ஓசூரில் பெண்ணை தாக்கி 10 பவுன் நகை பறித்த முகமூடி கொள்ளையர்கள்!!
ஓசூர் ஜனபர் தெருவை சேர்ந்தவர் சந்திரமோகன். இவரது மனைவி பார்கவி (28). இவர்கள் 2 பேரும் ஒரு தனியார் கம்பெனியில் ஊழியர்களாக வேலைப் பார்த்து வருகிறார்கள். இன்று காலை பார்கவி தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்றார்.
காலை 9 மணியளவில் அவர் தனது மகனுடன் அப்பாவு நகர் பகுதியில் நடந்து சென்று கொண்டு இருந்த போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிளில் முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் திடீரென பார்கவியை தாக்கி அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர்.
நகையை பறிகொடுத்த பார்கவி அலறினார். சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடிவந்தனர். ஆனால் அதற்குள் முகமூடி கொள்ளையர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். பின்னர் அவர் இது குறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். ஓசூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக நடந்து வரும் நகைபறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த காலை நேரத்திலேயே மிகவும் தைரியமாக வந்து நகை பறித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Average Rating