தர்மபுரியில் கை–கால்களை கட்டிப்போட்டு 85 வயது மூதாட்டியை கத்தியால் குத்தி நகைகள் பறிப்பு!!
தர்மபுரி அருகே உள்ள கொல்லஅள்ளி ஊர்க்காரன் கொட்டாய் பகுதியில் வசித்து வருபவர் சின்னம்மாள் (வயது 85). இவரது மகன் மாணிக்கம் தாய் வீட்டின் அருகே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று இரவு சின்னம்மாள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 2 மர்ம ஆசாமிகள் சின்னம்மாள் வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு சின்னம்மாள் திடுக்கிட்டு எழுந்தார்.
மர்ம ஆசாமிகளை பார்த்ததும் யார் நீங்கள்? என்ன வேணும்? என்று கேட்டார். அதற்குள் அந்த மர்ம ஆசாமிகள் சின்னம்மாளின் கை–கால்களை கட்டிப்போட்டனர். பின்னர் அவர் காதில் அணிந்திருந்த தோட்டை கழற்றினார்கள். இதை தடுக்க முயன்ற சின்னம்மாளை அவர்கள் தலையில் கத்தியால் குத்தினார்கள். இதில் சின்னம்மாள் மயங்கி விழுந்தார்.
உடனே மர்ம ஆசாமிகள் மற்றொரு காதில் அணிந்திருந்த தோட்டை கழற்ற முயன்றனர். ஆனால் அதை கழற்ற முடியவில்லை. இதனால் கத்தியால் காதை அறுத்து தோட்டை பறித்தனர். மேலும் அவர் கையில் அணிந்திருந்த வெள்ளிக் காப்பு மற்றும் காலில் அணிந்திருந்த தண்டையும் பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் பக்கத்தில் இருந்த மகன் மாணிக்கம் அங்கு வந்தார். தாய் ரத்தக்காயங்களுடன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சின்னம்மாளை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர்.
அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்ட 2 மர்ம ஆசாமிகள் யார்? என்று தெரியவில்லை. நகைக்காக இந்த சம்பவம் நடந்ததா? அல்லது முன்விரோதம் காரணமாக சின்னம்மாள் கத்தியால் குத்தப்பட்டாரா? என்பது மர்மமாக உள்ளது.
இதுதொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating