தஞ்சை அருகே ஆசிரியைக்கு ஆபாச எஸ்எம்எஸ்: 3 ஆசிரியர்கள் சஸ்பெண்டு!!
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் கண்டியூர்சாலை முருகன் கோவில் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் திருமணமான ஆசிரியை செல்போனில் தேவையில்லாத குறுஞ்செய்தியும். அவ்வப்போது மிஸ்டுகாலும் வந்தது. சில சமயங்களில் செல்போனில் அழைத்து காது கூசும் வார்த்தைகளால் பேசியும் உள்ளனர்.
இந்த தொல்லை குறித்து பக்கத்து மாவட்டத்தில் உயர் பதவி வகிக்கும் தன் கணவரிடம் ஆசிரியை தெரிவித்தார். தொடர்ந்து குறுஞ்செய்தியும். மிஸ்டுகாலும் வரவே தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திடம் ஆசிரியை புகார் தெரிவித்தார்.
பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் இதுகுறித்து தஞ்சை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே.தமிழரசுவிடம் புகார் தெரிவித்தனர். உடனடியாக அவர் திருக்காட்டுப்பள்ளி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு தஞ்சை மாவட்டக் கல்வி அலுவலர் ரெங்கநாதன் மற்றும் அலுவலர்களை அனுப்பி விசாரணை நடத்த உத்திரவிட்டார்.
விசாரணையில் ஆசிரியைக்கு குறுஞ்செய்தி மற்றும் மிஸ்டு கால் கொடுத்து தொந்தரவு கொடுத்தது அதே பள்ளியில் பணிபுரியும் சமூக அறிவியல் ஆசிரியர் சுகுமார், தமிழ் ஆசிரியர் கார்த்திகேயன், ஆங்கில ஆசிரியர் பழனியய்யா ஆகியோர் என்பது தெரிய வந்தது. அவர்கள் மீது தஞ்சை முதன்மைக்கல்வி அலுவலர் வே.தமிழரசு துறைவாரி நடவடிக்கை மேற்கொண்டு மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மாணவர்களுக்கு நல் ஒழுக்க கல்வி போதிக்க வேண்டிய ஆசிரியர்களின் இந்த செயல் திருக்காட்டுப்பள்ளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.