்டுமே போலீசார் சிரமப்படுவார்கள். ஆளை அடையாளம் கண்டுபிடித்து விட்டால் போதும் எப்படியும் தூக்கிவிடுவார்கள்.

இதற்கு நீராவி முருகன் பிடிபட்டது போன்று பல உதாரணங்களை கூறலாம். அப்படி சிக்கிய குற்றவாளிகள் யார்–யார்? என்பதையும் அடுக்கிக் கொண்டே செல்லலாம்.

‘‘குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் யார்–யார்? என்பது போலீசுக்கு தெரியும்? அவர்கள் நினைத்தால் எப்படியும் பிடித்து விடுவார்கள்’’ என்று போலீசை பார்த்து எப்போதுமே சொல்வார்கள். இதனை உறுதிபடுத்தும் விதத்தில், ஏதாவது ஒரு இடத்தில் குற்றச்சம்பவம் நடந்து விட்டால், குறிப்பிட்ட ஏரியாவில், குறிப்பிட்ட நபரின் பெயரை சொல்லி, ‘‘அவன் வீட்ல இருக்கானான்னு பாருப்பா’’ என்று உயர் அதிகாரிகள் உத்தரவிடுவார்கள். அதன்படி சம்பந்தப்பட்ட நபர் சம்பவம் நடந்த போது வெளியில் சென்றிருந்தால் அவன்தான் குற்றவாளி என்று முடிவு செய்து கைது செய்து விசாரிப்பார்கள். அவனே உண்மை குற்றவாளியாகவும் இருப்பான்.

ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நல்லவன் யாரு… கெட்டவன் யாருன்னு கண்டு பிடிக்கவே முடியாத நிலையே நிலவுகிறது.

துணிச்சலாக செயினை அறுப்பவர்கள் நீராவி முருகனை போல டிப்–டாப் ஆக உடை அணிந்து கொண்டு ஐ.டி. நிறுவன ஊழியர்கள் போலவே வலம் வருகிறார்கள்.

தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து யார்? எந்த ரூபத்தில் வந்து செயினை பறிப்பார்கள் என்பதே தெரியவில்லை. நடந்து செல்லும் பெண்களை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியோ, ஸ்கூட்டியில் செல்லும் பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் சென்றபடியோ செயினை அறுப்பது, இன்று சர்வ சாதாரணமாகி விட்டது. எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன் கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் செயினை பறித்ததில் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

சமீபத்தில் புரசைவாக்கத்தில் பள்ளியில் படிக்கும் தனது மகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணை 2 பேர் கீழே தள்ளி விட்டு செயினை பறித்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக தாயும்–மகளும் உயிர் தப்பினர். இப்படி ஆபத்தான விளைவுகள் எதையும் உணராமல் செயினை அறுப்பதில் மட்டுமே செயின் பறிப்பு ஆசாமிகள் குறியாய் இருக்கிறார்கள். இது போன்ற செயல்களில் படிப்பறிவில்லாத வீட்டுக்கு உதவாத உதவாக்கரை வாலிபர்கள் ஈடுபட்டதெல்லாம் அந்தக்காலம்.

இன்று…. நினைத்துப் பார்க்கவே முடியாத அளவுக்கு நன்றாக படித்து பட்டம் பெற்ற பட்டதாரிகள், என்ஜினீயர்கள் போன்ற படித்த இளைஞர்களே, செயின் பறிப்பில் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

படித்த வாலிபர்கள் மது, மாது என சொகுசாக வாழ்வதற்கு ஆசைப்பட்டே செயின் பறிப்பு கொள்ளையர்களாக மாறுகிறார்கள் என்பது மிகவும் வேதனை அளிக்கும் விஷயமாகவே மாறி இருக்கிறது.

ஜெ.ஜெ.நகரில் பிடிபட்ட பரத் என்ற கொள்ளையன் என்ஜினீயரிங் முடித்து விட்டு, தனியார் கார் டீலர் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளான். ‘‘பெண்’’ ஆசை பிடித்தவனான இவன் அதற்காகவே ‘‘பொன்’’ நகைகள் மீது ஆசைப்பட்டுள்ளான்.

செயின் பறிப்பு சம்பவங்களை கட்டுப்படுத்த போலீசார் எவ்வளவுதான் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் பொதுமக்கள் மத்தியில் தங்களை பாதுகாத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதும் செயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்பதையும் மறுப்பதற்கில்லை. செயின்பறிப்பு குற்றவாளிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று போலீசாரும், அவ்வப் போது விழிப்புணர்வு பிரசாரங்களையும் துண்டு பிரசுரங்களையும் வினியோகித்து வருகிறார்கள். ‘‘உங்கள் கழுத்தில் கிடக்கும் செயின் வெளியே தெரியாத அளவுக்கு பார்த்துக் கொள்ளுங்கள்’’ என்பது இதில் முக்கியமானதாகும்.

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக பெண்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது. செயின் பறிப்பு சம்பவங்கள் கணிசமாக குறைய வேண்டும் என்றால் 2 விஷயங்கள் முழுமையாக சாத்தியமாக வேண்டும்.

ஒன்று… திருடனாய் பார்த்து திருந்த வேண்டும். இன்னொன்று… செயின் பறிப்பில் ஈடுபட்டால் பொதுமக்கள் கொடுக்கும் தர்ம அடியை தாங்க முடியாதுப்பா… என்கிற அச்சம் கொள்ளையர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும் என்று கூறுகிறார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

இதில் திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மையாகும்.

இப்படி மதுவுக்கும், மாதுவுக்கும் அடிமையாகி கிடக்கும் இளைய சமுதாயத்தினர் அதில் இருந்து மீள முடியாமல் யாருடைய தாலியை அறுத்தாவது தண்ணி அடிக்க வேண்டும் என்கிற நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தமிழ் சமூகத்திற்கு நிச்சயம் தலை குனிவுதான். எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்.Post a Comment

Protected by WP Anti Spam