ஆத்தூர் அருகே காதலி கண் முன் தனக்குத்தானே கத்தியால் குத்திக்கொண்ட காதலன்!!
ஆத்தூர் அருகே உள்ள ஊனத்தூர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் சிவா. இவர் கடந்த ஆண்டு வடசென்னிமலை அரசினர் கல்லூரியில் எம்.ஏ. படித்து வந்தார்.
அப்போது காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. படிக்கும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது. இரண்டு பேரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த சிவா அதிர்ச்சி அடைந்தார். காதலியை தொடர்பு கொண்டு தன்னை திருமணம் செய்யும்படி கேட்டார். ஆனால் அந்த பெண்ணோ அதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில் இன்று காலை சிவா காதலி வீட்டுக்கு சென்றார்.
மீண்டும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறினார். ஆனால் திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சிவா தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனக்குத்தானே உடலில் குத்திக்கொண்டார். இதனால் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். இதை பார்த்த காதலி அதிர்ச்சி அடைந்தார். உடனே காதலியின் பெற்றோர் கல்லூரி விரிவுரையாளருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அவர் அங்கு விரைந்து வந்து சிவாவை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தலைவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating