விபத்தில் சிக்கி சிகிச்சை பெறும் மோகன்ராஜுலுவுக்கு இன்னும் சுய நினைவு திரும்பவில்லை..!!
திருச்சி அருகே விபத்தில் சிக்கிய பா.ஜ.க. பொதுச் செயலாளர் மோகன் ராஜுலு சுய நினைவு திரும்பாத நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பா.ஜனதா கட்சி யின் மாநில பொதுச்செயலாளராக இருப்பவர் மோகன் ராஜூலு. நேற்று முன்தினம் மாலை இவர் மதுரையில் இருந்து சென்னைக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அதில் மாநில துணைத்தலைவர் சுரேந்திரன் மற்றும் பாதுகாப்பு போலீசார் உடன் இருந்தனர். காரை டிரைவர் விவேக் ஓட்டி வந்தார்
அவர்களது கார் துவரங்குறிச்சியை அடுத்த மதுரை மாவட்ட எல்லையான புழுதிப்பட்டி பகுதியில் வந்தபோது, திடீரென பின்நோக்கி வந்த மணல் லாரி மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த மோகன்ராஜுலு, சுரேந்திரன் உள்ளிட்டோர் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மோகன் ராஜுலுவை நேரில் வந்து பார்த்த தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் கூறுகையில், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். மேலும் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், சி.பி. ராதாகிருஷ்ணன், முரளிதரராவ் ஆகியோரும் நேரில் பார்த்து அவர்களது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சுய நினைவு இன்னும் திரும்பவில்லை. மூளை பகுதியில் ரத்தம் உறைந்திருப்பதாகவும், அதனை அகற்ற போதிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிலையில் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் இன்று மதியம் தனியார் ஆஸ்பத்திரிக்கு வந்து மோகன்ராஜுலுவை பார்த்தார். பின்னர் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்களிடம் விபரங்களை கேட்டறிந்தார்.
Average Rating